Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


என்றும் துணையாய் இருப்பார் நற்றுணையப்பர்

Go down

என்றும் துணையாய் இருப்பார் நற்றுணையப்பர் Empty என்றும் துணையாய் இருப்பார் நற்றுணையப்பர்

Post by oviya Sun Dec 07, 2014 8:47 am

புனல் சூழ்ந்த சோழ தேசத்தின் புண்ணியமிகு காவிரி நதியின் தென்கரையில் அமையப்பெற்ற தேவாரத் திருத்தலங்களுள் ஒன்றாய் அருள்மணம் பரப்புகின்றது, திருநனிபள்ளி என்னும் புஞ்சை (பொன்செய்). சமணர் பள்ளிகள் இங்கு மிகுதியாகக் காணப்பட்டதால் நனிபள்ளி எனப் பெயர் வந்தது. கிடாரங்கொண்டான் புஞ்சை என்று தற்போது அழைக்கப்படும் இவ்வூரே திருஞானசம்பந்தரது தாயார் பகவதியம்மை பிறந்த தலமாகும். சம்பந்தரின் பாட்டியார் ஊர் என்றுகூட சொல்லலாம்.

சீர்காழியில் அன்னை உமாதேவியிடம் ஞானப்பால் உண்டு, திருக்கோலக்காவில் அப்பன் ஈசனிடம் பொற்றாளம் வாங்கி, தந்தையின் தோள் மீதமர்ந்து, இங்கு வந்து இறைவன் மீது திருப்பதிகம் பாடி, பாலையாக இருந்த நிலத்தினை நெய்தல் நிலமாய் மாற்றினார், திருஞானசம்பந்தர்! பிறகு அதே நிலத்தை வளம்மிகு மருத நிலமாகவும் மாற்றினார் என்பது வரலாறாகும். சம்பந்தர் மட்டுமில்லாது, அப்பரும் சுந்தரரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடிப் போற்றியுள்ளனர். இயற்கை வளம் நிறைந்த இப்பதி இறைவன் விரும்பி உறையும் இடமென்றும் இதுபோன்ற தலம் கீழுலகிலும் மேலுலகிலும் இல்லை என்றும் பாடிப் பரவசப்படுகின்றார் சம்பந்தர்.

தனது அடியவரை நரகத்தில் விழாது காக்கும் நற்றுணையப்பர் விளங்கும் நனிபள்ளியென்று இத்தலத்தைச் சிறப்பிக்கிறார். அதோடு, 96 தத்துவங்கள் அடங்கிய உடம்பினைக் கொண்டிருந்தும் இந்த ஈசனை உணராதிருக்கும் நம்மை எண்ணியும் வருந்துகிறார், அப்பர் பெருமான். பன்றியின் கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றை விரும்பி அணிந்த பரமன், சக்கரப்படை ஒன்றை உருவாக்கி திருமாலுக்கு அளித்தவரென்றும் தன்னை நினைப்பவரது வினை வலிமை குன்றுமென்றும் கூறுகின்றார் சுந்தரர். நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் இத்தலத்திற்கு சம்பந்தரோடு கூடிய தொடர்பினை செவ்வனே எடுத்துரைத்துள்ளார். வள்ளல் ராமலிங்க அடிகளார் போற்றிப் பரவிய பதியிது.

சோழப் பேரரசனான ராஜேந்திர சோழன், தந்தை ராஜராஜனின் ராஜராஜேச்சுரம் என்னும் தஞ்சை பிரகதீஸ்வரம் போன்ற கங்கை கொண்ட சோழீச்சுரத்தை, அரிய சிற்ப நுணுக்கங்களோடு படைத்தான். அதோடு இன்றைய மலேசிய நாட்டிலுள்ள பண்டைய ‘கெடா’ என்ற நகரத்தை வென்றதன் நினைவாக ‘கடாரங்கொண்ட சோழீச்சுரம்’ என்ற ஊரையும் சோழ நாட்டினில் உருவாக்கினான். இதனால் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு ‘பூர்வதேசமும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்’ என்னும் சிறப்புப் பட்டமும் வழங்கப் பெற்றது. கடாரங்கொண்டான் என்பதே மருவி கிடாரங் கொண்டான் ஆகிவிட்டது.

அதியற்புத சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட, பிரமிக்க வைக்கும் பிரமாண்ட விமானத்தை தன்னகத்தே கொண்டு தனித்தப் புகழுடன் விளங்குகின்றது, இந்த நனிபள்ளி சிவாலயம். இங்கு காணப்பெறும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் சோழர்களின் சிற்ப கலா திறத்தை பறை சாற்றுகின்றது. அக்காலத்தில் கட்டட வேலைக்கு ஒப்பந்தம் செய்பவர்கள், ‘திருவலஞ்சுழி பலகணி, ஆவுடையார் கோயில் கொடுங்கை, கிடாரங்கொண்டான் மதில், திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம், புஞ்சை நனிபள்ளி விமானம் (கோடி வட்டம்) போலன்றிக் கட்டுவோம்’ என ஒப்பந்தம் செய்வார்களாம்!

அகத்தியர் இங்கு பார்வதி-பரமேஸ்வரனின் கல்யாணக் காட்சியைக் கண்டுள்ளார். காகம் ஒன்று இத்தல சொர்ண தீர்த்தத்தில் நீராடி, பொன்னிறமானதாக வரலாறு! ஊரின் நடுவே ஓங்கிய மதில்களுடன் ஒய்யாரமாய் ஒளிர்கின்றது திருக்கோயில். சாலையை ஒட்டி திருக்குளமும் அடுத்தாற்போல் கோயிலும் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லை. முதல் வாயிலின் மேல் பஞ்சமூர்த்திகளின் தரிசனம். முன்னர் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியன உள்ளன. வாயில் வழியே உள்ளே செல்ல, நீண்டதொரு முகமண்டபம். உருளை வடிவிலான எண்ணற்ற தூண்கள் இந்த முகமண்டபத்தினைத் தாங்கி நிற்கின்றன. இங்கே இரு அம்மன் சந்நதிகள் உண்டு. முதல் சந்நதி, முன்மண்டபத்தின் இடப்புறம் தெற்கு முகமாக அமைந்துள்ளது.

இந்த அம்மனை கல்யாண ஈஸ்வரி என அழைப்பர். இந்த முக மண்டபத்தின் இருபக்கமும் மேற்குத் திருமாளிகைப் பத்தியில் மூன்று விநாயகர் சிலைகள், சூரியன், நால்வர், ராகு, பைரவர், லட்சுமி நாராயணர், வேணுகோபாலர், ரதேஸ்வரர், கிழக்கு முகமுள்ள தனி சனீஸ்வரர் ஆகிய சிலா ரூபங்கள் நிறுவப்பட்டுள்ளன. அடுத்ததாக மகா மண்டபம்! இங்கு அழகிய தூண்கள் பல எழுந்து, பிரமாண்டத்தை வெளிப்படுத்துகின்றன. இங்கே நடராஜர் சபை உள்ளது. அருகே உற்சவ விக்ரகங்களும் அணிவகுக்கின்றன. பின் ஸ்நபன மண்டபம், சற்றே விசாலமாக அமைந்துள்ளது.

கர்ப்பகிரகம் மிகவும் விசாலமானது. ஒரு யானை வலம் வரும் அளவிற்கு உட்பரப்பு அதிகம் உடையது. அதன் நடுநாயகமாக லிங்கத் திருமேனி கொண்டு நமக்குப் பேரருள் புரிகின்றார் நற்றுணையப்பர். வழவழ பாணத்தோடு பிரகாசமாய் காட்சி தரும் இவர், அருள் வழங்குவதில் வல்லவர். இவரை வணங்கி, பிராகார வலம் வருகையில் தென்கிழக்கில் மடப்பள்ளி உள்ளது. அதற்கடுத்தாற்போல் தெற்கு பிராகாரத்தில் மேற்கு நோக்கியபடி இரண்டாவது அம்பாள் சந்நதியுள்ளது. அருகே அம்பாளுடன் கூடிய கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நதியும் உள்ளது. அம்பாள் இங்கே சுவாமிக்கு எதிராக மாலை மாற்றும் கோலத்தில் வீற்றருள்கின்றாள். அம்பாள் இங்கு மலையான் மடந்தை என்ற பெயர் தாங்கி கருணை புரிகின்றாள். பர்வத புத்திரி என்றும் அழைக்கப் பெறுகின்றாள்.

சுவாமியின் கருவறை விமானம் மிகவும் பிரமாண்டமானது. பிரமிப்பூட்டும் இந்த விமானம் போல் வேறெங்கும் காண முடியாது. சோழர்களின் சிறந்த கலைப்படைப்புகளுக்கு இவை சான்றுகளாக விளங்குகின்றன. தேவகோஷ்டத்தில் அகத்தியர், காவிரி கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை என ஆறு தெய்வ சிலைகள் காணப்படுகின்றன. துர்க்கை மிக கம்பீரமாக, ஒரு கரத்தால் அபயம் அளித்தும் மறுகையை இடுப்பில் மடித்து வைத்தும் கால்களை சற்றே மடக்கியவாறும் மிகுந்த கலை வடிவினளாய் கருணை பொழிகின்றாள். சண்டேசர் தனது சக்தியுடன் தரிசனம் தருகின்றார்.

தேவகோட்டத்தின் மேலுள்ள மகர தோரணங்களும் கல்யாண சுந்தரர், மாதொருபாகர், காளி, ஊர்த்துவ தாண்டவரின் சிற்பங்களும் சிறந்த கலைப் படைப்புகள் ஆகும். கருவறையைச் சுற்றிலும் அடித்தளத்தில் 64 சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிற்பங்களை புள்ளமங்கை, கண்டியூர், குடந்தை கும்பேஸ்வரர் கோயில்களிலும் காணலாம். நனிபள்ளி சிற்றுருவச் சிற்பங்களில் பாரதம், ராமாயணம், தேவி பாகவதம் ஆகிய இதிகாச, புராணக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. துரும்பு நுழையும் அளவே உள்ள யாளியின் பல்லிடுக்கு அபார படைப்பு.

இத்தலத்தில் செண்பகமும் புன்னையும் தல மரங்கள். சொர்ண தீர்த்தம், தல தீர்த்தம். முன்வினை காரணமாக முன்னேற்றம் இன்றி தவிப்போர் இங்கு வந்து பரமனையும் அம்பிகையையும் வழிபட நன்மையுண்டாகும். திருமணத்தடை நீங்கவும் இங்கு வழிபடுதல் உசிதமாகும். நாகை மாவட்டம், செம்பனார் கோயிலில்-திருவெண்காடு வழியில் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, கிடாரங்கொண்டான் புஞ்சை! செம்பனார்கோயிலிலிருந்து பஸ், ஆட்டோ வசதியுள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum