Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சகலகலா வல்லமை அளிக்கும் புதன் பகவான்

Go down

சகலகலா வல்லமை அளிக்கும் புதன் பகவான் Empty சகலகலா வல்லமை அளிக்கும் புதன் பகவான்

Post by oviya Thu Dec 11, 2014 3:05 pm

திருவெண்காடு

சோழ வள நாட்டில் காவிரியின் வடகரையில் அமைந்த தலங்களில் 11வது பாடல் பெற்ற தலம், திருவெண்காடு. தில்லையில் திருநடனம் புரிவதற்கு முன்பே ஈசன் திருவெண்காட்டில் ஆடியதால் ஆதி சிதம்பரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. தமிழகத்திலுள்ள மிக பிரமாண்டமான ஆலயங்களில் ஒன்று. சங்காரத்திற்குப் பிறகு சங்கரன் உலகம் உய்ய ஞான தாண்டவம் ஆடி மறு ஊழ் வரை தொடர்வதால் பேரரங்கம், மகாவரங்கம் என்ற பெயர்களும் உண்டு. ராமாயணத்தில் இத்தலம் பற்றி சுவேதாரண்ய க்ஷேத்ரத்தில் (திருவெண்காடு) எமனை சுவேதார ண்யேஸ்வரர் எவ்வாறு சம்ஹாரம் செய்தாரோ அவ்வாறு கரண், தூஷனனை ராமன் சம்ஹாரம் செய்தான் என்று கூறப்பட்டுள்ளது.

வட மொழியில் சுவேதாரண்யம் என்றால் வெண்மையான காடு என்று பொருள். அதாவது, திருநீற்றுக்காடு. பிரம்மனுக்கு இவ்வூர் மயானமானதால் பெரிய மயானம் என்ற பெயரும் நவகிரகங்களில் புதன் இத்தலத்தில் வீரியம் பெற்றிருப்பதால் புதன் ஸ்தலம் என்றும் சிறப்பு பெறுகிறது. ஆனாலும், திருமுறைகளிலும், கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே பெயர் திருவெண்காடுதான். பொதுவாக வியாக்ரபாதர், பதஞ்சலி, சனகாதி முனிவர்களுக்கு உபதேசிப்பதுபோல் தட்சிணாமூர்த்தி திருமேனியை வடித்திருப்பர்.

ஆனால், இங்கோ பிரம்மனுக்கே உபதேசம் செய்வதால் மேதா வித்யா தட்சிணாமூர்த்தியாகக் கோலம் கொண்டுள்ளார். இத்தலத்தின் பிரதான சிறப்பே அகோர மூர்த்திதான். ஈசனின் திருக்கோலங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது இது. இவர் தனிக்கோயிலில் அழகோடு அருள்பாலிக்கிறார். 51 சக்தி பீடங்களில் இத்தலமும் ஒன்று. பிரம்மவித்யாம்பிகை, காளி, துர்க்கை என்ற மூன்று சக்திகள் சங்கமித்திருக்கும் தலம். அக்னி, சூரியன், சந்திர தீர்த்தங்களும், ஆல், கொன்றை, வில்வம் என மூன்று தலமரங்களும் அமையப் பெற்ற திருக்கோயில் இது.

ஊருக்கு நடுவே அமைந்துள்ள இக்கோயிலின் திருமதிலைச் சுற்றி மடவளாகமும், நான்கு கோபுரங்களும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. கிழக்கு கோபுரம் வழியே பிரவேசித்ததும் கொடி மரத்து பிள்ளையார், பலி பீடம், கொடி மரம், நந்தி என காணலாம். தெற்கே அக்னி தீர்த்தமும், அதன் கிழக்கே அக்னீஸ்வரர் ஆலயமும் உள்ளன. அக்னி தீர்த்தக் கரையில் ஊஞ்சல் மண்டபம், அதன் அருகேயே மெய்கண்ட நாயனார் திருக் கோயில். தெற்கு பிராகாரம் வழியாகச் சென்றால் சூரியன் கோயிலையும், சூரியன் தீர்த்தத்தையும் காணலாம். திருஞான சம்பந்தர் இந்த தீர்த்தத்தைப் பாடிச் சிறப்பித்துள்ளார்.

வெளிப் பிராகாரத்தின் தென்மேற்கில் நந்தவனம். மேற்கு வெளிப் பிராகாரத்தில், மேற்கு ராஜகோபுரத்திற்கு வடபால் ஆறுமுகப் பெருமான் கோயிலும், நூற்றுக்கால் மண்டபமும் இணைந்துள்ளன. முருகன் கோயிலுக்கு மேற்கே வீரபாண்டியன் என்னும் சிவலிங்க சந்நதி உள்ளது. வெளிப்பிராகாரத்தின் வடமேற்கில் கிழக்கு நோக்கி அம்பாள் சந்நதி சிறு கோபுரத்துடன் உள்ளது. அம்பாள் கோயிலும் முன்மண்டபமும் முழுக்க முழுக்க கருங்கல் திருப்பணியாகும். அம்பாள் கோயிலின் உட் பிராகாரத்தில் பிள்ளையார், பிள்ளை இடுக்கி அம்பாள், சுக்ரவார அம்மன் சந்நதிகளும் பள்ளியறையும் உள்ளன.

பிரம்ம வித்யாம்பாள் என்கிற பெரியநாயகி எழுந்தருளியுள்ளார். திருநாங் கூரில் உள்ள மதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் திருவெண்காடரை நோக்கித் தவமிருந்து, அவரைத் தன் கணவராக வரித்துள்ளார். பிரம்மனுக்கு வித்தைகளை கற்பித்ததால் பிரம்ம வித்யாம்பிகை என்னும் திருப்பெயர் பெற்றாள். திருஞான சம்பந்தர், திரு வெண்காட்டின் வட எல்லைக்கு வந்த பொழுது அவருக்கு ஊரெல்லாம் சிவ லோகமாகவும், மண லெல்லாம் சிவலிங்கமாகவும் காட்சியளிக்க, இத்தலத்தினை மிதிப்பதற்கு அஞ்சி அவர் 'அம்மா' என்றழைக்க, பிரம்மவித்யாம்பாள் அங்கு தோன்றி, தனது இடுப்பில் திருஞானசம்பந்தரை இடுக்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்றாள்.

ஆளுடைய பிள்ளையை இடுப்பில் சுமந்த வடிவில் அம்பாள் சிலை கோயிலின் மேற்கு உட்பிராகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளை நின்று கூப்பிட்ட குளக்கரை குளம் 'கூப் பிட்டான் குளம்' என்று அழைக்கப்பட்டு, இன்று 'கோட்டான் குளம்' என்று மருவிவிட்டது! நல்லவேளையாக, இக்குளக்கரை விநாயகர் பெயர் மட்டும் ஞானசம்பந்த விநாயகர் என்று இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக அமைந்துவிட்டது! யாவற்றிற்கும் நடுநாயகமாக சுவேதாரண்யேஸ்வரர் சந்நதி. நிருத்த மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் அடங்கிய மாபெரும் சந்நதி. சுயம்பு லிங்கத் திருமேனி.

நால்வரால் பாடப் பெற்ற தனிச் சிறப்புமிக்கவர். அம்பாள் கோயில் மண்டபத்தின் இடப்பகுதியில் புதனுக்கு தனிக் கோயில் உள்ளது. புதன் கிரகம் புத்திக்கு அதிபதி. கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை என சகல கலைகளிலும் மேன்மை அளிப்பவர். புதனின் தந்தையான சந் திரனுக்கு ஒரு கோயிலும், சந்திர தீர்த்தமும் புதன் சந்நதிக்கு எதிரே அமைந்துள்ளன. சந்திர தீர்த்தத்தின் கீழ்க்கரையில் பிரமாண்டமான வட ஆல விருட்சத்தைக் காணலாம்.

சங்க இலக்கியமான அகநானூற்றில் 181வது பாடலில் குறிப்பிடப் பெற்றுள்ள ஆல முற்றம் இதுவே என்பது அறிஞர்கள் கருத்தாகும். கயாவில் உள்ளது போல் ஆலமரத் தடியில் விஷ்ணு பாதத்திற்கு பதிலாக ருத்ரபாதம் பெயருடன் பொறிக்கப்பட்டுள்ளது. பிதுர் கடன் செய்ய ஏற்ற தலம். சந்திர தீர்த்தக் கரையில் கொன்றை மற்றும் கோயிலின் வடகிழக்கில் அரசு, வேம்பு இணைந்துள்ள மரங்கள் உள்ளன. அதற்கும் வடகிழக்கில் யாகசாலை அமைந்துள்ளது. மீண்டும் கிழக்கு பிராகாரம் வந்து கொடிமரத்தை அடையலாம்.

வடக்கே அலங்கார மண்டபமும், வாகன மண்டபமும் அமைந்துள்ளன. கிழக்கு கூட கோபுரத்தை ஒட்டி அழகிய க ல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இக் கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால் உட்பிராகாரத்தின் தென்பகுதியில் பெரிய வாரணப் பிள்ளையார், சோமாஸ் கந்தர் சந்நதிகளைத் தரிசிக்கலாம்.
தென் திருமாளிகைப் பத்தில் அறுபத்து மூவர், பத்ரகாளி, வீரபத்திரர், இடும்பன், சுகாசன மூர்த்தி, சோலையப்ப முதலியார், மந்திரி ஆகிய திருமேனிகளையும், மேற்கு திருமாளிப் பத்தில் நாகேஸ்வரர், விநாயகர், யோக மாணிக்கவாசகர், நால்வர், ஆவுடையார் பத்ர பீடம், விசுவேஸ்வரர், விசாலாட்சி, அங்காள பரமேஸ்வரி, சுவேதனப் பெருமாள், பஞ்சலிங்கம், பாலசுப்ரமணியர், அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, சரஸ்வதி, தன விநாயகர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

மேற்கு உட்பிராகாரத்தில் தெற்கு நோக்கிய நடராஜர் சபை உள்ளது. இவ்வழகிய நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டுகள் அழைக் கின்றன. ஆதி நடராஜர் இவரே எனலாம். தில்லையில் சிதம்பர ரகசியம் போலவே இங்கும் ஸ்படிக லிங்கமும், ரகசியமும் உள்ளன. வடக்கு உட்பிராகாரத்தில் கோயில் கொண்டுள்ளார் அகோர மூர்த்தி. மூலவருக்கும் உற்சவருக்கும் தனித்தனியே சந்நதிகள். அகோர சிவன், மருத்து வாசுரனை அடக்கத் தோன்றியவர். மருத்துவாசுரன் பிரம்மனிடம் வரம் பெற்று, தேவர்களை துன்புறுத்தி இன்பம் கண்டான்.

சிவபெருமான் அருளியபடி இவனது துன்புறுத்தலுக்கு அஞ்சி தேவர்கள் திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்து வந்தனர். தனது வரத்தால் தேவர்களை அடையாளம் கண்டு கொண்டு மருத்துவாசுரன் கொடுமைகள் பல செய்தான். கடைசியாக போர் புரியவும் தயாரானான். அரக்கனை அழிக்க வெண்காட்டீசர் நந்தி தேவரை ஏவினார். நந்தியிடம் தோற்றுப்போன அரக்கன் சிவனை வேண்டி கடும் தவமிருந்து சூலாயுதத்தை வரமாகப் பெற்றான். பிறகு நந்தி தேவரை போருக்கு அழைத்து சூலாயுதத்தால் ஒன்பது இடங்களில் நந்தி தேவரின் உடலில் குத்தி காயப்படுத்தினான்.

உடனே, நந்திதேவர் ஈசனிடம் முறையிட சிவன் சினம் கொண்டு கோபவடிவாகிய அகோர மூர்த்தி அவதாரம் எடுத்து அரக்கன் முன் தோன்றினார். சிவனின் சின ரூபத்தைக் கண்டு அஞ்சி சரணாகதி அடைந்தான், அரக்கன். சுவேதாரண்யேஸ்வரரின் நிருத்த மண்டபத்தில் காயம்பட்ட நந்தி தேவரையும், காலடியில் கிடக்கும் மருத்துவாசுரனின் சிலா ரூபத்தையும் காணலாம். அகோர வீரபத்திரரும், அகோர மூர்த்தியும் சிவனின் வெவ்வேறு மூர்த்தங்கள் ஆவார்கள். மாசி மாதம், கிருஷ்ணபட்சம், பிரதமை திதி, பூர நட்சத்திரம், ஞாயிறு இரவு 12.00 மணிக்கு அகோர மூர்த்தி அவதரித்தார்.

ஆண்டு தோறும் நடக்கும் திருவிழாவில் 5வது நாளில், அரக்கனை அடக்கிய நிகழ்வு கொண்டாடப்படும். அகோர மூர்த்தி சந்நதியை அடுத்து காட்சி நாயனார், சண்டேஸ்வரர், சுவேதலிங்கம் ஆகிய சந்நதிகளை தரிசித்து விட்டு கிழக்கே உட் பிராகாரத்தில் பைரவர், காசி துண்டி விநாயகர், துர்க்கை, நவகிரகங்களையும் தரிசிக்கலாம். இந்த துர்க்கையின் எழில் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. உலகிலேயே மிகத் தொன்மையான ஆலமர் செல்வனான தட்சிணாமூர்த்தி இங்குதான் அருள்கிறார். சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துப் பாதையில் உள்ளது. மயிலாடுதுறை அல்லது நாகப்பட்டினத்திலிருந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum