Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


தீவினை களையும் தில்லை காளி

Go down

தீவினை களையும் தில்லை காளி Empty தீவினை களையும் தில்லை காளி

Post by oviya Thu Dec 11, 2014 1:50 pm

கயிலைநாதன் உமையோடு வீற்றிருந்தார். மெல்ல தம் முக்கண்களையும் மூடி மூவுலகங்களையும் தம் அகக் கண்களால் பார்த்தார். உலகின் ஒரு பெரும் பகுதியை அரக்கர்கள் மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தனர். அரக்கர்களின் ஆர்ப்பாட்டம் முனிவர்களை மிரள வைத்தது. தேவர்களைத் தலை தெறிக்க ஓட வைத்தது. மானிடர்களும் மண்ணுயிர்களும் அவர்களது கரங்களில் சிக்கி மீள இயலாது தவித்தன. தப்பிக்க வேண்டி ஈசனின் திருப்பாதம் நோக்கி தங்கள் சிரசை உயர்த்தினர். மெல்ல தம் திருவடியை தீண்டும் அவர்களின் மேல் முக்கண்களையும் குவித்து அவர்களைக் குளிர்வித்தான், ஈசன்.

ஈசன் கண்களை முழுமையாகத் திறந்தான். அது கனலாய் கனன்று எரிந்தது. தன்னில் சரிபாதியாய் விளங்கும் அம்மையை பார்க்க, அவள் வேறொரு உரு கொண்டாள். புது உருவம் கொண்ட உமையவள் ஈசனைப் பார்க்க, தில்லையில் தன் கடாட்சம் மீண்டும் கிடைக்கும் என்று சொன் னார். தம் இடப்பாகத்துடன் இணைத்துக் கொள்வதாய்ச் சொல்லி இனிமையாய் சிரித்தார். சட்டென்று முகம் சிவந்து அரக்கர்களைப் பார்க்கச் சொன்னார். இப்போது அவளுக்குள் கிளர்ந்தெழுந்த சக்தியால் சகலமுமாய் மாறி நின்றாள். ஈரேழு உலகத்தையும் விஞ்சி நின்றாள்.

மெல்ல தம் சொரூபம் மறைத்து கோப அக்னியோடு பூலோகம் முதல் மூவுலகத்தையும் வலம் வந்தாள். பிரபஞ்சத்தில் அடாது செய்யும் சக்திகளை விடாது வதம் செய்தாள். கோபம் தணியாது அந்த தில்லைக் காடுகளில் திரிந்து காற்றாய் சுழன்று கொண்டிருந்தாள். காளி என்றாலே காற்று என்பது பொருள். உலகம் காக்கும் பொருட்டு, முனிவர்களையும், மானிடர்களையும் காக்கும் பொருட்டு, உமையன்னையை உக்கிர காளியாய், பெருங்காற்றாய் மாற்றிய அந்த ஆனந்தக் கூத்தன், தில்லை நாயகனாய், நடராஜனாய் குகை நோக்கினான்.

வார்சடை பரப்பி நடனமாடும் மூவுலக வேந்தன் தன் சிரசில் சிலிர்த்துக் கிடக்கும் ஒரு சடையை மெல்ல வீச அது சூறையாய் புரண்டெழுந்து அந்த அடர்ந்த இருளை நோக்கி பாய்ந்தது. குகைக்குள் தன்னில் ஒருபாகமாய் இருந்தவளை, சக்தியாய் ஒளிர்ந்தவளை தன்னோடு ஏகமாய் இணைக்க பேருவகை கொண்டான். தன் வலப்பாதம் தூக்கி நர்த்தனம் புரிந்தான். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் சுழன்று அதிர்ந்தது. அண்டங்கள் இயங்கின. வேறொரு நாட்டியம் அங்கு ஆரம்பமானது. பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் பரவசமாய் பரமனின் பாதத்தின் அசைவுகளை அசையாது பார்த்தபடி இருந்தனர்.

அந்த வனத்தினுள் ஒரு பகுதி மட்டும் தில்லைச் செடிகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து குகை போல் குறுகி அடர்ந்த இருளோடு இருந்தது. குகைக்குள்ளிருந்து ஒரு பெருமூச்சு அப்பகுதியையே அதிர வைத்தது. மூச்சின் வெம்மை அனலாய் தகிக்கச் செய்தது. ஒரு சூரைக் காற்று சுழித்துக் கொண்டு குகையின் வாயிலை அடைந்து அதிவேகமாய் அந்தப் பெரிய உருவத்தின் மீது மோதித் திரும்பியது. அந்தக் கரிய உருவமும், கார்மேகத்தையே அடைத்து சடையாக்கி, அதன் மேல் கபாலம் தாங்கி, அரக்கர்களின் தலைகளை மாலையாக்கிக் கொண்டு, கண்களில் தீப்பிழம்பு அனலை அடைமழையாய் பொழிய, அக்கினியாகி அமர்ந்திருந்தாள்.

எண்கரங்களிலுள்ள ஆயுதங்களும் அரக்கர்களின் குருதி படிந்து கருஞ் சிவப்பேறியிருந்தன. ஈசன் இசைந்தபடியே தீந்தவம் புரிந்திருந்த காளி இன்னும் உக்கிரம் தணியாத கோபத்துடன் புருவம் நிமிர்த்தி எழுந்தது. மகிஷாசுரன், தாரகாசுரன், பண்டாசுரனின் தலைகளை தொன்னைகளாய் கையிலேந்திக் கொண்டது. அவள் சிரசின் பின்புறம் தீந்தழல்கள் விரிந்து எண்திக்கும் பரவியது. தில்லை வனச் செடிகள் மெல்ல கருகின.

தொலை தூரத்தில் ஆடல்வல்லான் நடராஜனின் கால் சதங்கைச் சத்தம் தொடர்ச்சியாய் காளியின் காது குண்டலங்களின் மீது எதிரொலித்துத் திரும்பியது. தன் தவப் பெருமை புரியாது முனிவர்களின் பூசனையில் முகிழ்ந்திருக்கும் ஈசன் மீது கோபம் பொங்கியது. தன் சக்தியை விடவா அது பெரிது என்று விபரீதமாய் சிந்தித்தது. சிவசக்தியே அனைத்தின் மையம் என்று மறந்து சக்தியே அனைத்தினும் முதன்மை என்று தன்னை பகுதியாய் பிரித்துப் பார்த்தது. தன்னை பெருமகளாய் நினைத்த கரிய உருவான காளி இன்னும் கனலாகி, கங்காதரனான நடராஜரை நோக்கி நடந்தது. முனிவர்களின் குடில்களை கவிழ்த்துப் போட்டது. தவத்திலிருந்த யோகிகளின் தவத்தை சிதைத்தது. ஊழித்தாண்டவம் தொடர்ந்தது.

அரனின் அண்மையில் நெருங்கினாள். கோரப்பல் காட்டிச் சிரித்தாள். ஆடலரசன் கனலாய் சிவந்தான். தன் சீர் சடையை விரித்தெழுந்தான். ‘‘இத்துடன் நிறுத்திக் கொள்’’ என்றான். காளி சீற்றமாய் எதிர்வாதம் புரிந்தாள். ‘‘ஆடலுக்கு உரியோர் பெண்டீரே. நீர் அல்ல. அக்கலையை அபத்தமாய் ஆடி ஆடல்வல்லான் என மகுடம் சூடுவது முறையல்ல. முடிந்தால் என்னோடு ஆடிப்பாரும். நீர் தோற்றால் தில்லை எல்லையில் அமரும். நான் தோற்றால் தில்லையே எனது எல்லை’’ என பாதம் உதைத்து நின்றாள்.

அந்தச் சபை அதிர்ந்தது. மகேசனான நடராஜன், மாகாளியோடு போட்டி ஆட்டத்தைத் தொடங்கினான். நாரத முனிவர் யாழை இழைக்க, பிரம்ம தேவன் ஜதி சொல்ல தொடங்கினார். மகாவிஷ்ணு மத்தளம் கொட்டினார். மத்தளத்திற்கு இணையாக நந்தி பகவான் தாளமிட்டார். சரஸ்வதி வீணையின் சுருதியை கூட்ட, காளி குதூகலித்தாள். ஈசன் சிலிர்த்தெழுந்தார். நாட்டிய வேகத்தின் கதியை துரிதப்படுத்திய காளி, குழைவாய் சுழன்றெழுந்தாள். நடராஜர் இன்னும் ஆனந்தமானார். பூமிக்கும் வானுக்கும் அலைபோல் எழுந்தாடினார். காளி கால் வீசி எண்புறமும் எழுந்தாள். சிரசின் நெருப்பு நாற்புறமும் எரித்தது.

பிறைசடை யோன் பிரபஞ்சம் அதிர இன்னும் வேகமாய் ஆடினான். மேருவே மெல்ல அவனின் நர்த்தனத்தில் நடுங்கியது. எண்திக்கும் பரவிய ஜோதியாய் மாறினான், ஆதவனை மறைத்தான். முனிவர்களும், தேவர் களும் யார் வெற்றி பெறுவார், யார் தோல்வி யுறுவார் என பிரமித்த நிலையில் சிவதாண்டவத்திலும், காளியாட்டத்திலும் லயித்தனர். காலத்துக்கு கட்டுப்படாத அந்த தாண்டவத்தை பார்த்து திக்குமுக்காடினர். சட்டென்று ஆடலரசன் தன் காது குண்டலத்தை கீழே விழச் செய்தார். அது தம் பாதத்தின் கீழிருக்கும் முயலகனின் மீது விழுந்தது.

சபை மிரண்டது. காளி அதை கவனமாய் பார்த்தாள். நான்கு புறத்தையும் வீசி அளந்த அந்த கால்கள் காதின் குண்டலத்தை மெல்லப் பற்றியது. காளி கூர்மையானாள். தன் நடன அசைவுகளின் வேகம் குறைத்தாள். நடராஜர் மெல்ல நானிலமெங்குமாய் நிமிர்ந்தார். காளி அரனை அண்ணாந்து பார்த்தாள். மெல்ல சுற்றிச் சுற்றி வந்தாள். ஈரேழு உலகங்களும் தம் அசைவுகளே என அடைத்து நின்றார். வேறொரு பிரபஞ்சத்தை அனைவரின் விழிக்குள்ளும் காட்டினார். சபை எழுந்தது. ‘நடராஜா... நடராஜா...’ என வாய்விட்டு அலறியது. காளி சிலிர்த்து எழுவதற்குள், அகில மெல்லாம் ஆளும் அரசன் தில்லை நாயகன் சட்டென்று தம் இடக்காலை அழுந்த ஊன்றி வலக்காலை நேர் செங்குத்தாய் தூக்கி நின்றார். காதில் குண்டலம் சூடினார்.

அந்த ஊர்த்தவ தாண்டவம் பார்த்த காளி அதிர்ந்தாள். சட்டென்று ஒரு கணம் காளி உட்பட, தேவாதி தேவர்களும்.தேவியர்களும், பிரம்மனும், விஷ்ணுவும், பிறரும் தங்களை மறந்து ஈசனோடு ஈசனாய் கலந்தனர். காளி, தான் சக்தியின் அம்சமான, ஈசனின் இடப்பாகம் என்பதை அந்தக் கணத்தில் உணர்ந்தாள். தான் தோற்பது, ஜெயிப்பது என்கிற அளவைத் தாண்டி, தன் இயல்பான சிவசக்தி சொரூபத்தை ஊர்த்தவ தாண்டவத்தின் மூலம் அகத்திலும், புறத்திலும் பார்த்து தெளிந்தாள். பெண் எனும் சக்தியின் மையமாய் இருக்கும் எல்லைகளை புரிந்துகொண்டாள்.

மவுனமாய் தில்லையின் எல்லை நோக்கி நடந்தாள். கிழக்கு நோக்கி அமர்ந்தாள். ஆனாலும், இன்னும் கோபம் கொப்பளித்து ஆறாய் பெருகியது. அது சக்தியின் அம்சமாகவே ஒருபுறம் இருந்தது. ஆனால், மறுபுறம் ஆணவம் அறுத்து, உக்கிரம் பெருக்கினாள். பிரம்மா தில்லையின் எல்லையில் அமர்ந்த காளியின் உக்கிரத்தை வேத மந்திரங்களால் குறைத்தார். உக்கிரம் குறைந்த சக்தி தனியே காளியிடமிருந்து பிரிந்து, பிரம்ம சாமுண்டியாகி தனியே அமர்ந்தது. நான்கு வேதங்களால் உக்கிரம் குறைந்ததால் இவளுக்கு நான்கு முகங்கள். பிறகு மூல சக்தி, மெல்ல தில்லையம்பலம் ஏகினாள் சிவகாமியாய் சிவனின் இடப்பாகத்தோடு ஒன்றினாள்.

இன்றும் இவ்வாலயத்தினுள் நுழைய மென்மையாய் ஒரு தனல் நம்மை சூழ்ந்து கொள்ளும். தில்லை காளியன்னைக்கு நல்லெண்ணையால் மட்டுமே அபிஷேகம் செய்கிறார்கள். வேறு அபிஷேகம் செய்தால் காளி குளிர்ந்து விடுவாளோ, அவள் குளிர்ந்தால் தீயவர்கள் பெருகிவிடுவார்களோ என்று அக்காலத்திலிருந்தே வேறெந்த அபிஷேகமும் செய்வதில்லை. காளியன்னையை குங்குமம் கொண்டு சிவக்கச் செய்திருக்கிறார்கள். அன்னையை வெண் உடையில் அலங்கரித்திருக்கிறார்கள். குங்குமமும், வெண்மையும் கலந்த காளியன்னை வெண்சிவப்பாய் ஒளிர்கிறாள்.

அருகில் வருவோரின் வாழ்வில் ஒளியூட்டுகிறாள். அவளின் சந்நதியில் சிறிது நேரம் நிற்க ஜென்மங்களாய் வந்த தீவினைகளை தன் அருட்பார்வை கொண்டு கணநேரத்தில் களைகிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டோர் இத்தலத்து காளியின் முன்பு அமர பஞ்சாய் பாதிப்புகள் பறந்து போகும். இக்கோயில் மிகத்தொன் மையானது. தில்லை அம்மனின் கருவறையைச் சுற்றி காணப்படும் கோஷ்ட மூர்த்திகள் அம்பிகையின் பல்வேரு சக்தி அம்சங்களைத் தாங்கி அழகிய சிலையாக, அருள் பொங்கும் முகத்தோடு காட்சியளிக்கின்றனர். தெற்கு பிரகாரத்தில் விநாயகப் பெருமான் ஏழு திருக்கரங்களுடன் அருளும் கோலம் பார்க்க அரிதாகும். நின்ற நிலையில் வீணை வாசிக்கும் கலைமகளின் சிற்பம் இத்தலத்து அற்புதம். வடக்கு பிரகாரத்தில் துர்க்கையும், சண்டிகேஸ்வரியும் அருள் சுரக்கும் கண்களாய் காட்சி தருகிறார்கள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum