Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


நம்பி வந்தோர் நலம் காக்கும் நம்பி

Go down

நம்பி வந்தோர் நலம் காக்கும் நம்பி Empty நம்பி வந்தோர் நலம் காக்கும் நம்பி

Post by oviya Sun Dec 07, 2014 8:39 am

ஒரு மிகப் பெரிய சிற்பக் கலைக்கூடத்துக்கு வந்துவிட்ட பிரமை, திருக்குறுங்குடி கோயிலுக்குள் நுழைந்தாலே ஏற்பட்டுவிடுகிறது. எங்கெங்கு நோக்கினும் கவினுறு சிற்பங்கள். கோபுரத்திலிருந்தே இந்த பிரமிப்பு நம்மைத் தொடர்கிறது. கோபுரத்தில்தான் எத்தனை நுண்ணிய சிற்பங்கள்! இவற்றைப் பராமரிப்பதற்குத் தனித்திறமை வேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. எண்ணிக்கையிலும் மிகுந்திருக்கும் இந்தச் சிற்பங்கள், இந்த கோபுரத்துக்கு ‘சித்திர கோபுரம்’ என்று பெயர் கொள்ள வைத்திருக்கின்றன.

கோபுரத்தைக் கடந்தால் நம்பாடுவானுக்காக நகர்ந்து நின்ற துவஜஸ்தம்பம், இன்றும் அதே கோணத்தில் நமக்கும் வழிவிட்டு ஒதுங்கி நிற்கிறது. இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் எல்லோரும் நம்பாடுவானைப் போல இந்தப் பெருமாள் புகழ் தவிர வேறு எந்தச் சொல்லையும் பேச வேண்டாம் என்பதை உணர்த்துவதுபோல இருக்கிறது இந்தக் காட்சி. மிகப் பழமையான வாத்தியக் கருவிகளை ஓரிடத்தில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கருவிகளெல்லாம் உற்சவங்களின்போது இசைக்கப்பட்டு பக்திப் பரவசத்தை அதிகரித்து பக்தர்களை மகிழ்விப்பதற்காகக் காத்திருக்கின்றன. பிரமாண்டமான காண்டாமணி ஒன்று தன் 700 வருட பாரம்பரியத்தை கம்பீரமாக வெளிப்படுத்துகிறது. பக்தி அதிர்வை உண்டாக்கும் வெறும் மணி அல்ல இது. தன் மேற்புறத்தில் வரலாற்றுக் குறிப்புகளைத் தாங்கி ஆலயத்தின் தொன்மையைப் பறைசாற்றுகிறது. அதில் காணப்படும் ‘செய்துங்க நாட்டுச் சிறைவாய் மன்னாதித்தன் தென் வஞ்சியான்...’ என்ற பாடல் வரிகள், செய்துங்க நாடு என்று வழங்கப்பட்ட திருச்செங்கோட்டு மன்னர்கள் இத்தலத்துக்கு அரும்பணிகள் பல செய்திருக்கிறார்கள் என்பதைச் சுட்டுகின்றன.

இதுமட்டுமல்ல, அழகிய நம்பியுலா பாடல் தொகுப்பில்,
பரவுதய மார்த்தாண்டம் பந்தற்கீழுண்மை
வருராம தேவமகராசன் தருபீடத்
துறப்பனமாய் பூமகளும் ஓங்கு நிலமகளும்
விற்பனமாய் நீங்காத மேன்மையான்

-என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது திருக்குறுங்குடி நம்பி எழுந்தருளியிருக்கும் பீடம், அவருக்கு மேல் உருவான பந்தல் இரண்டும் சேர மன்னர்களான உதய மார்த்தாண்டர் மற்றும் ராமவர்மன் இருவரின் அரும்பணிக்குச் சான்றுகள். பீடத்தில், அவ்வாறு இக்கோயிலுக்கு சீரிய பணியாற்றிய மன்னவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆலயத்துள் நின்ற கோலத்தினனாய், அமர்ந்த கோலத்தினனாய், சயனக் கோலத்தினனாய் குறுங்குடி நம்பியை மூன்று அர்ச்சா மூர்த்தங்களில் தரிசிக்கலாம். இந்த மூவர் தவிர, இங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பாற்கடல் என்ற ஒரு தலம் உள்ளது. இங்கே திருப்பாற்கடல் நம்பி அருள்பாலிக்கிறார். ஒரு அரக்கன், தன்னை உணவுக்காகக் கொல்ல முயன்றபோது, அந்தணன் ஒருவன் அவ்வாறு செய்வது அதர்மம் என்று முறையிட்டான். ஆனால், ‘அதுதான் என் தொழில், என்னைப் பொறுத்தவரை அதுவே என் தர்மம்,’ என்று அரக்கன் வாதாடினான். இருவரும் இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தபோது, திருமால் ஒரு வேடனாக அவர்களிடம் வந்து, அவர்களை சமாதானப்படுத்தி, அவ்விருவருடைய கடமைகளை அறிவுறுத்தினார். இருவருக்கும் ஜன்ம சாபல்யம் கொடுக்க விரும்பிய அவர், அவர்களை திருப்பாற்கடலில் நீராடுமாறு பணித்தார். அவ்வாறே அவர்கள் செய்து மோட்சம் ஏகினார்கள். பெருமாளும் அங்கே கோயில் கொண்டார். இதுதான் திருப்பாற்கடல் தலத்தின் புராணம். திருப்பாற்கடல் எனப்படும் இந்த ஆற்றின் நடுவே ஒரு பெரிய பாறையும் அதன் மீது ராமானுஜர் சந்நதியும் அமைந்துள்ளன. இந்தப் பாறை வட்டப்பாறை என்றழைக்கப்படுகிறது.

அதேபோல திருக்குறுங்குடியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் காணப்படும் ஒரு குன்றின் மீதும் ஒரு நம்பி சேவை சாதிக்கிறார். இவரை திருமலை நம்பி என்றழைத்து பக்தர்கள் போற்றுகிறார்கள்.
பிரம்மோற்சவத் திருவிழாவின்போது இந்த ஐந்து பெருமாள்களின் உற்சவ மூர்த்திகளையும் ஒருசேர தரிசித்து மகிழலாம்; நற்பேறடையலாம். இயல், இசை, நாடக அம்சங்கள் நிறைந்த கைசிக ஏகாதசி நிகழ்ச்சி, சிறப்பாக நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கான அதே முக்கியத்துவம் இந்த கைசிக ஏகாதசிக்கும் கொடுக்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டுபவர்கள் அதற்கு முன் 45 நாட்கள் கடுமையான விரதத்தை அனுசரித்து அப்புறம்தான் அந்தந்த கதாபாத்திரங்களாக நடித்துக் காட்டுகிறார்கள்.

தாயார் குறுங்குடி வல்லி நாச்சியார் என்ற பெயரில் தனியே சந்நதி கொண்டிருக்கிறாள். வராக அவதாரத்தின்போது, தன் பிராட்டியுடன் ஒரு சிறு குடிலில் பகவான் தங்கியிருந்ததாலும் தன் நெடிய உருவத்தைக் குறுக்கிக் கொண்டதாலும் இத்தலம் குறுங்குடி என்றழைக்கப்பட, தாயாரும் குறுங்குடி நாச்சியாரானார். அன்னை, பெருமாளுக்குச் சற்றும் குறைவிலாதபடி அருள் வழங்கி பக்தர்களுக்குப் பவித்திரம் சேர்க்கிறார். வராகரின் மடியில் அமர்ந்தபடி, கைசிக புராணத்தை வராகர் சொல்லக்கேட்டுப் பெரிதுவந்து, தானும் பூலோகத்தில் ஏதேனும் ஒரு வகையில் பரந்தாமனின் புகழ் பரப்ப வேண்டுமென்று விரும்பினார், தாயார். அதன் விளைவாகவே ஸ்ரீவில்லிப்புத்தூரில், பூமித்தாயின் குழந்தையாக, ஆண்டாளாக அவதரித்தார். அதாவது ஆண்டாளின் அவதாரம் நிகழ இந்த திருக்
குறுங்குடி மூல ஆதாரமாக இருந்திருக்கிறது.

திருக்குறுங்குடி நம்பிகளை தரிசனம் செய்வது என்பது வெறும் அர்ச்சாவதார தரிசனமாக இருக்காது; பெருமாளை அப்படியே உயிரோட்டமாக, உணர்வுபூர்வமாக சந்திப்பதாகவே இருக்கும். ஆமாம், பட்டர் தீபாராதனைத் தட்டை மேல் தூக்கி நம்பிகளின் முகத்தருகே கொண்டுபோகும்போது, அந்தச் சிலையின் விழிகள் அசைவது நம்மை அப்படியே சிலிர்க்க வைக்கும். என்ன மாயம் இது! பகவான் நம்மைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான் என்பதற்கான அறிகுறி இதுதானா? இடமிருந்து வலமாக தீபம் அசையும்போதும் மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்று போகும்போதும், அந்த ஒளியில் மின்னும் பெருமாளின் விழிகள் அந்தந்த திசை நோக்கித் திரும்புவதை பார்த்து அனுபவித்துதான் உணர முடியும். அதை நம்ப முடியாமல் கண்களைக் கசக்கிக்கொண்டு மறுபடி நம்பிகளைப் பார்த்தால், தன் தாமரை மலர்க் கண்களால் அவர் சிரிக்கிறார். அது தீபாராதனையின் ஒளி மாயமோ, தேர்ந்த சிற்பியால் வடிக்கப்பட்ட அந்தக் கண்களின் பளபளப்பு மாயமோ, எதுவாயினும் சரி, ‘‘என்ன சௌக்கியமா?’’ என்று கேட்கும் அந்தப் பார்வை அதிசயமானதுதான், அபூர்வமானதுதான். தரிசனம் முடித்துத் திரும்பும்போது தற்செயலாக மறுபடி அந்தக் கண்களை ஒரு நேர்க்கோட்டு வீச்சில் கவனிக்கும்போது, ‘‘போய்வா, சந்தோஷமாக இருப்பாய்,’’ என்று ஆசிகூறும் ஒளியை சந்திக்க முடிகிறது!

பேரழகுடன் திகழும் இந்த நம்பியை அழகிய மணவாளப் பெருமாள் என்ற ஆசார்யன், ‘வைஷ்ணவ வாமனத்தில், நிறைந்த நீலமேனியின் குசிஜநக விபவ லாவண்யம் பூர்ணம்’ என்று வர்ணிக்கிறார். அதாவது ‘வைஷ்ணவ வாமனம்’ என்ற இந்தத் திருக்குறுங்குடியில், ‘குசிஜநக’ என்ற வகையில் மேன்மேலும் அனுபவிக்கத் தூண்டும் இன்பச் சுவையை உண்டாக்கும் பேரழகுடையவன் இந்த எம்பிரான் என்று பொருள் கொள்ளலாம். விபவ லாவண்யம் என்பது திருமாலின் அவதாரங்களில் பொலியும் அழகு என்பதாகப் பொருள்படும்.

நின்ற நம்பி சந்நதிக்கும் கிடந்த நம்பி சந்நதிக்கும் இடையே நம்மைக் கவரும் ஒரு சந்நதி நம் புருவங்களை உயர்த்துகிறது. ஆமாம், அது சிவபெருமானுக்கான சந்நதி! மகேந்திரகிரீஸ்வரர் என்று வணங்கப்படும் இந்த ஈசன், அடியார் அனைவருக்கும் அற்புத அருள் வழங்குகிறார். மகேந்திர மலை அடிவாரத்தில் இந்தக் கோயில் அமைந்திருப்பதால் ஈசனுக்கு அந்தப் பெயர்.

சைவ-வைணவ ஒற்றுமைக்கு இந்தக் கோயில் மிகச் சிறந்த ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. பகவத் ராமானுஜரின் வம்சாவழியினர் இந்தக் கோயிலை நிர்வகித்து வருகிறார்கள் என்றாலும், சம்பிரதாய, தினசரி வழக்கமாக, அன்றிலிருந்து இன்றுவரை ஜீயர் பொறுப்பேற்றிருக்கும் தலைவர், ‘சுவாமிகள் பக்கம் நின்றோர்க்குக் குறை ஏதும் உண்டோ?’ என்று அன்புடன் விசாரிக்கிறார். அதாவது சிவனடியார்களுக்கும் சிவ பக்தர்களுக்கும் தரிசனம் முதலான எல்லா அம்சங்களும் முழுமையாக நிறைவேறுகின்றனவா என்ற கரிசனம் மிகுந்த உபசரிப்பு அது! இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம், இந்தக் கோயிலில் இருக்கும் மடப்பள்ளி. இங்கே பெருமாள், பரமசிவன் இருவருக்கும் சேர்த்தே நிவேதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பெருமாள் பிரசாதங்கள் சிவ பக்தர்களுக்கும் சிவன் பிரசாதங்கள் பெருமாள் பக்தர்களுக்கும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்படும் அற்புத ஒற்றுமையைக் கண்டு கண்களில் நீர் பெருகுகிறது.

ஒரு வைணவக் கோயிலின் சம்பிரதாயமாக கருடாழ்வார், ஆண்டாள் போன்றோரும் தம் சாந்நித்தியத்தால் இங்கு மேன்மைபடுத்துகிறார்கள். பிராகாரத்தைச் சுற்றி வரும்போது பிரமாண்ட உருவினராக நமக்கு தரிசனம் தருபவர் - கால பைரவர். ஆமாம், சிவ அம்சமான பைரவர்தான். பொதுவாகவே சிவன் ஆலயங்களில் பைரவர் அந்தக் கோயிலைக் காக்கும் தெய்வமாகவே வணங்கப்படுவார். இரவில், பூஜைகளை முடித்துவிட்டு, கோயிலைப் பூட்டி, சாவியை பைரவரிடம் சமர்ப்பித்துவிட்டுச் செல்வதும் மறுநாள் காலையில், அவரிடமிருந்து சாவியைப் பெற்றுக் கொண்டு கோயிலைத் திறப்பதும் நடைமுறை. அந்தவகையில், இங்குள்ள காலபைரவர், பெருமாளுக்கும் காவலராகப் பணிபுரிகிறார் என்றே சொல்லலாம். பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை சிவபெருமான் இந்தத் தலத்தில்தான் போக்கிக்கொண்டார் என்பதால், அவருடைய அம்சமான பைரவர், அந்த நற்பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாறு காவல் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

விழியசைத்து வியப்பளிக்கும் பெருமாளைப் போலவே, கால பைரவரும் தன் மூச்சிழையால் பக்தர்களின் மனதில் பரவசத்தைப் பரப்புகிறார். ஆமாம், இந்த பைரவருக்கு இடது பக்கத்தில் ஒரு விளக்குத் தூண். இதன் மேல் பகுதியில் ஒரு விளக்கு, கீழ்ப் பகுதியில் இன்னொரு விளக்கு. இவை தவிர இரண்டு சர விளக்குகளும் உண்டு. இந்த நான்கு விளக்குகளிலும் தீபம் ஒளிசிந்தி பைரவரின் முழு ரூபத்தையும் தெளிவாகக் காட்டுகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால், மேலே உள்ள விளக்கின் ஜ்வாலை, காற்றுபட்டால் அசையும் தீபம் போல அலைவதுதான், ஆனால் பிற மூன்று விளக்கு ஜ்வாலைகளும் சீராக எந்தச் சலனமுமில்லாமல் எரிந்து கொண்டிருக்கின்றன. மேல் விளக்கு ஜ்வாலை மட்டும் அசைவானேன்? அது பைரவரின் மூச்சுக் காற்று ஏற்படுத்தும் அசைவு! மூச்சு இழுக்கும்போது ஜ்வாலை அவரை நோக்கித் திரும்பியும் விடும்போது எதிர்திசையில் விலகியும் அசையும் சலனம்! விஞ்ஞானபூர்வமாக சிந்திக்கவும் காரணம் கண்டுபிடிக்கவும் இயலாத தெய்வீகம். பிரமிப்பில் விரியும் விழிகள் இமைக்க மறப்பது அனுபவபூர்வமான உண்மை.

மதுரை அழகர் கோயிலில் காவல் தெய்வமாக விளங்கும் 18ம் படி கருப்பண்ண சாமிபோல இந்த பைரவர் திகழ்கிறார் என்று சொல்கிறார்கள். இவருக்கு வடைமாலையும் பூச்சட்டையும் சாத்துவது பிரதான பரிகார வழிபாடாக மேற்கொள்ளப்படுகிறது. வடைமாலை என்றால் ஆஞ்சநேயருக்குத் தோளில் சாத்துவார்களே அதுபோல அல்ல; மிகப்பெரிய ஒரு அளவில் வடையாகத் தட்டி அதை நிவேதனம் செய்யும் முறைதான் இது.

இந்த பைரவர் 75 சதவீதம் கல்லாலும், மேலே 25 சதவீதம் சுதையாலும் ஆன சிற்பம். மூலிகை வண்ணத்தால் இவருக்கு அழகு தீட்டியிருக்கிறார்கள். 300 வருடங்களாகியும் அந்த வண்ணங்கள் வெளிராமலும் மெருகு குலையாமல் இருப்பதும் அதிசயம்தான். இவருக்குத் தயிரன்னம் நிவேதிக்கப்படுகிறது. திருமண வரம் வேண்டியும் மழலைப் பேறு கோரியும் வரும் பக்தர்கள் இவர் அருளாசியால் அந்த பாக்கியங்களைப் பெற்று மகிழ்கிறார்கள்.

பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர், பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் தவிர, புகழேந்திப் புலவர், ஒட்டக்கூத்தரும்கூட இந்தத் திருக்குறுங்குடித் தலத்தைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

வானமாமலை திவ்ய தேசத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது, திருக்குறுங்குடி. திருநெல்வேலி-நாகர்கோயில் பாதையில் வள்ளியூரில் இறங்கியும் இத்தலத்தை அடையலாம்.
படங்கள்: முத்தாலங்குறிச்சி காமராசு, எம்.என்.எஸ்.
(அடுத்து ஸ்ரீரங்கம்
ரங்கநாதரை தரிசிக்கலாம்)

திருக்குறுங்குடி சென்று நம்பியை தரிசனம் செய்யும்வரை கீழ்க்காணும் அவருடைய தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:
ஸ்ரீமத் க்யாத குரங்க நகரே திஷ்டந் ஸ்வபந் ஸஞ்சரந்
ஆஸீநச்ச தராதராக்ர விலஸத் தேவஸ்ஸ பூர்ணாஹ்வய:
தாத்ருங் மந்திர நாயிகாஞ்சந ஸரஸ் தீர்த்தம் சபஞ்சக்ரஹா
க்யாதம் தத்ர விமாந மீசகஜ யோஸ் ஸாக்ஷாத் க்ருத: ப்ராங் முக:
- ஸ்ரீ விஷ்ணு ஸ்தலாதர்சம்
பொதுப் பொருள்: திருக்குறுங்குடி என்னும் இத் திவ்ய தேசத்தில் நின்ற நம்பி, கிடந்த நம்பி, இருந்த நம்பி, மலைமேல் நம்பி, பூர்ண நம்பி ஆகிய திருப்பெயர்களுடன் திகழும் எம்பெருமானே நமஸ்காரம். குறுங்குடிவல்லி நாச்சியாருடன், பஞ்சக்கிரஹ விமான நிழலில், அஞ்சன புஷ்கரணிக் கரையில் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் திகழும் பெருமாளே நமஸ்காரம். சிவபிரானுக்கும் கஜேந்திரனுக்கும் காட்சி கொடுத்தருளியதுபோல எங்களுக்கும் காட்சி நல்கி வாழ்வளிக்கும் பெருமாளே நமஸ்காரம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum