Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


குதூகல வாழ்வளிக்கும் குபேர தலங்கள்

Go down

குதூகல வாழ்வளிக்கும் குபேர தலங்கள் Empty குதூகல வாழ்வளிக்கும் குபேர தலங்கள்

Post by oviya on Thu Dec 11, 2014 2:03 pm

வற்றாத செல்வ வரம் தரும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. தீபாவளி என்றவுடன் ஏதோ ஒருவிதத்தில் பணம் காசு வந்து விடுகிறது என்பது நம் வாழ்வியல் நடைமுறை உண்மை. ஏழை எளியோர் கூட விமரிசையாக கொண்டாட வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆதிநாளி லிருந்தே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஒரு சமயம் தன்னுடைய சகல நிதிகளையும் இழந்து குபேரன் கஷ்டப்பட்டபோது ஈசனிடம் வேண்டி நின்றான். ஈசன் அவனுக்காக இரங்கி சகல செல்வ வளங்களையும் மீண்டும் அளித்த தினமே தீபாவளியாகும். லட்சுமி கடாட்சத்தையும் குபேரனுடைய சம்பத்தையும் சேர்த்தே அளிப்பது தீபாவளிப் பண்டிகையாகும்.

இந்த நாளில் மகாலட்சுமி அருளும் ஆலயத்திற்கும், குபேரன் பூஜித்த, வழிபட்ட ஆலயங்களுக்கு சென்று வருதலுமே சகல செல்வ வளங்களையும் பெருக்கித் தரும். குபேரன் வழிபட்ட ஆலயங்களுக்கு செல்லும்போது வறுமைக் கொடுமை ஒழிந்து போகும். அது எப்படி? சகல தேவர்களுக்கும் மனிதர்களைப்போல கஷ்ட நஷ்டங்கள் உண்டு. அவர்களுக்கும் சுகம், துக்கம், வேதனை எல்லாமும் உண்டு. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெறும் சண்டையே இதற்கு சாட்சி. அதுபோல குபேரன் வறுமையில் தள்ளப்படுவதற்கும், அதிலிருந்து மீண்டு வருவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் மிகத் தீவிரமாக ஈசனை நோக்கியோ அல்லது மகாவிஷ்ணுவை குறித்தோ தவமியற்றினான்.

அப்படி தவமியற்றி, அவனால் பூஜிக்கப்பட்ட லிங்கங்களோ, மூர்த்தங்களோ பின்னாளில் கோயிலாக மாறியிருக்கின்றன. குபேரன் எந்த நோக்கத்திற்காக தன்னுடைய தவசக்தியை வளர்த்தானோ அந்த சக்தியும் அதே நோக்கத்தோடேயே அந்தந்தக் கோயில்களில் செயல்படும். குபேரனைப் பார்த்த இறைவனின் திருக்கண்கள் நம்மையும் பார்க்கும். குபேரனுக்கு அருளப்பட்டது எந்த யுகத்திலும் மாறவே மாறாது. அந்த அருள் வளையத்திற்குள் நிற்கும்போது நமக்குள்ளும் அது பாயும். நமக்குள்ளும் அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான தூண்டுதல் உருவாகும்.

அது லௌகீகமானாலும் சரி, மோட்சமானாலும் சரி. அந்த கோயிலில் நிலவும் சாந்நித்தியத்தின் குறிக்கோள் குபேர சம்பத்தை தருவதேயாகும். ‘நான் என்ன வேண்டிக் கொண்டேனோ, அதை இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கும் கொடு’ என்றுதான் குபேரன் வேண்டிக் கொள்கிறான். எனவே, அவனால் பூஜிக்கப்பட்ட தலங்களுக்கு சென்று வழிபடுவோம். குபேர வளத்தையும் பெறுவோம்.

செல்லூர்

மதுரையிலுள்ள வைகையாற்றின் வடபுறத்தில் அமைந்துள்ளது திருவாப்புடையார் கோயில். திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற தலம். மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலாகவும் திகழ்கிறது. சகல செல்வத்திற்கும் அதிபதியாக வேண்டுமென புண்ணிய சேனன் என்பவன் விரும்பினான். அகத்தியரின் அறிவுரைப்படி திருவாப்புடையார் எனும் இத்தல ஈசனை நோக்கி தவம் புரிந்தான். அவனுடைய தவம் பலித்தது. அதேசமயம் அவனுக்குள் அகங்காரமும் பெருகியது. அதனால் கண்மண் தெரியாமல் தவறுகளை செய்த அவனுடைய ஒரு கண்ணை ஈசன் பறித்தார். புண்ணிய சேனன் வருந்தினான். மீண்டும் தவம் செய்து தொழுதான். ஈசனும் அவனை மன்னித்து இன்றிலிருந்து உன் பெயர் குபேரன். நீயே சகல செல்வங்களுக்கும் அதிபதி என்றார். இதுவே குபேரன் அவதரித்த தலமாகும். திருவாப் புடையானை தரிசித்தால் நம் அகங்காரமெல்லாம் தூளாக, செல்வ வளம் பெறுவோம்.

திருக்கோளூர்

குபேரன் ஒன்பது வகையான நவநிதிகளுக்கும், எண்ணிலடங்கா பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி தனது அளகாபுரியை ஆண்டான். அவன் சிவபக்தியில் சிறந்தவனாக இருந்தாலும் தான் செல்வப் பெருவேந்தன் என்று கர்வமும் கொண்டிருந்தான். அவன் ஒருமுறை கயிலாயத் திற்கு வந்தான். ஈசன் உமையோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததை கண்டான். மனவிகாரம் கொண்டு உலகாளும் அன்னையென்று பாராமல், அவளது அழகை ரசித்தான். ஈசனும், உமையும் அவன் மனதறிந்தனர். இவனும் சுதாரித்து, வெட்கித் தலை வணங்கினான். ஆனாலும், அவன் கர்வத்தை ஒடுக்கவும், சித்தத்தை சுத்தனாக்கவும் சினம் கொண்ட உமையன்னை சித்தம் கொண்டாள்.

அவன் உருவம் விகாரமடைந்து, அவனிடமுள்ள நவநிதிகளும் அவனை விட்டகல வேண்டுமென்று சபித்தாள். குபேரனை விட்டு நவநிதிகளும் அகன்றன. தம்மை வைத்துக்கொள்வார் யாருமின்றி நவநிதிகள் பொருநை நதியில் நீராடி, பெருமாளை வேண்டி பிரார்த்தித்தன. திருமால் நவநிதிகளையும் தன் அருகே வைத்து பாதுகாப்பளித்து அதன் மீது சயனம் கொண்டார். அதனாலேயே அவருக்கு வைத்தமாநிதிப் பெருமாள் எனும் திருநாமம் உண்டாயிற்று. வேறொருபுறம் குபேரன் தன் தவறுணர்ந்து பரமசிவனின் பாதத்தில் வீழ்ந்தான். பார்வதியிடம் மன்னிப்பு கோரினான்.

‘நான் உன்னை சபித்தவாறே உன் மேனியின் விகாரம் மறையாது. ஒரு கண்ணும் தெரியாது. ஆனால், நீ இழந்த பெருஞ் செல்வங்களின் சாரமான நவநிதிகளும் தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள தர்ம பிசுன க்ஷேத்ரத்திலுள்ள (இன்றைய திருக்கோளூர்) திருமாலிடம் தஞ்சமடைந்துள்ளன’ என்றார் ஈசன். திருக்கோளூர் வந்த குபேரன் பெருமாளைக் குறித்து பெருந்தவம் புரிந்து மன்றாடினான். திருமால் மனமிரங்கி குபேரனை மன்னித்து நவநிதிகளைத் தந்தருளினார். இன்றும் வறுமையில் வாழ்பவர்களும், செல்வம் இழந்தவர்களும், இன்னும் செல்வங்கள் பெருகவும் வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி சகல சம்பத்துமிக்க வாழ்க்கையைப் பெறுகின்றனர்.

இங்குள்ள தீர்த்தமே குபேர தீர்த்தம்தான். நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் இதுவொன்றாகும். இத்தலம் நெல்லை மாவட்டம் தென்திருப்பேரையிலிருந்து ஆழ்வார் திருநகரி போகும் வழியில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 8 கி.மீ. நவ திருப்பதிகளில் ஒன்று திருக்கோளூர்.

தஞ்சாவூர்

எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் குபேரன் இலங்கையில் ஆட்சி புரிந்துகொண்டிருந்தான். ராவணனால் தன் நாடு, நகரம், புஷ்பக விமானம் எல்லாம் இழந்து வடதிசை நோக்கி வந்து சசிவனம் என்னும் வன்னிக்காட்டுக்கு வந்தான். சுயம்புவாக தோன்றிய அமலேஸ்வரர் என்ற பெயருடன் திகழ்ந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கி, தொண்டு செய்து வந்தான். அவன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், உமாதேவியுடன் மேற்கு நோக்கி காட்சி தந்தார். சர்வ லோகங்களும் குபேரனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளும் தந்து அருள்புரிந்தார். இதனால் இந்தத் தலம் ஸித்தி தரும் தலம் என்றும¢ அழைக்கப்படுகிறது.

ஈசனிடமிருந்து வரங்கள் பெற்ற குபேரன், தன் சக்தி வலிமையால் அழகாபுரி என்ற நகரை உருவாக்கினான். இந்தத் தலத்தில் வழிபடும் அனைவருக்கும் வேண்டும் வரங்கள் தந்து அருளுமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டான். இக்கோயிலில் குபேரன், குபேர மகாலட்சுமி ஆகியோர் தனிச் சந்நதிகளில் அருளுகின்றனர். தீபாவளியன்று இங்கு நடைபெறும் மஹா குபேர ஹோமம் மிகவும் பிரசித்தி பெற்றது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தஞ்சபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

சென்னை - ரத்னமங்கலம்

தீபாவளிப் பண்டிகையின்போது வட இந்தியாவில் பலர் ஸ்ரீலட்சுமியுடன் குபேரனையும் சேர்த்தே பூஜிப்பார்கள். குபேரனை மூலவராகக் கொண்ட ஆலயங்கள் சில உள்ளன. அவற்றில் சென்னை - ரத்னமங்கலம் கோயில் குறிப்பிடத் தக்கது. இங்கு லட்சுமி குபேரனுக்கு தீபாவளியின் போது சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் கோயிலில் எங்கு திரும்பினாலும் ரூபாய் நோட்டினால் மாலைகள் தோரணங்கள் என்று அலங்கரிக்கப்பட்டிருக்கும். தன் சந்நதிக்குள் குபேரன் தங்க உடைகளில் ஜொலிக்கிறார். குபேரனின் மனைவியும் அவரோடு அமர்ந்திருக்கிறாள். சென்னை வண்டலூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இந்த லட்சுமி குபேரர் கோயில் அமைந்துள்ளது.

செட்டிகுளம்

செட்டிகுளம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடம்ப மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்தது. சோழனும், பாண்டியனும் சேர்ந்து கட்டிய திருக்கோயில் இது. இறைவன் ஏகாம் பரேஸ்வரர் எனவும், இறைவி காமாட்சியாகவும் அருள் பாலிக்கின்றனர். தொன்மை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒரு சிறப்பு அம்சம் உண்டு. பொதுவாக ஆலயங்களில் குபேரனின் உருவம் சிற்பமாகவோ, சுதை வடிவிலோ, கல் திருமேனியாகவோ காணப்படும். ஆனால், இங்கே, கல் தூண்கள், தேவகோட்டம், கோபுர முகப்பு என மொத்தம் 12 இடங்களில் குபேரன் சிற்ப வடிவில் காட்சி தருகிறார்.

அதாவது, மேஷம் முதலான 12 ராசிகளுக்கும் இந்த குபேரர்கள் அருள் வழங்குகிறார்கள். ஒவ்வொரு ராசிக்காரரும், அந்தந்த ராசி குபேரனை வணங்கி, தம் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு பெறுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் குறிப்பிட்ட குபேரனுக்கு 'குபேர ஹோமம்' நடத்துகின்றனர். இந்த 12 குபேரர்கள் தவிர, மகா குபேரனின் சிற்பமொன்றும் ஆலய கோபுரத்தின் உட்புறம் வடக்குத் திசையில் உள்ளது. திருச்சி, துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கீவளூர்

சந்திரகுப்தன் எனும் வைசியன் தன்னிடமிருந்த சகல செல்வங்களையும் இழந்தான். மனம் நொந்து அலைந்த அவன், ஈசன், கேடிலியப்பராக அருளும் கீவளூர் தலத்தை அடைந்தான். திருக்கோயிலுக்குள் புகுந்து நந்தியம்பெருமானை வணங்கினான். கோயிலை மும்முறை வலம் வந்தான். ஈசன் கருணையுடன் இத்தலத்திலேயே நித்திய வாசம் புரியும் குபேரனுக்கு சந்திரகுப்தனை அடையாளம் காட்டினார். சந்திரகுப்தன் தனிச் சந்நதியில் அருளும் குபேரனை வணங்கி பெருஞ் செல்வம் பெற்றான். இத்தலம் நாகப்பட்டினம் - திருவாரூர் பாதையில் அமைந்துள்ளது.

கள்ளிடைக்குறிச்சி

இக்கோயிலின் கருவறையில் வராஹரின் வலப்புறத்தே பூமா தேவியார் அமர்ந்திருக்கும் கோலம் வேறெங்கும் காணக் கிடைக்காத பேரழகு கொண்டது. இத்தல பெருமாள் இங்கு எழுந்தருளும்போது குபேரன்தான் முதலில் வந்து கைகூப்பி அவரைத் தொழுதான். விஷ்ணு தர்மன் என்னும் அப்பகுதியை ஆண்ட அரசனை குபேரன் கூப்பிட்டு ‘இந்த புண்ணிய தலத்தில் யாகசொரூபியான வராஹருக்கு ஓர் கோயில் கட்ட வேண்டும்’ என்று பணித்தார். மேலும், இப்பெருமாளை தரிசிப்போருக்கு எக்காலத்தும் வற்றாத செல்வம் அருளுமாறு தான் எம்பெருமானிடம் கேட்டுக் கொள்வதாய் கைப்பிடித்து உறுதியும் அளித்தார்.

உடனே, குபேரன் முன் நிற்க, அந்த அரசன் ஏராளமான பொருட் செலவில் கோயில் அமைத்தான். குபேரன் அந்த மன்னனுக்கு அளித்த வாக்கு இன்றுவரை பிசகாது உள்ளது. இவ்வூரில் உள்ளோரும், இப்பெருமாளை தரிசிப்போரும் சகல செல்வச் செழிப்போடு திகழ்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருத்தேவூர்

ராவணன் குபேரனோடு போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்கிற அமிர்த கலசங்களை எடுத்துச் சென்றான். இதனால் குபேரன் தன்னுடைய குபேர ஸ்தானத்தை இழந்தான். இத்தலத்தில் அருளும் தேவபுரீஸ்வரரை குபேரன் செந்தாமரை புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டான். ஈசனின் அருளால் ராவணனிடமிருந்து குபேர கலசங்களை திரும்ப அடைந்து மீண்டும் குபேர பட்டம் பெற்றான். பெரும் பணக்காரர்களாக இருந்து வறுமையில் தள்ளப்பட்டோர்கள் இத்தல நாயகரான தேவபுரீஸ்ரரையும், அம்மையான மதுரபாஷினியையும் வழிபட செல்வச் செழிப்போடு வாழ்வர் என்பது உறுதி. திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையிலுள்ள கீவளூர் எனும் தலத்திற்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.

திருவண்ணாமலை

அருணாசல மலையை கிரிவலமாக வரும்போது குபேர லிங்கத்தை தரிசிக்கலாம். இங்கு இது ஏழாவது லிங்கமாக விளங்குகிறது. இது குபேரனால் வழிபடப்பட்ட லிங்கமாகும். எனவே, பொருளாதாரத்தில் குன்றி இருப்போர் இந்த லிங்கத்தை வழிபட செல்வ வளம் பெருகும்.

திருச்சி- திருவானைக்காவல்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண் டேஸ்வரி திருக்கோயிலின் கிழக்கு கோபுர வாயிலில் நுழைந்ததும் எதிரே குபேர லிங்க கோயிலை காணலாம். இந்த லிங்கம் மகாலட்சு மியிடமிருந்து குபேரன் தவமிருந்து பெற்றதாக புராணங்கள் பகர்கின்றன. தன்னிடமிருக்கும் சங்கநிதி, பதுமநிதிகள் நீங்காதிருக்க ஈசனை நோக்கி குபேரன் தவமியற்றினான். ஈசனோ, ‘உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருப்பது என்பது மகாலட்சுமியின் அருளால்தான் உள்ளது’ என்று சொல்லி மறைந்தார். குபேரன் மகா லட்சுமியை நோக்கி தவமியற்றி திருமகளின் திருக்கரத்தால் சுயம்பு லிங்கத்தை பெற்று இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இன்றும் குபேர லிங்கத்தினை சுக்கிர ஹோரையில் அர்ச்சித்து வெண் பட்டாடை சமர்ப்பித்து வழிபட, வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

எஸ்.புதூர்

ஒரு சமயம் குபேரன் நிலை தடுமாறி தவறு செய்தான். இதனாலேயே குபேரத்தன்மை அவனை விட்டு விலகியது. அஷ்ட ஐஸ்வரியங்களும் அவனை விட்டு நீங்கின. தன் தவறை உணர்ந்த குபேரன் சப்த ரிஷிகளிடமும் சென்று ஆலோசனை கேட்டான். அவர்கள் திருத்தண்டிகை (தற்போதைய எஸ். புதூர்) தலத்தில் அருளும் சனத்குமாரேஸ்வரரை வழிபடும்படி கூறினர். குபேரனும் இத்தலத்திலுள்ள சோம தீர்த்தத்தில் நீராடி சனத்கு மாரேஸ்வரரையும், சௌந்தரிய நாயகியையும் இடைவிடாது பூஜித்து இழந்த பதவிகளையும் செல்வங்களையும் பெற்றான். இன்றும் இத்தலத்திற்கு பதவி உயர்வு பெறவும், இழந்த செல்வங்களை பெறவும் வந்து வணங்கிச் செல்கின்றனர். இத்தலம் கும்பகோணம்- காரைக்கால் பாதையில் அமைந்துள்ளது.

சிவபுரம்

இத்தலத்தில் பூமிக்கடியில் சிவபெருமான் இருப்பதாக ஐதீகம். எனவேதான் திருஞானசம்பந்தர் இத்தலத்தை அங்கப் பிரதட்சணமாக சுற்றிச் சென்றார். கோயில் பகுதியிலிருந்து தள்ளி நின்று பெருமானைப் பாடினார். அவர் அவ்வாறு பாடிய இடமே ‘சுவாமிகள் துறை’ என்றழைக்கப்படுகிறது. ஆதிசங்கரரின் பெற்றோரான சிவகுருநாதரும், ஆர்யாம்பாளும் இங்கு வாழ்ந்ததாக கூறுவர். குபேரன் வந்து வெகுநாட்கள் தங்கியிருந்து வழிபட்டு, பேறு பெற்ற தலம் இது. தளபதி எனும் பெயரை உடைய ஒருவனுக்கு இத்தல ஈசன், குபேர ஸ்தானத்தை அளித்தார். குபேரபுரம் என்று இத்தலத்திற்கு வேறொரு பெயரும் உண்டு. கும்பகோணம்-திருவாரூர் பாதையிலுள்ள சாக்கோட்டை யிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

விருத்தாசலம்

பெரியநாயகி உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோலோச்சும் திருத்தலத்தில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் குபேர தீர்த்தம் ஒன்று. விருத்தகிரீஸ்வரரை குபேரன் இங்கே வழிபட்டு பெரும்பேறு பெற்றதால், அவன் திருப்பெயரிலேயே தீர்த்தமும் அமைந்துள்ளது. குபேரனுக்கு அளித்த பேற்றினை, தன்னை நாடி வரும் பக்தர் அனைவருக்கும் அருள இங்கே விருத்தகிரீஸ்வரர் காத்திருக்கிறார். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum