Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ஆனந்த வாழ்வருளும் ஆதிநாயகப் பெருமாள்!

Go down

ஆனந்த வாழ்வருளும் ஆதிநாயகப் பெருமாள்! Empty ஆனந்த வாழ்வருளும் ஆதிநாயகப் பெருமாள்!

Post by oviya on Wed Dec 10, 2014 1:43 pm

புதிதாக ஓர் ஆலயத்தை நிர்மாணிப்பதை விட ஆலயம் ஒன்று சேதமடையாமல் பாதுகாப்பது சிறப்பான செயலாகும். அந்த வகையில் அந்நியர்களின் படையெடுப்பினால் சிதிலமடைந்து, பின்னாளிலும் கவனிப்பாரற்று போன பாற்கடல் வாசனின் ஆலயத்தை பெரும் முயற்சி எடுத்து திருச்சிக்கு அ ருகேயுள்ள கோபுரப்பட்டியில் நிர்மாணித்துள்ளனர். ஸ்ரீரங்கம் காவிரி-கொள்ளிடம் என்ற இருபகுதிகளுக்கு இடையில் இருப்பதுபோல் அந்த அழகிய கிராமம் பெருவளவன் ஆறு, கம்பலாறு என்ற இரு ஆறுகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது.

அதுவொரு ஆடி அமாவாசை தினம். விடியற்காலையில் அங்கிருந்த அனைத்து அந்தணர்களும் வரிசையாக அமர்ந்து தங்கள் சுவாசத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அனைவரின் நினைவுகளும் பின்னோக்கிச் சென்றன. பாட்டன், முப்பாட்டன் சொன்ன செவி வழி செய்தி மனக்கண் முன் விரிந்தது. கி.பி. 1323ம் ஆண்டில் படையெடுத்து வந்த அந்நியர் திருவரங்கனின் நகரத்தை கண்டு திகைத்துப் போயினர். கண்ணில் கண்ட அனைத்தையும் கொள்ளை யடித்தனர். அழகாக தென்பட்ட இடங்களையெல்லாம் தீயிட்டு எரியூட்டினர்.

ஆனால், படையெடுப்பை முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்த அந்தணர்கள், மூலவரின் கருவறை முன்னாலுள்ள வாயிலை அடைத்து கல் சுவரை எழுப்பி மூலவரின் மேனியை காத்தனர். பிள்ளை லோகாச்சார்யார் தலைமையில் ஒரு குழுவினர் உற்சவர் திருமேனியை சுமந்து கொண்டு தெற்கு நோக்கிச் சென்றனர். இரு பிரிவில் சேராத அந்தணர்கள் திருப்பாச்சி, பாச்சூர், கோவத்தக்குடி, திருவரங்கப்பட்டி, அழகிய மணவாளம் பகுதியில் பெருமாளின் நினைவுடன் குடியேறினர். அரங்கன் வாழும் மண்ணை விட்டு பிரியோம் என்று ஸ்ரீரங்கத்திலேயே தங்கிய 12 ஆயிரம் அந்தணர்களின் தலையை முகலாயர்கள் வெட்டி வீழ்த்தினார்கள்.

உயிரிழந்த அந்தணர்களின் மடிந்து வீழ்ந்த உடல்கள் கூட திரு அரங்கன் பாதம் நோக்கிதான் வீழ்ந்தன என்பது நெகிழ்ச்சியான உண்மை. ஆற்றங்கரையில் அமர்ந்து, கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த அந்தணர்களின் கண்களிலிருந்து நீர் கசிந்தது. கிராம மக்கள் அமைதியுடன் சுற்றி நின்றிருந்தனர். அந்தணர்கள் அனைவரும் ஒரு சேர சத்தமாக சங்கல்பம் செய்தனர். சங்கல்பத்தை சத்தமாக ஏன் கூறினார்கள்? சுற்றி நிற்கும் மக்களுக்கு பிதுர்களுக்கான காரியத்தின் அவசியத்தை உணர்த்ததான்.

‘‘எனது முன்னோர்களே! உங்களுக்கு என்னாலான பிதுர் காரியத்தை செய்கிறேன். நீங்கள் என்னுடன் இருந்தபோது உங்களுக்கான கடைமைகளை செய்ய நான் தவறியிருக்கலாம், பொறுத் தருளுங்கள். அதற்குப் பிராயசித்தமாக இந்த புனித நீரில் எள் கலந்து விடுகிறேன்; பெற்றுக் கொள்ளுங்கள். உணவை பிண்டமாக உருட்டி தர்ப்பையில் வைத்துள்ளேன், எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த பதார்த்தங்களை, பழங்களை அக்னியை வளர்த்து அதில் சமர்ப்பணம் செய்கிறேன், ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வழி வந்த நான் இதை உள்ளன்போடு செய்கிறேன்’’ என்று பொருள்தரும் மந்திரம் ஜபித்தனர். ‘‘இதை ஏற்றுக் கொண்டு, எஞ்சிய எங்கள் காலம் அமைதியுடன் கழிந்திட ஆசீர்வதியுங்கள்’’ என்று வேண்டிக்கொண்டனர்.

வழித் தோன்றல்கள் நற்புத்தியுடனும், நற்பண்புகளுடனும் திகழ வரம் கேட்டனர். கடனாக இல்லாமல் கடமையாக தர்ப்பணம் செய்தனர். அரங்கனை காத்திட உயிர் தியாகம் செய்த 12 ஆயிரம் பேர்களின் நினைவாக வழிவழியாக நன்றியறிதலை போதித்த முன்னோர்களின் நினைவாக அந்த 750 அந் தணர்களும் பித்ரு கிரியைகளை முறையாக செய்து முடித்தனர். நாடும், ஊரும், மக்களும் செழிப்பாக மகிழ்வுடன் வாழ சிறப்பு பூஜைகளை அங்கி ருந்த ஆதிநாயகப் பெருமாள் ஆலயத்தில் மேற்கொண்டனர். இவ்வாறு ஒரே நேரத்தில் 12 ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு திதி கொடுக்கப்பட்ட தலமே கோபுரப்பட்டி ஆகும்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இந்தக் கோயில், அண்மையில், இறை அன்பர்களின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கிறது. மூலவர் இரு ஆறுகளுக்கிடையே ஜலசயனத்து பெருமாளாக ஆதிநாயகப் பெருமாள் என்ற திருநாமத்தோடு ஐந்து அடுக்கு சுற்று கொண்ட ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார். நெல் அளவிடும் மரக்காலை தலையணையாகக் கொண்டு பாலசயனத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். பெரு மாளின் முகம் புன்னகையுடன் காட்சியளிக்கிறது. ‘எது நடந்ததோ அதுவும் நன்மைக்கே! எது நடக்க உள்ளதோ அதுவும் நன்மைக்கே’ என்ற பாவனையில் ஆதிநாயகப் பெருமாள் அருள் பாலிக்கிறார்.

தானே உகந்து எழுந்தருளிய தலம் சுயம்வர்த்தம் எனப்படும். புராணங்களின்படி ஏற்பட்ட தலம் புராண ஸ்தலம். பெருமாள் மீது ஏற்பட்ட பக்தி மேலீட்டால் இத்தலம் கட்டப்பட்டுள்ளதால் இது அபிமான தலம் ஆகும். ஆலயப் பிராகாரச் சுற்றில் ஆதிநாயகி தனிச் சந்நதியில் அருளுகின்றாள். ஆதிநாயகப் பெருமாளை விட்டு தனிச் சந்நதியில் இருப்பதாலேயோ என்னவோ கண்டிப்பு கலந்த கருணைப் பார்வையை பக்தர்கள் மீது வீசுகிறாள். ஆதிநாயகப் பெருமாளையும் ஆதிநாயகியையும், கை தொழுபவர்களுக்கு இல்லை ஓர் குறை என்றே கூறலாம். புத்திர தோஷம், பித்ரு தோஷம், திருமணத் தடை நீக்கம், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவிட இறைவனும் இறைவியும் வரமருளுகின்றனர்.

ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் மறைந்த முன்னோர் களுக்கான திதியை ஆலயத்தின் அருகி லுள்ள ஆற்றங் கரையில் செய்வது சிறப்பானதாகும். இங்கு பிதுர் காரியம் செய்தால் முன் னோர்கள் மிகவும் மகிழ்ந்து ஆசிய ளிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்தக் கிராமத்து மக்கள் இன்றளவும் ஆடி அமாவாசை தினத்தில் அரங்கப் பெருமாளை காத்திட உயிர்விட்ட வைஷ்ணவர்களுக்கும் தங்கள் முன்னோர்களுக்கும் திதி கொடுக்கின்றனர்.
கோயிலில் பார்த்தசாரதிப் பெருமாள், நம்மாழ்வார், தும்பிக்கையாழ்வார், அனுமன், கருடாழ்வார் ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். பன்னீர் புஷ்ப மரம், தல விருட்சம். மூலவரை நவதுவார சாளரத்தின் வழியே தரிசிக்கும் நடைமுறை இங்குள்ளது.

கி.பி 1342ல் ஹொய்சாள மன்னன் மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் ஒரு முறையும் கி.பி 1498ல் இலங்கை உலகன் என்கிற தோழப்பன் என்பவரால் ஒருமுறையும் திருப்பணிகள் நடந்த செய்தியை கல்வெட்டு கூறுகிறது. 512 ஆண்டுகளுக்கு பிறகு 2010ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்நியர் படையெடுப்பின் போது பாதுகாப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்ட ஸ்ரீரங்கம் உற்சவர் நம்பெருமாள் திருமேனி, ஆதிநாயகப் பெருமாள் சந்நதியில் வைக்கப்பட்டு வழிபாடு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

மிகப்பெரிய இன்னல்களில் இருந்து மீளவும், முன்னோர்களின் ஆசி பெறவும் ஆதிநாயகப் பெருமாள் அருளுகின்றார். திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர், உளுந்தகுடி, அழகிய மணவாளம் வழியாக கோபுரப்பட்டி வரலாம் அல்லது திருச்சி மண்ணச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்ஞீலிக்கு வந்து கோபுரப்பட்டி செல்லலாம். ஆலயத் தொடர்புக்கு: 9965402405

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum