Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


வித்தகக் கூத்தன் வித்தகக் கூத்தன்

Go down

வித்தகக் கூத்தன்   வித்தகக் கூத்தன் Empty வித்தகக் கூத்தன் வித்தகக் கூத்தன்

Post by oviya Tue Dec 09, 2014 1:42 pm

தில்லைக்கூத்தன், தென்பாண்டி நாட்டான், நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ்சென்னியான் அம்பலத்தே நின்று ஆடுகின்றபோது அவனைத் தரிசித்தால், வியப்பு நம்மை விழுங்கிவிடும். ஏனெனில் அம்பலக்கூத்தனின் அணிமணிகள் அனைத்தும் வித்தியாசமானதாக, வேறுபட்டதாகவே காணப்படும். இப்படி அவன் வித்தியாசமான அணிகளைப் பூண நேர்ந்தது எப்படி? அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. தவம் செய்வதனால் பண்பாடு மேம்படும். வல்லமை வளர்ச்சியுற்றிருக்கும். ஆனால், தாருகாவனத்தின் ரிஷி புங்கவர்களுக்கோ, கர்வத்தையும் சேர்த்தல்லவா வளரப் பண்ணியிருந்தது! கடும் தவம் இயற்றி, அருந்தவப் பேற்றினைப் பெற்றிருக்கிறவர்கள், கர்வம் கொண்ட காரணத்தினால் அதை இழந்துபோய்விடக் கூடாது என்று எண் ணிய முழுமுதற் கடவுள், நாடகம் ஒன்றினை அரங்கேற்றம் செய்தான்.

திருஆமாத்தூரில் அரனின் திருநாமம் அழகியநாதர் என்பதாகும். அழகியநாதர், அழகுச் சுந்தரனாகவே மாறி தாருகா வனத்துள் அடியெடுத்து வைத்தான். ரிஷி பத்தினிகள் அனைவரும், தத்தமது கணவரைப் போன்றே திட பக்தியும் திடபுத்தியும் கொண்டவர்கள். கணவரைத் தெய்வமெனப் போற்றுகின்ற உத்தமப் பெண்மணிகள். ஆனால், தாருகா வனத்துள் மாசற்ற ஜோதியாய், மலர்ந்த மலர்ச்சுடராய், ஆதி அந்தமற்ற சுந்தரநாயகன் அடி எடுத்து வைத்ததும் அவன் அருளினா லேயே பொய் மயக்கம் கொண்டனர். பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனைப் பின்தொடர்ந்து போகலாயினர்.

இதனைக் கண்ட ரிஷிகளால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அரனை அழித்தே விடவேண்டும் என்கிற ஆவேசப் புயலாய் மாறினர். உலகெலாமுணர்ந்து ஓதற்கரியானை அழிக்கப் புறப்பட்ட தாருகா வனத்து ரிஷிகள் அதர்வ வேத ஹோமம் வளர்த்தனர். மந்திர உச்சாடனங்களால் அரனை நசுக்கப் பார்த்தனர். சிவனை அழித்துவிடும் என்று நம்பிய மந்திரங்கள் அழகிய அணிகலனாய் மாறி, ரிஷி புங்கவர்கள் மயங்கும் வண்ணம் அரனை அலங்கரிக்கலாயின. இதனைக் கண்ணுற்ற ரிஷிபுங்கவர்கள், திகைத்துத் திணறிப் போய்விட்டனர். யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்ட முயலகன் என்னும் அசுரன், பகவானின் பாதங்கள் பட்டதுமே சிதைந்தான். விஷத்தைக் கக்கியவாறு வெளிப்பட்ட அரவங்கள், அணிமாலைகளாகி அவனை அலங்கரிக்கலாயின.

வெளிப்பட்ட மானை வாமன வடிவமாகக் குறுக்கி, ஒரு கரத்திலே ஏந்திக் கொண்டான். ஆழியன்ன பெரு நெருப்பை மற்றொரு கரத்திலே சிறை வைத்தான். தோற்றுப் போன ரிஷிகள் கர்வம் களைந்து திருந்தினர். தாருகா வனத்து ரிஷிகளுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்ட ஆலமர் செல்வன், இப்படி அம்பல வாணனாக, நட்டம் பயின்றாடும் நடராஜப் பெருமா னாக, கலைகளில் சிறந்த ஆடற்கலைக்குப் புதிய கோலம் கொண்டு நின்றான். ஆடல் வல்லானின் ஒவ்வொர் அம்சமும், ஒவ்வொர் அர்த்தத்தை உள்ளடக்கியதாகும். சிலையினது ஆரத்திலே இடம் பெறுகின்ற 27 புள்ளிகளும் 27 நட்சத்திரங்களின் குறியீடு ஆகும். இருபுறமும் பரவி விரிந்திருக்கின்ற ஜடா முடிகள்தாம் திசைகள்.

ஆடலரசனின் அழகுத்திருமேனியே பிரபஞ்சம். கையில் சுழல்கின்ற ஸ்வஸ்திக் சக்கரம்தான் உயிர்த் துடிப்பு! இப்படி எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டுள்ள ஆடலரசு, சூரிய, சந்திரர்களையும் அணிகளாய்ச் சூடி அழகே வடிவாய்க் காட்சி அளிக்கின்றான். அவனருளாலே அவன் தாளை வணங்கிப் போற்றும் அடியவர்கள், சிவதாண்டவம் 108 என்று கணக்கிட்டுக் கூறுவர். இந்த 108ல், கொடு கொட்டி எனும் சிவன்கூத்தும் ஒன்றாகும். இதை, குமரனாடல் என்றும் கூறுவார்கள். கொடு கொட்டி ஓர் இணை தோலிசைக் கருவி. அடியில் குறுகி, முகம் படர்ந்து காணப்படும். மென் தோலால் மூடப்பெற்ற கருவி, தொப்பி எனப்ப டும். சற்றுப் பெரிதாய்க் காணப்படும் கடினமான தோலினால் மூடப்பெற்ற வளந்தலைப் பகுதி சற்றுச் சிறியதாய் இருக்கும்.

இரு கருவிகளும் இணைந்து ‘தொம்.... தொம்! தா... தா!’ என்று ஒலிக்க ஆரம்பித்தால், ஆட்டம் தானே வந்துவிடும். கொடு கொட்டி அத்துணை இசைவான கருவி, பாரி நாயனத்தின் பக்க வாத்தியம் இது! வாத்தியங்கள் 18ல் இதுவும் ஒன்றாகும். திருவாரூர் தியாகேசர் ஆலயத்தில் தற்போதும் கொடு கொட்டி இசைக்கப்படுகிறது. அப்பர் பெருமானின் பல தேவாரப் பாடல்களில் ‘கொடு கொட்டி’ பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. திரு ஆமாத்தூர் சென்று அழகியநாதரையும் அழகியநாயகியையும் தரிசிக்கும்போது, திருக்குறுந்தொகையாகப் பத்துப் பாடல்களையும் திருத்தாண்டகம் பத்துப் பாடல் களையும் பாடி அருளியுள்ளார்கள்.

திருத்தாண்டகம் ஆறாவது பாடலில், ‘குழை ஆடக் கொடு கொட்டி கொட்டா வந்து..’ என்று பாடியுள்ளார். சிவன் கூத்திற்கே உரிய கொடு கொட்டி, இதன் பத்தாவது பாடலிலும் பாடப் பெற்றுள்ளது:

‘‘மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும்
மணிமிழலை மேய மணாளர் போலும்
கொழுங்குவளைக் கோதைக்கு இறைவர்
போலும்
கொடு கொட்டி தாளம் உடையார் போலும்
செழுங் கயிலாயத்து எம் செல்வர் போலும்
தென் அதிகை வீரட்டம் சேர்ந்தார் போலும்
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே!’’
- திரு ஆமாத்தூர் திருத்தாண்டகம் - பாடல் 10.

திருநீறு அணிந்த பொலிவு நீங்காத மார்பினன். திருவீழிமிழலையில் சுந்தர குசாம்பிகையின் மணாளன் இந்த வீழியழகர் பெருமான். திருக்குவளைக் கோதையின் இறைவன். இவன் விரும்புவது கொடு கொட்டித் தாளம். செழித்த வனப்பு மிக்க கைலாயத்தின் அருட்செல்வன் இவனேயாம். திருவதிகை வீரட்டத்திலே வீரட்டேசுவரராக வீற்றிருப்பவன். அழுது வருந்துபவரது ஐயங்களை அகற்றி அணைத்துக் கொள்பவன் இந்த திரு ஆமாத்தூர் அழகிய நாதர்.

ஆடும் அரனுக்கு, ‘தொம்... தொம்...’, ‘தா... தா...’ என்று முழங்கி, ஆடுவதற்கு உதவி செய்கின்ற வாத்தியத்தின் மீது பற்றிருப்பது நியாயம்தானே! மணிவாசகப் பெருமானும் திருப்பெருந்துறை இறைவனை, ‘ஆனந்தக் கூத்தன்’ என்று தானே பாடி, ஆடல் நாயகனாய் நம்மைத் தரிசனம் பண்ணச் சொல்கின்றார். சிலப்பதிகாரம் தந்த இளங்கோ அடிகளும் இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் எனும் கொடு கொட்டி ஆட்டம் எப்படி இருந்தது என்று
அற்புதமாய் வர்ணிக்கின்றார்:

‘‘திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும்
செங்கண் ஆயிரம் திருக்குறிப்பருளவும்
செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை ஒலியாது மென்முலை அசையாது
வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது
உமையவள் ஒருதிறனாக ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச்சேதம்...’’
சிலப்பதிகாரம் - நடுகற் காதை.

அழகு நிலை பெற்றிருக்கின்ற சிவந்த அடியின் கண் அணிந்துள்ள, சிலம்பு புலம்பி நாதமெழுப்பிட, சிவந்த கையிலே ஏந்திய ஒலிபடுகின்ற தடி முழங் கிட சிவந்த கண்கள் எண்ணிறந்த கருத்துகளை வெளியிட்டருளிட, செஞ்சடை பறந்து சென்று எண் திசைகளையும் துளாவிட, பரமசிவன் ஆடுகின்றான். பாடலின் முதல் நான்கு வரிகளும் சொல்கின்ற செய்திகள் இவை. சிவன் கூத்தாடுதலை விவரிக்கின்றன. அடுத்த ஐந்து வரிகளோ ஆச்சர்யப்பட வைக்கின்றன. அரனின் அடுத்த பாதியாய் நிற்கும் அம்மையின் திருப்பாதச் சிலம்பு அசையாமலும் கையினை அணி செய்கின்ற வளையல்கள் குலுங்கி ஒலிக்காமலும் இடையணி மேகலை ஒலி சிந்தாமலும் மென் முலையானது அசைவற்றும் நீண்ட காதணியாகிய தோடு அசைவே இல்லாமலும் நீலமணி போலும் நிற முடைய கூந்தல் அவிழாமலும் அல்லவா காணப்படுகின்றன.

ஆம், எத்தகைய விந்தையான ஆட்டமாய் இருக்கிறது! அம்மை பாதி, அப்பன் பாதியாய் அர்த்த நாரீஸ்வரக் கோலத்தில் அரன் இருக்கின்றான். இதிலே அப்பனாம் வார்சடைக் கடவுளின் திருமேனிப் பகுதி மட்டும் புயலெனச் சுழன்றாடுகின்றது. உமையவள் நிலை கொண்ட திருமேனிப்பகுதியோ அசைவே இல்லாமல் அப்படியே இருக்கின்றது. ஈருடல்கள் ஓருடலாய் இணைந்திருக்கும்போது, அதிலே ஒருபாதி உடல் மட்டும் உன்மத்தம் கொண்டாற்போல் ஆடுவதும் அடுத்த பாதி உடல் அசை வற்று இருப்பதும் சாத்தியம்தானா? சாத்தியம்தான் என்று இறைவன் ஆடிக்காட்டுகிறான். மனிதனாலும் இயலும் என்று இளங்கோ அடிகள் சொல்கின்றார்.

இறையனார் ஆடிய கொட்டிச் சேதம் எனும் கொடு கொட்டிச் சிவன் கூத்தை, கூத்தச் சாக்கையன் என்பான், அர்த்தநாரீஸ்வர வேடம் புனைந்து சேரன் செங்குட்டுவன் அவையிலே ஆடிக் காண்பித்திருக்கின்றான் என்கிறார் இளங்கோ அடிகள்! 108 சிவதாண்டவத்துள், இக்கூத்து மட்டும் வித்தகக் கூத்தாக விளங்குகிறது. சுழன்று கொண்டிருக்கும் உலகில், ஒரு பால் இயக்க நிலையில் பொருட்கள். மறுபால் அசைவற்ற நிலையில் பொருட்கள். இந்தப்பிரபஞ்ச இயக்க ரகசியத்தைச் சங்கேதமாகச் சொல்கிறதோ இக்கூத்து? தாருகா வனத்து ரிஷிகளால் ஆடும் சபேசனுக்கு விந்தையான அணிகள் கிடைத்தன; அவன் ஆடும் கொடு கொட்டி ஆட்டத்தால் விந்தை உலகின் இயக்க ரகசியம் வெளிப்படுகின்றது!

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum