Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


வளங்கள் பல அருளும் பைரவர்

Go down

வளங்கள் பல அருளும் பைரவர் Empty வளங்கள் பல அருளும் பைரவர்

Post by oviya Thu Dec 11, 2014 1:49 pm

சிவபெருமான் வீரச்செயல் புரிந்த கோலங்களில் குறிப்பிடத்தகுந்தது பைரவத் திருக்கோலம். பல பைரவத் திருக்கோலங்கள் உண்டு. அவற்றில் மார்த்தாண்ட பைரவரும் ஒன்று. இவர் கோயில் கொண்டருளும் தலமே வைரவன்பட்டி. இத்தலத்தின் பழங்காலப் பெயர் வீரபாண்டியபுரம். இந்த பைரவரையே வயிரவன், வைரவன் என்றெல்லாம் அழைக்கிறோம். இத்தலத்திற்கு வடுகநாதபுரி, வடுகநாதபுரம், வடுகன் மூதூர், வயிரவ நகர், வயிரவமாபுரம் என்று பல பெயர்கள் உண்டு. இக்கோயிலின் தனிச் சந்நதியில் அருள்புரியும் பைரவர்தான் மார்த்தாண்ட பைரவர்.

கிழக்கு நோக்கிய இக்கோயிலின் மூலவர் வளரொளிநாதர்; அம்பாள் வடிவுடை அம்மை. ஈசன் பத்ம பீடத்தின் மீது சிவலிங்கத் திருமேனியில் அருள்கிறார். முதல் பிராகாரத்தில் வளரொளி நாதர், வடிவுடை அம்மை, விநாயகர், முருகன் சந்நதிகளோடு பரிவாரத் தெய்வங்கள், நவகிரகங்களும் அருள்புரிகிறார்கள். இறைவன் சந்நதிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இடையில் தனிச்சந்நதியில் தென்திசையில் அருள்புரியும் பைரவர், ருத்ராம்சமாக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவரது மேற்கைகள் உடுக்கையையும், நாகத்தையும் பிடித்திருக்கின்றன.

கீழ் திருக்கைகள் நீண்ட திரிசூலத்தையும், கபாலத்தையும் ஏந்தியுள்ளன. தனி அழகும், கம்பீரக் கோலமும், அன்பும், ஞானமும், கருணையும் பொங்கும் திருமுகத்தோடு, திகம்பரராக நாய் வாகனத்தோடு காட்சியளிக்கிறார். இந்த சிவாலயத்தில் பைரவருக்கே அதிக முக்கியத்துவம். இக்கோயிலை வயிரவன் கோயில் என்றும் அழைப்பர். இந்த பைரவரை வழிபட வந்த தேவர்கள், நீராட இங்கு கங்கை இல்லையே என்று வருந்தியபோது, அவர்களது குறையைத் தீர்க்க வயிரவரே தன் சூலத்தினால் தரையில் குத்த, கங்கை நீர் பீறிட்டு ஊற்றாக கொப்பளித்தது. அதுவே, தற்போது வயிரவ தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.

இதில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் நீராடினால் மக்கட்பேறும், கார்த்திகை மாத ஞாயிறு, திங்கட்கிழமையில் நீராடினால் பாவ விமோசனமும், மார்கழி மாத திருவாதிரையில் நீராடினால் செல்வச் செழிப்பும் ஏற்படும் என்பது ஐதீகம். ததீசி, தேவகுருவான வியாழன், சந்திரன் போன்றோர் இந்த தீர்த்தத்தில் நீராடினார்கள். தேவகுருவை மதிக்காத இந்திரனின் பொலிவு குறைந்தது. தன்னுடைய அகந்தையை உணர்ந்த இந்திரன் இந்த தீர்த்தத்தில் நீராடி வளரொளிநாதரை வணங்கி பாவவிமோசனம் பெற்றார். மகாபலி சக்ரவர்த்தி, வாமனருக்கு தானம் தர விரும்பியபோது சுக்கிராச்சார்யார் அதனைத் தடுக்க முயற்சித்து ஒரு கண் பார்வையை இழந்தார்.

பல திருத்தலங்கள் சென்ற சுக்கிரன் இந்த பைரவர் கோயிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு கண்ணொளி பெற்றார் என்கிறது புராணம். தலமரம் ஏறழிஞ்சல் ஆகும். இந்த மரத்தின் காய்கள் கீழே விழுந்ததும், தாமே ஊர்ந்து சென்று மரத்தில் ஏறி ஒட்டிக் கொள்ளும் சிறப்புடையது. அக்காலத்தில் இந்த மரங்களே காடுபோல பரவியிருந்ததால் 'அங்கோலவனம்' என்கிற பெயரும் உண்டு. இக்கோயில் முதன் முதலில் கிருத யுகத்தில் தேவேந்திரனால் கட்டப்பெற்றது என்று புராணம் சொல்கிறது. பிறகு சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது.

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் நகரத்தார்கள் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பாண்டிய நாட்டில் குடியேறியபொழுது, பாண்டிய மன்னனால் கி.பி.718ல் நகரத்தார்களுக்கு வழங்கப்பெற்ற ஒன்பது கோயில்களில் இதுவும் ஒன்று. ஆதிகாலத்தில் இக்கோயில் மண்ணாலும், பிறகு செங்கல்லாலும் கட்டப்பட்டிருந்தது. பிறகு, நகரத்தாரின் முயற்சியால் கி.பி.1864ல் ராஜகோபுரம், விமானங்கள், இரண்டு சுற்றுப் பிராகாரங்கள் என விரிவுபடுத்தப்பட்டது. முதல் பிராகாரத்தில் வடகிழக்குக் கூரையில் பைரவர் கோயிலின் தலபுராணச் செய்திகளையும், தென்கிழக்குக் கூரையில் ராமாயண நிகழ்ச்சி களையும் ஓவியங்களாகக் காணலாம். கருவறை புறச்சுவரிலுள்ள தேவகோஷ்ட மாடங்களில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன.

தெற்குப் பகுதியிலுள்ள ஓவியங்களில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மன் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். கோயிலில் பெரிதும், சிறிதுமான இரண்டு தட்சிணாமூர்த்தி திருவுருவங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று ஞான தட்சிணாமூர்த்தி, முதல் பிராகாரத்தின் தென்மேற்குப் பகுதியில், ஆலமரம், சனகாதி முனிவர்கள் இன்றி தனித்துள்ளது. ஐந்து இசைத் தூண்கள் தாங்கும் எழில் மண்டபத்தில் இவர் அருள்புரிகிறார். மற்றொன்று பெரிய திருவுருவமாக கருவறையின் தெற்கு தேவகோஷ்ட மாடத்தின் முன்புறம் கல்மண்டபத்தில் அமைந்துள்ளது.

வீராசனத்தில் அமர்ந்த திருக்கோலம் இது. வலது திருவடி தாழ்ந்து முயலகனின் முதுகை மிதித்தபடி உள்ளது. இடக்காலை மடித்து வலது தொடை மேல் வைத்திருக்கிறார். இவரது முன்புறம் சனகாதி முனிவர் நால்வர் பத்மாசனத்தில் அக்க மாலையும், சுவடியும் ஏந்தி தத்துவம் கற்கும் நிலையில் அமர்ந்திருக்கின்றனர். அர்த்த மண்டப தேவகோஷ்ட மாடங்களில் தென்திசையில் நர்த்தன விநாயகர், வடதிசையில் விஷ்ணு துர்க்கை. துவார கணபதி, ஆகாச பைரவர், ஆதி மூலம், அர்த்தநாரீஸ்வரர், மாணிக்கவாசகர், பிட்சாடன மூர்த்தி, தண்டாயுதபாணி, குழலூதும் கோபாலன், கரிக்குருவிக்கு உபதேசிக்கும் சிவன், ஸ்ரீராமர், வீர ஆஞ்சநேயர், ஞானசம்பந்தர், ரிஷபவாகனர், துவார பாலகர்கள், துவார பாலகிகள் என்று ஏராளமான சிற்பங்கள்...

இந்த திருக்கோயிலின் முதல் பிராகாரத்து கருவறையின் வடதிசையில் சண்டேஸ்வரர் தனியே, தென்திசை நோக்கி எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பானது. மலையைக் குடைந்து அதில் சண்டேஸ்வரரை எழுந்தருளச் செய்துள்ளனர். சண்டேஸ்வரர் சந்நதியின் அருகிலுள்ள சுற்றுச்சுவரில் விஸ்வரூப அனுமனின் சிற்பமும், அனுமனின் முன்பு கைகூப்பி நிற்கும் ராமபிரானின் அரிய சிற்பமும் உள்ளன. இதுபற்றி ஒரு கதை உண்டு. முதன்முதலில் ராமபிரானைச் சந்திக்கிறார் அனுமன். அப்பொழுது அனுமனைப் பார்த்த ராமன் ‘குரங்கு முகமும், மனித உடலும் கொண்டுள்ள இவன் எப்படி நமக்கு உதவுவான்?’ என்று நினைத்தாராம்.

அதை உணர்ந்த அனுமன், உடனே விஸ்வரூபமெடுத்து தான் சிவாம்சம் பொருந்தியவன் என்பதைக் காட்டினாராம். அந்த விஸ்வ ரூபத்தைத்தான் ராமபிரான் வணங்கினார் என்று சொல்லப்படுகிறது. வயிரவன் கோயிலைச்சுற்றி சுமார் 30 கி.மீ. தூரத்தில் வசிப்பவர்களை நாய் கடித்து விட்டால் அந்த விஷத்தால் எந்த தீமையும் நேராது. நாய் கடிபட்டவர்கள்இங்கு வந்து வைரவத் தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள நெல்லி மரத்தின் நெல்லிக் காயைத் தின்றால் உடனே நாய்ககடி விஷம் நீங்கிவிடும் என்று சொல்லப்படுகிறது. இத்தலம் காரைக்குடிக்கு அருகே, திருச்செந்தூரிலிருந்து ஏழு கி.மீ. தூரத்தில் உள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum