Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


குறைகள் களையும் குமரப் பெருமான்

Go down

குறைகள் களையும் குமரப் பெருமான் Empty குறைகள் களையும் குமரப் பெருமான்

Post by oviya Thu Dec 11, 2014 1:36 pm

இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் எல்லாம் அழகன் முருகன் எழுந்தருள்வான் என்று திருமுருகாற்றுப்படை கூறுகின்றது. அருணகிரிநாதர் போற்றிப் பாடிய திருமலைக்குமார பெருமானும், இயற்கை வளம் பொழியும் பைம்பொழில் எனும் பண்பொழித் திருமலையில் கோயில் கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். குன்றுதோறும் கோயில் கொள்ளும் குமரன் குற்றால அருவிக்கு வடக்கே சுமார் பத்து கி.மீ. தொலைவில் பொதிகை மலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கவிர மலை மூன்றும் ஒன்றுகூடும் திரிகூட மலையின் மீது, குறிஞ்சித் தேன் மணக்க நின்றருள்கிறான். மலை அடிவாரத்தில், பசுஞ்சோலைகளும் நெல்வயல்களும் சூழ்ந்து, எழில் கொஞ்சும் கிராமமாய் காட்சியளிக்கின்றது பண்பொழில்.

இங்கே பொதிகைத் தென்றலும், குற்றாலச் சாரலும் இணைந்து மனதை மகிழ்விக்கும் சூழலை உருவாக்குவதால் 544 படிகளையும் களைப்பே இல் லாமல் சுலபமாய் ஏறிச் செல்ல இயலும். தேவைப்பட்டால், மலைப்பாதையில் அமைந்துள்ள பச்சேரி மண்டபம், பகடை மண்டபம், இடும்பன் சந்நதி, நடுவட்ட விநாயகர் கோயில் இங்கெல்லாம் சிறிது தங்கி ஓய்வெடுத்துக் கொண்டும் படிகளில் ஏறலாம். தன் பின்னே அழகு மயில் ஒய்யாரமாய் நின் றிருக்க, நான்கு திருக்கரங்களுடன் முருகப்பெருமான் காட்சி தருகின்றான். வலது முன் கை அபய ஹஸ்தமாகவும், வலது பின் கை வஜ்ராயுதம் தாங்கியும் காட்சி அளிக்கின்றன. இடது முன் கை சிம்ஹ கர்ணம் எனும் முத்திரையைக் காட்டுகிறது.

முருகனை ஒரு புதரிலிருந்து எடுத்தபோது மண்வெட்டியால் அவன் மூக்கில் பட்ட வடுவை இப்போதும் காணலாம். அவனது காந்தப் புன்னகை அந்த வடுவையும் பேரழகாக்குகிறது! ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் பதினாறு பேறுகளையும் அருளும் உச்சி விநாயகர் தன் அருட்பார்வையால் வரவேற்கிறார். இவரை தரிசனம் செய்ய பதினாறு படிகளைக் கடந்து செல்ல வேண்டும். அடுத்து ஆதி உத்தண்ட வேலாயுத சுவாமியை தரிசனம் செய்ய புளியமரத்தடிக்கு செல்ல வேண்டும். அருகிலேயே மலையுச்சியிலுள்ள பூஞ்சுனை தீர்த்தத்தை சிரசில் தெளித்துக்கொண்டு, சப்த கன்னியர்கள் அருளும் ஷண்முக விலாசத்திற்குள் நுழைய, அற்புதமான பொதிகைத் தென்றல், சந்தன மணத்துடன் நம்மை பரவசமூட்டுகிறது.

திருமலைக் குமாரசுவாமியை தரிசனம் செய்து விட்டுத் திரும்பினால் ஆறுமுகர் சந்நதி. தன் பேரெழிலால் மெய்சிலிர்க்க வைக்கிறார் ஆறுமுக நயினார். ஆலயத்தின் வெளிப்புறத்தில் சூலமேந்திய காளியின் காவல். உட்புறத்தில் கால பைரவரின் கண்காணிப்பு. கதையும், கபாலமும் ஏந்தி நிற்கிறார் கால பைரவர். முன்னாளில், கோயில் நடை சாத்தப் பெற்றதும் காலபைரவரின் காலடிகளில் ஆலய சாவியை வைத்துவிட்டு மறுநாள் எடுத் துத் திறக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது.

பாடினால் வாய் மணக்கும்! பாடப்பாட நெஞ்சினிக்கும் அருமையான திருப்புகழைப் பாடிய அருணகிரிநாதர், இந்தத் திருமலைக் குமரனையும் பாடிப் பரவியுள்ளார். அவர் மட்டுமல்ல, வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர், கவிராஜ பண்டாரத்தையா, மன்னர் புலவர் முருகதாசக் கவிராயர், தென்காசி வள்ளியப்பன், அச்சன்புதூர் சுப்பையா போன்ற ஆன்றோர்கள் குறிஞ்சி வேலைனைப் பாடி அருள் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு வகை தலவிருட்சங்கள் உள்ளன. பைம்பொழில் திருமலைக்குமார சுவாமி கோயிலின் தல விருட்சம் புளியமரமாகும். ஆதி உத்தண்ட நிலையம் என்கிற பூர்வ கோயில் இப்புளியமரத்தினடியிலேயே அமைந்துள்ளது.

ஆரம்ப காலங்களில் பெரும்பாலான ஆலய மூர்த்தங்கள், ஏதேனும் ஒரு விருட்சத்தின் கீழ்தான் அமைக்கப்பெற்று, வழிபடப்பட்டு வந்திருக்கின்றன. பிற்காலத்தில் ஆலயம் எழுப்பப்பெற்று, மூர்த்தங்கள் கருவறையில் வைக்கப்பட்டபோது அந்த விருட்சங்கள் தல விருட்சங்களாக சிறப்பிக்கப்பட்டன. நிழல் தந்ததற்கு நன்றி பாராட்டும் செயல் என்று இதனைக் கொள்ளலாம். இங்குள்ள பூஞ்சுனை தீர்த்தமே முருகனின் அபிஷேக தீர்த்தமாகும். சுனை நீரை ஆலயத்திற்குள் கொண்டு வர வசதியாக மேற்குப் புறத்தில் வாயில் அமைந்திருக்கிறது. பூஞ்சுனை தீர்த்தம் பல்வேறு நோய்களுக்கு அரும ருந்து என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சித்திரைத் திங்கள் முதல் நாளில் திருப்படித் திருவிழா நடைபெறும். 544 படிகளும் அன்று சிறப்பான பூஜை காணும். கோடையில் வசந்தவிழா, வைகாசி பௌர்ணமியில் விசாகத் திருவிழா, கந்தர் சஷ்டி திருவிழா, தேரோட்ட திருவிழா என்று குமரவிடங்கனுக்கு அடிக்கடி திருவிழாக்கள்தான்.
பைம்பொழில் (பண்பொழி) நகரீஸ்வரமுடையார் ஆலயத்தில் பதினொரு நாட்கள் தைப்பூசத்திருவிழா நடைபெறும். அப்போது மலையிலிருந்து கீழே இறங்கி வந்து, பெரிய கோயிலில் தங்கி, தைப்பூச விழாவில் குமாரசுவாமி கலந்து கொள்ளும் வித்தியாசமான நிகழ்ச்சியும் உண்டு. பவனி வருவதும் இவர்தான். அப்படிப் பவனி வரும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்துடன் காட்சி தருவார்.

அரசனாக, சிவபூஜை செய்யும் பக்தராக, கல்விக் கடவுள் சரஸ்வதியாக, போர்க்கோல வீரனாக, பச்சை சாத்தி, வெள்ளை சாத்தி, சிவப்பு சாத்தி பவனி வருகின்ற காட்சிகள் பக்தர்கள் மனங்களை நிறைக்கும். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகருக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது திருமலை பைம்பொழில் குமாரசுவாமி ஆலயம். தென்காசி, கடையநல்லூரிலிருந்து அடிக்கடி இங்கே பேருந்து வசதிகள் உண்டு. குற்றாலமும் அருகிலேயே இ ருப்பதால் குற்றாலம் வருவோர், குமரனைத் தரிசிக்க வருதல் மிக எளிதாகும்.

ஒரு முறை இங்கே வந்து தரிசித்தால், அதன்பிறகு அடிக்கடி வந்து போகத் தூண்டும், இங்கே கொலுவிருக்கும் இயற்கை எழில்! குற்றாலக் குளிர்ச்சி, திருமலை பைம்பொழிலிலும் கிடைக்கும். கூடவே பாலமுருகனாக நிற்கும் குமரனின் தரிசனமும் கிடைக்கும். ஒரு ஆலயத்தில் எட்டு கால பூஜைகள் நடைபெறுவது உத்தமத்துள் உத்தமம். விஸ்வரூபம், உதய மார்த்தாண்டம், சிறுகால சந்தி, கால சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், ஏகாந்தம் என்று எட்டுகால பூஜைகள் இந்த முருகனுக்கு நடத்தப்பெறுகின்றன. காலை 6:00 முதல் மதியம் 1:00 மணி; மாலை 5:00 முதல் இரவு 8:30 வரை முருகனை தரிசிக்க முடியும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் ஆலயம் திறந்திருக்கும். மதிய வேளையில் நடை அடைப்பதே இல்லை.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum