Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கவலையற்ற வாழ்வருளும் கடம்பவனேஸ்வரர்

Go down

கவலையற்ற வாழ்வருளும் கடம்பவனேஸ்வரர் Empty கவலையற்ற வாழ்வருளும் கடம்பவனேஸ்வரர்

Post by oviya Fri Dec 12, 2014 1:34 pm

குளித்தலை

அன்பருக்கு அன்பராய் விளங்கும் ஆதி பரம்பொருளான அரனார் உறையும் அருட்தலங்களுள் ஒன்று, கடம்பந்துறை எனப்படும் கடம்பர் கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் சிறந்த இந்த பதி கடம்பவனமாகத் திகழ்ந்ததாலும், சுவாமி, சுந்தரர் எனப் பெயர் கொண்டிருப்பதாலும், தேவசர்மா என்ற அந்தணனுக்கு சொக்கநாதர் - மீனாட்சியின் திருமணக்கோலம் காட்டியதாலும், ஆலவாய் எனப்படும் மதுரையம்பதிக்கு சரிநிகராகப் போற்றப்படுகின்றது. வடநாட்டில் உள்ள காசி க்ஷேத்திரத்தைப் போன்றே, தென்நாட்டில் வடக்கு நோக்கியுள்ள தலம் என்பதால் தட்சிணகாசி எனவும் அழைக்கப்படுகின்றது.

கந்தபுராணத்தின் உத்திரபாகத்தில் இத்தல மகிமைகள் சிறப்புற விவரிக்கப்பட்டுள்ளன. கண்வ மகரிஷிக்கு இத்தல ஈசன், கடம்ப மரத்தில் காட்சி அருளியுள்ளார்.
திருநாவுக்கரசர் தன் ஐந்தாம் திருமுறையில் இப்பதியின் மீது ஒரு பதிகம் பாடிப் போற்றியுள்ளார். சம்பந்தரும் சுந்தரரும் தனது க்ஷேத்திரக் கோவையில் இத்தல ஈசனை நினைந்துள்ளனர். ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்தடிகள் மற்றும் ராமலிங்க வள்ளலும் இத்தலபிரானை போற்றிப் பாடியுள்ளனர். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.

இப்பகுதியில் ஒரு சொல் வழக்கு உண்டு: காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி திருஈங்கோய்நாதர்! இப்பழமை மிகு கூற்றுப்படி, காலையில் கடம்பர் கோயில் கடம்பவனநாதரையும், மத்தியான வேளையில் ஐயர்மலை என்னும் திருவாட்போக்கி ரத்தினகிரீஸ்வரரையும், மாலையில் ஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரரையும் ஒரே தினத்தில் தரிசிப்பவர்கள் நிச்சயம் சிவகதியடைவர் என்பதாகும். முன்பொரு சமயம் உமா தேவியாருக்கு மகேசன் உபதேசித்த பிரணவப் பொருளின் அர்த்தத்தை குருமுகமின்றி மறைந்து நின்று கேட்டுவிட்டார் கந்தன்.

அதனால் கோபம் கொண்ட ஈசன் முருகனை மூகனாகும்படி (பேச்சற்றவராக) சபித்தார். அந்த சாபம் தீர ஆறுமுகன் பற்பல சிவத் தலங்களுக்கும் சென்று வழிபட்டார். எங்கும் சாபநிவர்த்தி கிட்டாத நிலையில் இக்கடம்பந்துறை ஈசனை வழிபட்டு விமோசனம் பெற்றார். உமையன்னையும் கந்தனை உச்சிமோந்து சிவபெருமான் அருகே அமரச் செய்தாள். அதன் காரணமாக இப்பதி கந்தபுரம் என்றும் போற்றப்பட்டது. ஒருமுறை துர்க்காம்பிகைக்கும் தூம்ர லோசனன் என்கிற அரக்கனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போரில் அரக்கனின் கை ஓங்கியிருந்தது.

அதனைக் கண்ட சப்தகன்னியர்கள் அரக்கனை மிகுந்த கோபத்துடன் எதிர்த்து போரிட்டனர். எழுவரது கணைகளின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அரக்கன் ஓடினான். அவ்வாறு ஓடியபோது கார்த்யாயன முனிவரின் ஆசிரமத்தினை அடைந்து அங்கு மறைந்து கொண்டான். துரத்தி வந்த சப்தகன்னியரும் அரக்கனே முனிவராக வேடம் தரித்திருக்கிறான் என்றெண்ணி முனிவரை வதைத்தனர். அதனால் அவர்களை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. எங்கு சென்றாலும் தீராத இந்த தோஷமானது கடம்பவன நாதரை தரிசித்து பூஜித்ததும் மறைந்தது.

அன்று முதல் சப்தகன்னியர் பூஜித்த முக்கியத் தலமாக இந்த கடம்பர் கோயில் விளங்குகிறது. இன்றும் இத்தல மூல கருவறையின் பின்புறம் சப்தகன்னியரின் திருவுருவங்கள் அருள்கின்றன. வடக்கு முகம் கொண்ட ஆலயம் இரண்டு திருச்சுற்றுகளைக் கொண்டு நாற்புறமும் ஓங்கிய மதில்கள் சூழ நடுநாயகமாக அமையப் பெற்றுள்ளது. திருக்கோயிலைச் சுற்றிலும் தேரோடும் அகன்ற வீதிகள் உள்ளன. கோயிலின் வடபுறம் சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் அகண்ட காவிரி ஓடுகின்றது. முன் மண்டபம் தூண்களோடு விளங்க, பின்னர் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாய் எழுந்து நிற்கிறது.

பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்திதேவரை தரிசிக் கிறோம். அங்கே மூடுதள மண்டபத்தை ஒட்டி அர்த்த மண்டபம், கருவறை அமைப்பிலான அம்பிகையின் தனிச்சந்நதி கிழக்கு முகமாகத் திகழ்கிறது. கருவறையுள் நின்ற வண்ணம் நமக்கு அபயமளிக்கின்றாள் பாலகுஜாம்பிகை. முற்றிலாமுலையம்மை என்றும் இந்த அன்னையைப் போற்றுகின்றனர், பக்தர்கள். அம்பிகையின் சந்நதி இருப்பது ஆலயத்தின் வெளிப்பிராகாரமாகும். வெளிப்பிராகார சுற்றில் அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனம் காட்சியளிக்கிறது.

கிழக்கில் வாகனக் கொட்டடியும், தீர்த்தக் கிணறும் உள்ளன. தென்கிழக்கில் மடப்பள்ளி உள்ளது. வடமேற்கில் நவராத்திரி மண்டபம் உள்ளது. வெளிச்சுற்றினை வலம் வந்து முடித்து, பின் இரண்டாம் வாயிலைக் கடந்து, உள் சுற்றுக்குள் நுழைகிறோம். நேராக சுமார் 4 அடி உயர கல் மேடை மீது சுவாமி சந்நதி அமைந்துள்ளது. படிகள் சில ஏறிச் சென்று, மகாமண்டபம், அர்த்தமண்டபம் என அடைந்து பரமேஸ்வரனை மனங்குளிர வணங்கிப் பணிகிறோம். தலைதாழ்த்தி வணங்கும் வண்ணம் மூலஸ்தானத்தில் சிறியதொரு லிங்க வடிவில் அற்புத தரிசனமளிக்கிறார், கடம்பவனேஸ்வரர்.

சுந்தரேசர், சௌந்தரேசர் என்றும் இவருக்குப் பெயர்கள் உண்டு. கடம்ப மரக்காட்டில் உதித்த இப்பெருமானை தரிசிப்பதே பெரும் புண்ணியமாகும். இவரை வணங்கி இவருக்கு பின்புறம் நோக்க, ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சப்த கன்னிகளை தரிசிக்கலாம். பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய மகிழ்ச்சியில் கருவறையிலேயே நிலைகொண்ட இந்த தேவியரின் தரிசனம் வேறு எந்த சிவாலயத்திலும் காணக் கிடைக்காத அற்புதக் காட்சியாகும். சப்தமாதர்களை குலதெய்வங்களாகப் போற்றும் ஈசனடியார்களுக்கு இத்தல தரிசனம் இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

வடகிழக்கில் தென்திசை நோக்கியபடி அம்பலவாணர் சந்நதி கொண்டுள்ளார். அருகே நவகிரகங்கள் உள்ளன. சண்டேசரும் இங்கே அமர்ந்த வண்ணம் வீற்றிருக்கிறார். தென்புறம் ஜேஷ்டாதேவி, நால்வர், சேக்கிழார் மற்றும் அறுபத்துமூவர் ஆகியோர் தரிசனம் அளிக் கின்றனர். வடபுறத்தில் கிழக்கே திருமுகம் காட்டியபடி தல கணபதி, சுப்ரமணியர், கஜலக்ஷ்மி ஆகியோர் தனித்தனியே சந்நதி கொண்டருள்கின்றனர். சோமாஸ்கந்த மூர்த்தியோடு பிற உற்சவ விக்ரகங்களும் தனி மண்டபத்தில் வீற்றருள்கின்றனர். காசி விஸ்வநாதரும் இங்கே லிங்க உருக்கொண்டு காட்சி தருகின்றார்.

கோஷ்ட மாடங்களில் கிழக்கில் கணபதியும், சுவாமிக்கு பின்புறம் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், வடக்கில் லிங்கோத்பவரும் திகழ்கின்றனர். இவ்வாலயத்தில் இரண்டு நடராஜ மூர்த்தங்கள். ஒரு நடராஜ மூர்த்தி முயலகன் மீதும் மற்றொரு மூர்த்தி முயலகன் இல்லாமலும் காட்சி தருவது புதுமையானது. இரண்டு சோமாஸ் கந்த மூர்த்தங்களும் உண்டு. சோழர்களால் எழுப்பப்பட்ட இக்கோயில் நாட்டுக் கோட்டை நகரத்தாரால் புனரமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் ஞானதீர்த்தம், பிரம்மதீர்த்தம் மற்றும் காவிரி நதி போன்றவை தல தீர்த்தங்களாக விளங்குகின்றன. தலவிருட்சமாக கடம்ப மரம் திகழ்கிறது.

அரசுக்குச் சொந்தமான இக்கோயிலில் ஆடிப்பூரம், நவராத்திரி மற்றும் கந்தசஷ்டி விழாக்கள் பத்து நாட்களுக்கு நடத்தப்படுகின்றன. கார்த்திகை சோமவாரங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, திருவாதிரைத் திருநாள், பங்குனி உத்திரம், அன்னாபிஷேகம், சிவராத்திரி, ஆனிமூலம், அருணகிரிநாதர் விழா ஆகியனவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. தைப்பூசத்தன்று காவிரிக்கரைக்கு எழுந்தருளும் கடம்பவனநாதரையும், அம்பாளையும் தரிசிக்க லட்சோபலட்சம் பக்தர்கள் அகண்ட காவிரிக்குத் திரள்கிறார்கள்.

அன்றைய தினம் விடிய விடிய வண்ண விளக்குகள் வாண வேடிக்கை களோடு ஆடல், பாடல், கச்சேரி, சொற்பொழிவு என நகரமே களை கட்டியிருக்கும்.
திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 31 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குளித்தலை பேருந்து நிலையத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum