Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


17-ம் தேதி மகாதீபம் : அண்ணாமலையாருக்கு அரோகரா...

Go down

17-ம் தேதி மகாதீபம் : அண்ணாமலையாருக்கு அரோகரா... Empty 17-ம் தேதி மகாதீபம் : அண்ணாமலையாருக்கு அரோகரா...

Post by oviya on Thu Dec 11, 2014 1:43 pm

நேரடியாகச் சென்றோ, தொலைக்காட்சி சாதனங்கள் மூலமாகவோ நம்மில் சிலர் திருவண்ணாமலை தீபக் காட்சியினை கண்குளிர தரிசித்திருப்போம். பலர் நேரடியாகவே திருவண்ணாமலை சென்று தீப தரிசனம் கண்டு வந்திருப்பீர்கள். அந்த மலரும் நினைவாக, இதோ திருவண்ணாமலை தீபக் காட்சிகள் சில:
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களையும் உலக மக்கள் உணர்வதற்காக இறைவன் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் ஐந்து. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர்(நிலம்), திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்(நீர்), திருக்காளத்தியில் காளத்தீஸ்வரர்(காற்று), சிதம்பரத்தில் சிதம்பரேஸ்வரர்(ஆகாயம்), திருவண்ணாமலையில் அண்ணாமலையார்(அக்னி).

இவற்றில், காஞ்சியில் பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, தில்லையில் தரிசிக்க முக்தி. ஆனால், ஜோதிவடிவான திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. எனவேதான் இதற்கு முக்திபுரி எனும் சிறப்பும் உண்டு. தலேச்சுரம், சிவலோகம், ஞானநகரம், சுத்தநகரம், கவுரிநகரம், தென்கயிலாயம், சோணாச்சலம், சோணகிரி, அண்ணாத்தூர், அண்ணாநாடு, அருணாத்திரி, அருணாச்சலம், அருணகிரி, திருவருணை, அருணை என்பதெல்லாம் திருவண்ணாமலையின் திருப்பெயர்கள்.

அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பு, உமையாளுக்கு இடபாகம் அருளிய அருளாளன், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு நலம் தரும் ஈசன், அண்ணாமலையாராக எழுந்தருளியிருக்கும் திருத்தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையின் அடியொட்டி, விண்ணுலக காட்சியாக பரந்து, விரிந்து, வானுயர்ந்த கோபுரங்கள் கொண்ட திருத்தலத்தில் அருளாட்சி நடத்துகிறார், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார். அக்னி வடிவான அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கும்போது கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தீபப்பெருவிழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விழாவின் நிறைவாக 10ம் நாளில் நடைபெறும் பரணி தீபமும் மகா தீபமும் தரிசிக்க முற்பிறவி பயன்வேண்டும். தீபத்திருவிழா அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். ‘ஏகன் அனேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், ஒரு மடக்கில் ஏற்றப்படும் தீபம் கொண்டு பஞ்சமுக தீபங்கள் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

முன்னதாக, அண்ணாமலையார் கோயில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் அலங்கார ரூபத்தில் எழுந்தருள்வார்கள். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், ஆனந்தத் தாண்டவம் காட்டுவார். அப்போது, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ எனும் முழக்கம் விண்ணதிரும். மிகச்சரியாக மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே அகண்ட தீபம் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து, மலை உச்சியில் மகா தீபம் பிரகாசிக்கும்.

பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவர் என எழுந்த சர்ச்சையின்போது, அடி, முடி காணாத விஸ்வரூப மூர்த்தியாக, ஜோதி வடிவாக சிவபெருமான் எழுந்தருளியது திருக்கார்த்திகை தினத்தன்று. எனவே, நான் எனும் அகந்தையை அழித்து, உள் முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியை காண்பதுதான் தீப தரிசனம். அதற்காகவே இறைவனின் திருவருளால் தீபத்திருவிழா நடைபெறுகிறது. மலையில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும். தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ தூய நெய், ஆயிரம் மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்தப்படுகின்றன.

பருவதராஜகுல வம்சத்தினர் தீபம் ஏற்றும் உரிமை பெற்றுள்ளனர். தீபம் எரியும் 11 நாட்களும் மலை மீது முகாமிட்டு திருப்பணியை நிறைவேற்றுகின்றனர். தீபம் ஏற்றப்படும் பாரம்பரியமான கொப்பரை காலப்போக்கில் சேதமடைந்ததால், தற்போதுள்ள தீபக் கொப்பரை கடந்த 1991ம் ஆண்டு, 92 கிலோ செம்பு, 110 கிலோ இரும்பு சட்டங்களால் உருவாக்கப்பட்டது. மகா தீப கொப்பரையின் உயரம் 5 அடி. அடிபாக விட்டம் 2 அடி. மேல்பாக விட்டம் 3.5 அடி. 11 நாட்களுக்குப் பிறகு, அந்தக் கொப்பரை கீழே கொண்டுவரப்பட்டு, அதில் ஒட்டியிருக்கும் தீப மையை வழித்து, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்குகிறார்கள்.

தி.மலையில் இன்று 63 நாயன்மார் உலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. 6ம் நாள் உற்சவம் இன்று காலை நடந்தது. மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்தனர். சமயக்குரவர் நால்வர் என போற்றப்படும் திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, திருஞானசம்மந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் இணைந்து தனி விமானத்தில் பவனி வந்தனர். தனித்தனி வாகனங்களில் 63 நாயன்மார்கள் மாட வீதியில் வலம் வந்தனர். நாயன்மார்கள் விமானங்கள் அனைத்தையும், பள்ளி மாணவர்கள் 400 பேர் சுமந்து சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இன்றிரவு வெள்ளி ரத உற்சவம் நடக்கிறது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

ரூ.3 லட்சத்தில் மின்விளக்கு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு மின்னொளி வசதியை கடந்த 2010ம் ஆண்டு தீபத் திருவிழாவின்போது நடிகர் ரஜினிகாந்த் ஏற்பாடு செய்தார். கடந்த ஆண்டு திருவிழாவின் போது நடிகர் சந்தானம், மின்விளக்கு அமைக்க ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஆண்டும் ராட்சத மின் விளக்கு அமைக்க அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். இதுகுறித்து நடிகர் மயில்சாமி அளித்த பேட்டி: அண்ணாமலையார் மீது உள்ள பக்தி காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக தீபத் திருவிழாவுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் சிலவற்றை நான் முன்னின்று ஏற்பாடு செய்து வருகிறேன். அதன்படி, வரும் 17ம் தேதி இரவு, அண்ணாமலையார் கோயிலின் அனைத்து கோபுரங்களுக்கும் ராட்சத மின் விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தும் அதிக சக்திவாய்ந்த இந்த விளக்குகளை அமைக்க ஒரு நாள் வாடகை ரூ.3 லட்சமாகிறது. அதற்கான பொறுப்பை இந்த ஆண்டும் நடிகர் சந்தானம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum