Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


காவிரி என்று உச்சரித்தாலே பெரும் புண்ணியம்!

Go down

காவிரி என்று உச்சரித்தாலே பெரும் புண்ணியம்! Empty காவிரி என்று உச்சரித்தாலே பெரும் புண்ணியம்!

Post by oviya Thu Dec 11, 2014 1:56 pm

நரகசதுர்தசி என்கிற தீபாவளி திருநாள் புண்ணியமும் கொண்டாட்டமுமான தினம் என்பதை அனைவரும் அறிவோம். அன்று சகல தீர்த்தங்களிலும் கங்கை கலக்கிறாள் என்பது பிரசித்தமான விஷயமாகும். இந்த நரகசதுர்தசி எனும் திதியோடு சேர்ந்து வரும் தீபாவளியன்று கங்கையில் நீராடுவதை விசேஷமாகச் சொல்வார்கள். ஆனால், தீபாவளியன்று காவிரியில் நீராடுவதும் மிகப் பெரிய பலன்களைத் தரும் என்பதை பிரம்ம கைவர்த்த புராணத்திலுள்ள துலாக் காவிரி மகாத்மியம் மிக விரிவாக விளக்குகிறது.

சுமந்து எனும் முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தார் தேவசர்மா என்ற அரசன். ‘‘சத்குருவே எத்தனையோ தீர்த்தங்களை தரிசித்திருக்கிறேன். ஆனாலும், இந்த காவிரியின் மகிமையே தனிதான். அவளின் கரையோரம் எத்தனை ஆலயங்கள், ஆசிரமங்கள், பாகவதர்களின் அவதாரங்கள்... மெய்சிலிர்க்கிறது. காவிரியின் மகிமையையும், அதில் எப்போது நீராடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரும் என்பதை விளக்கு வீர்களா’’ என்று முனிவரிடம் நிறுத்தினார். ‘‘அரசனே, காவிரியின் மகிமையை கேட்பதே சகல சௌபாக்கியங்களையும் அருளவல்லது.

புத்திரர்களையும், பௌத்திரர்களையும், நல்ல சுற்றம் சூழ வாழவைக்கும். ஏனெனில், காவிரி சகல ஜனங்களுக்கும் இதம் செய்யவே விரும்புபவள். பதினான்கு உலகங்களிலுள்ள அனேக கோடி தீர்த்தங்களோடு சேர்ந்து காவிரி பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். பூமியிலும், மற்ற உலகங்களிலும் அனேக தீர்த்தங்கள் உள்ளன. அவையெல்லாம் காவிரியின் கலைக்கு அதாவது 16ல் ஒரு பாகத்திற்குக் கூட சமமாகாது. பதினாராயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ளவர்கள் ‘காவிரி’ என்று உச்சரித்தாலும் போதும், அவன் காவிரியில் ஸ்நானம் செய்த புண்ணியத்தையும் பலத்தையும் இருந்த இடத்திலேயே பெற்று விடுகிறான். சகல பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

காவிரியில் நீராடுவது என்பது அத்தனை சுலபத்தில் யாருக்கும் வாய்க்காது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், பொதுவாகவே சாதுக்களுக்கு காவிரி சுலபமானவள்; அதனால் எளிதில் அவர்களை நீராட வைத்து விடுகிறாள். அதே சமயம் ‘ஐயோ, நிறைய பாவம் செய்து விட்டேனே, பாவி’ என்று தன்னை எண்ணிக்கொள்பவன்கூட இதில் நீராடினால் தேவலோகத்தை அடைகிறான். மிக முக்கியமாக இன்னொரு விஷயம் உண்டு. நரக பயம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்களே....’’ ‘‘மனிதர்கள்தானே! ஏன் ‘நரக பயம் கொண்ட’ என்று கூறுகிறீர்கள்’’ தேவசர்மா குழப்பத்தோடு கேட்டார். ‘‘நர என்றாலே மனிதன், மனித உடல் என்று பெயர்.

நர உடலை எடுத்து பாவங்களை செய்து, சதா நேரமும் பயத்தோடும் ஆசைகளோடும் அலையும் மனிதர்கள் வேறொரு அகமான நர-அகத்திற்கு செல்வார்கள் என்பதைத்தான் நரக பயம் கொண்ட மனிதர்கள் என்று கூறுகிறேன். இந்த மனிதர்கள் ஆச்வயுஜ மாதம் என்கிற ஐப்பசி மாதத்தில் (துலா மாதம்) நரகசதுர்தசியான தீபாவளி தினத்தன்று காவிரியில் நீராடினால் அவர்களுக்குக் கிட்டும் புண்ணியத்திற்கு அளவேயில்லை. அப்படி நீராடியவனை கண்டு நரக லோகமே இவனை எப்படி நாம் எடுத்துக் கொள்வது என்று யோசிக்கிறது, தயங்குகிறது.

அதாவது இந்த நீராடலால், பாவங்கள் செய்யத் தூண்டும் இந்திரியங்கள் பலமிழக் கின்றன என்று பொருள். நரகசதுர்தசியான தீபாவளியன்று அருணோதயம் முதல் ஸங்கவம் வரையிலான உதயாதி ஆறு நாழிகை வரையிலும் அறுபத்து ஆறு கோடி தீர்த்தங்களும் காவிரியில் சங்கம மாகியிருக்கும். அன்று காவிரியில் ஸ்நானம் செய்து, கூடவே காவிரி மகாத்மியத்தை ஒரு மனதோடு ஆனந்த மாக கேட்பவனின் பாவ வினைகளெல்லாம் நசித்துப் போகின்றன.’’ ‘‘வேறென்ன செய்ய வேண்டும் குருநாதா?’’ ‘‘வேதங்கள் எப்போதுமே தானமளிப்பதைப் பற்றி உயர்வாகப் பேசுகின்றன. தானம் கொடுப்பவனின் தியாக உணர்வு மேலோங்குவதால் அவனுடைய அகங்காரம் நசுக்கப்படுகிறது.

அதனால், அன்று வேதமறிந்த அந்தணர்களுக்கு நல்லெண்ணெயை தானமாகக் கொடுத்தால் அந்த எண்ணெயிலுள்ள துளிகளின் அளவிற்கு சமானமான வருஷங்கள் கயிலாயத்தில் அவன் சுகமாக இருப்பான். தம்மால் இயன்றளவு பொருட்களை தானமாகச் செய்பவனுக்கு மோட்சத்தில் இச்சை பிறந்து ஞானவானாக வலம் வருவான்.’’‘‘அப்படி யாரேனும் தானம் செய்திருக்கிறார்களா?’’ ‘‘இருக்கிறார்கள். முன்பொரு காலத்தில் செல்வ மிகுந்த தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களில் பெண்மணிக்கு மிகக் கடுமையான தலைவலி நீடித்து இருந்து வந்தது. விடிந்தால் தீபாவளி. என்ன செய்வதென்று தெரியாமல் வைத்தியனை அழைத்தாள். வைத்தியனும் வந்தான்.

‘வெகு நாட்களாக எண்ணெய் தேய்த்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறீர்கள். இப்பொழுதே எண்ணெய் தேய்த்து நீராடுங்கள், தானாகச் சரியாகும்,’’ என்று சொன்னான் வைத்தியன். அந்தப் பெண்மணியும் துலா மாத கிருஷ்ண பட்ச நரக சதுர்தசியன்று நடுநிசிக்கும் விடியலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் எண்ணெய் தேய்த்து நீராடினாள். சட்டென்று தலைவலி நீங்கியது. உடனே வைத்தியனுக்கு அரிசி, பணம், தாம்பூலம் கொடுத்து மகிழ்ந்தாள். அவ்வாறு எண்ணெய் தேய்த்து நீராடிய மகிமையாலேயே அவள் எந்த தியானமும் மேற்கொள்ளாமல், ஞானம் பெற்று சர்வேஸ்வரனோடு கலந்தாள். கேட்டது தலை வலிக்கான தீர்வு. கிடைத்ததோ சம்சார நிவர்த்திக்கான மோட்சம்!

அன்று மட்டும் சர்வேஸ்வரன் எந்தத் தகுதியையும் பார்க்காமல் அனைவரையும் சேர்த்துக் கொள்கிறான். இப்படியாவது தன்னை வந்து சேரட்டுமே என்று நினைக்கிறான் போலிருக்கிறது! அதாவது நரகபீடையெனும் இன்னொரு பிறவி எடுத்தலையே இந்த நரகசதுர்தசியன்று செய்யும் காவிரி ஸ்நானம் தடுத்து விடுகிறது. நரகசதுர்தசியின் இன்னொரு மகிமையையும் சொல்கிறேன். ஒரு வணிகன் நரக சதுர்தசியன்று, பொழுது விடிவதற்கு முன்னாலேயே எண்ணெய்க் குடத்தை தலையில் வைத்து விற்றுக் கொண்டிருந்தான். அந்தக் குடத்தின் அடியில் சிறிய துவாரம் இருந்தது. அதிலிருந்து சொட்டுச் சொட்டாக எண்ணெய் கசிந்து அவனின் தலைவழியாக உடல் முழுவதும் பரவியது.

வியாபாரத்தை முடித்து விட்டு ஸ்நானம் செய்தான். ஏதோ தோன்றவே, ஒரு வேதியனுக்கு அரிசியோடு சேர்த்து பணத்தை தானமாகக் கொடுத்தான். அந்த புண்ணிய பலனே அவனை சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றது. இதை ரிஷிகள் எல்லோரும் நேரடியாக தரிசித்தார்கள். எந்த பலனையும் எதிர்பார்க்காமல், யதேச்சையாக செய்தால்கூட அந்த நாளின் மகத்துவத்தால் மோட்சத்திற்கு அந்த ஜீவன் தானாகச் செல்லும்’’ ‘‘சத்குருவே, பகவான் ஸ்ரீகிருஷ்ணர்கூட இந்த ஐப்பசி நரகசதுர்தசியன்று காவிரியில் நீராடினாராமே?’’

‘‘ஆமாம். நரகாசுரனை ஸ்ரீலட்சுமி தேவியை முன்னிருத்தி வதம் செய்தபின் வீரஹத்தி என்கிற பாவம் பெண்ணுருவம் கொண்டு ஸ்ரீகிருஷ்ணரைத் தொடர்ந்தது. கயிலைக்கு சென்று ஈசனை நமஸ்கரித்தார். இந்த வீரஹத்தியை தொலைக்க என்ன செய்ய வேண்டுமென்று வினவினார். கயிலையிலிருந்த ஈசன் நேரடியாக காவிரியை காண்பித்து, இந்த துலா மாதமான ஐப்பசி மாதத்தில் கிருஷ்ணபட்ச சதுர்தசியில் நீராடினால் தானாக அந்த பாவம் கரைந்துபோகும் என்றார். இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணருக்கு தெரியாதா என்று கேட்கலாம். ஆனால், பரமசிவனே காவிரியின் கீர்த்தியையும் பெருமையையும் மகிமையையும் சொல்லட்டுமே என்பதற்காகவே ஸ்ரீ கிருஷ்ணர் அவ்வாறு கேட்டார்.

ஒருவருக்கு இருவராக தெய்வங்கள் கூறும்போதுதான் மானிடர்களுக்கும் அந்த விஷயத்தில் நம்பிக்கை பெருகும் என்பதற்காகவே புராணங்களில் தெய்வமே, தெய்வத்திடம்போய் கேட்பதுபோல் அமைந்திருக்கிறது. கேட்டது மட்டுமல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணரும் காவிரியில் அந்த தினத்தில் வந்து ஸ்நானம் செய்தார். அதோடு மட்டுமல்லாது யதாசக்தி என்பார்களே அதுபோல ஒவ்வொருவராலும் அன்றைய தினம் என்னென்ன முடியுமோ அதை தானமாகச் செய்தால் மேலும், மேலும் நன்மையை அதிகரிக்கச் செய்ய முடியும்’’ என்று சுமந்து முனிவர் தேவசர்மாவிற்கு கூறி முடித்தார்.

சுமந்து முனிவர் கூறிய காவிரி மற்றும் நரகசதுர்தசியன்று காவிரியின் நீராடலை குறித்து கேட்டு தேவசர்மா ஆனந்தமடைந்தான். அவரை நமஸ்கரித்து விடைபெற்று நேராக காவிரியை நோக்கி பயணமானான். நரகசதுர்தசியின் நடுநிசியில் காவிரி மகாத்மியத்தை மனதால் நினைத்து நீருக்குள் மூழ்கினான். சகல தீர்த்தங்களும் காவிரியோடு சேர்ந்திருப்பதை உடலாலும், உள்ளத்தாலும் உணர்ந்தான்; பெரும் பேறு கொண்டான்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum