Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மணப்பேறும் மகப்பேறும் அருளும் சுதர்சனர்

Go down

மணப்பேறும் மகப்பேறும் அருளும் சுதர்சனர் Empty மணப்பேறும் மகப்பேறும் அருளும் சுதர்சனர்

Post by oviya Tue Dec 09, 2014 1:49 pm

கரிசூழ்ந்த மங்கலம்

தாமிரபரணி ஆற்றின் கரையில் வரலாற்றுப் பெருமையும் புராணப் பின்னணியும் கொண்ட எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இவற்றை தாமிரபரணி மகாத்மியம் என்ற நூல் விரிவாக விளக்குகிறது. அப்படி அமைந்த ஒரு கோயில்தான் கரிசூழ்ந்த மங்கலம் சுதர்சன நரசிம்ம சுவாமி ஆலயம். இங்கே உற்சவராக வெங்கடாசலபதி அருள்கிறார். இப்பகுதி மக்கள் இந்த ஆலயத்தை உற்சவர் பெயராலேயே வெங்கடாசலபதி கோயில் என்றே குறிப்பிடுகின்றனர். இவ்வூரிலுள்ள சிவாலயத்தில் பாண்டிய மன்னர்களான ஜடாவர்ம சுந்தர பாண்டியன் 9, 10ம் ஆட்சி யாண்டு மற்றும் மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னனின் 3வது ஆட்சியாண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில், இந்த ஊரை தென் திருவேங்கடம், குல
சேகரமங்கலம், முள்ளிநாட்டு அமலலாஜபுரி சதுர்வேதி மங்கலம் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டுகளின்படி இறைவன் திருவேங்கடநாதர் என்றும் தென் திருவேங்கட விண்ணகர் எம்பெருமாள் என்றும் தென் திருவேங்கடமுடைய நாயனார் என்றும் போற்றப்பட்டுள்ளார். ஊரைச் சுற்றிலும் இருந்த நெல் மற்றும் கரும்பு வயல்களை நோக்கி வந்த கரிகள் (யானைகள்) கிராமத்தைச் சூழ்ந்து கொண்டதால் கரிசூழ்ந்த மங்கலம் என்ற பெயர் வந்திருக்கலாம் என்கின்றனர். ஒரு காலகட்டத்தில் கலிஜெயமங்கலம், கலிசேகர மங்கலம் என்ற பெயர்களில் வழங்கப்பட்டு தற்போது கரிசூழ்ந்த மங்கலம் என்றே அழைக்கப்படுகிறது. சலசலத்து ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையில், சுற்றிலும் நெல் வயல்கள் சூழ்ந்த அமைதியான சூழலில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, சுதர்சனப் பெருமாள் ஆலயம். திருமாலின் பஞ்சாயுதங்களில் சுதர்சனம் என்கிற சக்கரத்தாழ்வாருக்கு தனிப் பெருமையும் ஏற்றமும் உண்டு.

இந்த ஐந்தும் ஆயுதங்களாக மட்டுமின்றி, பெருமாளுக்கு ஆபரணங்களாகவும் விளங்குகின்றன. அனைத்து திருமால் திருவுருவங்களிலும் பின் வலக்கரத்தில் சக்கரத்தையும், இடக் கரத்தில் சங்கையும் தரிசிக்கலாம். இந்த ஐந்து ஆயுதங்களில் சுதர்சனத்தை வைணவர்கள் சுதர்சன ஆழ்வார் என்றே போற்றி வணங்குகின்றனர். பெரும்பாலான வைணவ ஆலயங்களில் சுதர்சன ஆழ்வாருக்கு தனிச் சந்நதி உண்டு. அறு கோண சக்கரத்திற்குள், ஜ்வாலா (தீச்சுவாலை) மகுடத்துடனும், திருக்கரங்களில் திவ்ய ஆயுதங்கள் ஏந்தியும் அச்சமூட்டும் விழிகளுடன் காட்சியளிக்கிறார் சுதர்சனர். மேலும், இவரது பின்புறத்தில் நான்கு கரங்களிலும் சுதர்சனத்தை ஏந்தி, யோக பட்டத்துடன் யோக நிலையில் நரசிம்மர் காட்சி தருகிறார்.

சுதர்சனரை முதலில் தரிசித்துவிட்டு, வலமாகச் சென்று பின்புறமுள்ள பலகணி வழியாகச் சென்று யோக நரசிம்மரை தரிசிப்பதுதான் வழக்கம். சுதர்சனரையும் யோக நரசிம்மரையும் வழிபட்டால் சகல விஷயங்களிலுமுள்ள அச்சங்கள் தீர்ந்து, மனோ தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். சுதர்சனருக்கு ஏராளமான துதிகளும் வழிபாட்டு முறைகளும் ஹோமங்களும் உள்ளன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த சுதர்சனர் பரிவார தேவதையாக இல்லாமல் கருவறையிலேயே மூல மூர்த்தியாக எழுந்தருளியிருக்கின்ற தலம்தான் கரிசூழ்ந்த மங்கலம் ஆகும். ஆலயத்திற்கு வெளியிலேயே பலிபீடமும், கொடிமரம் இருந்ததற்கான பீடமும் உள்ளன. கோபுரம் கிடையாது.

நுழைவாயிலின் மேல் சுதர்சன மூர்த்தியும் அவருக்கு இரு பக்கங்களிலும் அனுமன் மற்றும் கருடனின் சுதை உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்தால் அழகிய வேலைப்பாடுகளோடு புடைப்புச் சிற்பங்களை கண்டு ரசிக்கலாம். உள்ளே கருவறைக்கு முன்னாலுள்ள அர்த்த மண்டபத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக உற்சவர் வெங்கடாசலபதி அருள்பாலிக்கிறார். மிக அழகான செப்புத் திருமேனிகளான இவை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் ஒரு புறத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், நாகர் நடுவே நவநீத கிருஷ்ணன் சிலைகள் உள்ளன.கருவறையில் சுதர்சனர், வட்ட வடிவிலான திருவாசியினுள் 16 கரங்களோடு பல்வேறு திவ்ய ஆயுதங்களை ஏந்தி அருள்பாலிக்கின்றனர்.

சுதர்சனருக்கு பின்புறம் நான்கு கரங்களோடு யோக நரசிம்மர் காட்சியளிக்கிறார். நரசிம்மரின் நான்கு கரங்களில் சுதர்சன சக்கரங்கள் திகழ்கின்றன. பிற ஆலய சுதர்சனர் சந்நதிகள் போன்று இங்கு யோக நரசிம்மரைத் தரிசிக்க பின்புற பலகணி இல்லை. மாறாக அவரை தரிசிக்கும்படியாக நிலைக்கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நரசிம்மருக்கு ஆரத்தி காண்பிக்கும்போது மட்டுமே கண்ணாடியில் பிரதிபலிக்கும் நரசிம்மரைக் கண்டு வணங்கலாம். சுதர்சனருக்கு எண்ணெய்க் காப்பு செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. தாராளமாக எண்ணெய் சாத்தினாலும், அந்த எண்ணெய் முற்றிலும் உறிஞ்சப்படுகிறதோ என்று அதிசயிக்கத்தக்க வண்ணம், சிறிது நேரத்தில் திருமேனியில் எண்ணெய் பளபளப்பே இருப்பதில்லை. உயிரோட்டமுள்ள விக்ரகங்களில் மட்டுமே இவ்வாறு இருக்குமென்று ஆலய அர்ச்சகர் கூறுகிறார்.

தொடர்ந்து 11 பிரதோஷ நாட்களில் நரசிம்மருக்கு பானக நைவேத்யம் செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். மகப்பேறு, மணப்பேறு வேண்டி ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சக்கரத்தாழ்வாரையும் யோக நரசிம்மரையும் வழிபட்டு, பாயச நைவேத்தியம் செய்து, ஆலயத்தையொட்டியுள்ள தாமிரபரணி நதிக்கரை படியில் குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள். இதை படிப்பாயசம் என்கின்றனர். 13ம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியினை ஆண்டு வந்த குலசேகர பாண்டியன் கல்வெட்டு ஒன்றில் இந்த ஆலயத்தின் விமானம் கானீச ரகுத்தர் மகன் பிதூசி ரகுத்தர் என்பவரால்கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், 1544ல் எச்ச திம்மராஜுவின் தானாதிபதியாக விளங்கிய அப்பய்யங்கார் என்பவர் தாமிரக் கவசமிட்ட கொடிமரம், கருட வாகனம், ஆழ்வார்கள் சிலைகள் ஆகியவற்றை பிரதிஷ்டை செய்தாராம்.

ஒரு காலத்தில் இப்பகுதி கேரள மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்ததால் இந்த ஆலயத்திலும் கேரள ஆலயங்களில் பின்பற்றப்படும் தாந்த்ரீக முறை பூஜைகளே செய்யப்பட்டன. கேரள வழக்கப்படியே இப்போதும் அர்த்த மண்டபத்திற்கு மேல் ஆண்கள் சட்டையைக் கழற்றிவிட்டே செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. இப்போது வைகானஸ ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.இந்த ஆலயத்திலுள்ள நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய வெங்கலத்தினால் செய்யப்பட்ட கருட வாகனம் குறிப்பிடத்தக்கது.

மிகக் கனமான இந்த கருட வாகனத்தை கருட சேவைக்குரிய சகடத்தில் பொருத்தி வைத்துள்ளனர். கருட சேவையின் போது உற்சவர் நேராக கருட வாகனத்தின் மீது எழுந்தருள, அவருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஆலயத்தைச் சுற்றி மட்டும் ஊர்வலம் நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 9488062925 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். திருநெல்வேலியிலிருந்து 16 கி.மீ. தொலை வில் இத்தலம் அமைந்துள்ளது. நெல்லை-பாபநாசம்-தென்காசி சாலையில் பத்தமடை வந்து அங்கிருந்து தனிச்சாலை வழியே 2 கி.மீ. பயணித்தால் இத்தலத்தை அடையலாம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum