Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


திருமண சந்தோஷம் தரும் சோழீஸ்வரர்

Go down

திருமண சந்தோஷம் தரும் சோழீஸ்வரர் Empty திருமண சந்தோஷம் தரும் சோழீஸ்வரர்

Post by oviya Thu Dec 11, 2014 1:59 pm

“நடந்தாய் வாழி காவிரி! நாடெங்குமே செழிக்க!” என்று காவிரியைப் போற்றுவார்கள். நாமக்கல் மாவட்டத்திற்கும், ஈரோடு மாவட்டத்திற்கும் இடையே திருச்செங்கோட்டிற்கு அடுத்த ஊராகிய பள்ளிப்பாளையத்தில் ஓடி, ‘ஆறில்லா ஊரின் அழகு பாழ்’ என்பதனை மெய்ப்பிக்கின்றாள். ஓடுகின்ற காவிரியை நடக்கின்றாள் என்று, ஒரு கவிஞன் வேகத்தைக் குறைத்து வர்ணித்ததன் பொருள் என்னவெனில், அவளது அன்பன் சோழ வேந்தன் அவளது இருகரையிலும் கட்டிய சிவாலயங்களை கண்டு களித்துக் கடந்து செல்வதால் அவளது ஓட்டம் தளர்ந்து நாணி, கோணி நடக்கிறாளாம், காவிரி.

அதனால்தான் நடந்தாய் வாழி காவிரி. பள்ளிப்பாளையம் எனும் ரம்மியமான இடத்தில் ரசனையோடு அமைக்கப்பட்ட கோயிலில் ஈசனும் கொலுவிருக்கிறான். கோயிலுக்கு அருகிலேயே சுடுகாடும் அமைந்துவிட, இந்த ஆற்றோரத் தலம், காசி போன்று புண்ணிய தலமாகத் திகழ்கின்றது. சோழப் பரம்பரையினர் காவிரியின் இருமருங்கிலும் சமைத்த எண்ணிறைந்த கோயில்களில் பள்ளிப்பாளையம் சோழீஸ்வரர் கோயிலும் ஒன்று. காவிரியானது, தன் காவலனான சோழனின் பெயரை சோழிகளைக் குலுக்கி, சொல்லிச் சொல்லி மகிழ்வதாலும், சோழனை ஈசனே ‘நம் தோழன்’ என்று சொல்லியதாலும், தன் திருநாமத்தில் சோழனுக்கு முன்னுரிமை தந்து பல ஆலயங்களில் சோழீஸ்வரராக ஜொலிக்கின்றார் ஈசன்.

முன்னாளில், பள்ளிப்பாளையம் ஆற்றில் மூழ்கி எழுந்து முதல்படி வரை நடந்து கோயிலுக்குள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக நுழைந்துள்ளனர் பக்தர்கள். ஆற்றின் போக்கு தற்காலத்தில் மாறி விட்டதாலும், மாசு படிந்து விட்டதாலும், ஆற்றில் இறங்கி வர முடியாததாலும் கி.பி. 1972ல் மேற்குப்புற நடை திறக்கப்பட்டது. கி.பி. 1970ம் ஆண்டுவரை சிதிலமடைந்த நிலையில் சிவாலயமும், பெருமாள் கோயிலும் இருந்திருக்கின்றன. அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பெருமாள் கோயில் சுத்தமாக மறைந்து போயிற்று.

ஒரு பெரியவர் மட்டும், கல்லிலும், முள்ளிலும் காட்சியளித்த சிவனுக்கு சுடுகாட்டில் கிடைத்த மண்டை ஓட்டில் நீர் மொண்டு அபிஷேகித்து விளக்கேற்றி வழிபட்டு வந்துள்ளார். இறைவனின் அருள் மறை காலம் முடிந்துபோய் 72லிருந்து சோழீஸ்வரர் திருக்கோயில் புதுப்பொலிவு பெற்றது. கோயிலுக்குள் நுழைந்து சிறிய நிலையைக் கடந்தால் வன்னி மரமும், வில்வ மரமும் தென்படுகின்றன. வன்னி மரத்தடியில் பிரம்மாவும், திருக்கோயிலின் திருப்பணியின்போது கிட்டிய மூலவர், அம்மன், நந்தி, விநாயகர் போன்றோரின் திருமேனிகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அருகேயே சோழன் பிரதிஷ்டை செய்திருந்த சிறிய திருமேனியும், அதற்கு ஈடான சிறிய நந்தியும் அமைந்திருக்கின்றன.

மன்னர்கள் பலரால் வழிபடப்பட்ட மூர்த்தி சிறிதானாலும் கீர்த்திமிக்கது. ஆரம்ப காலத்தில் குன்றளவிற்கு உயரமும், அகலமும் கொண்ட பெரிய கோயில்களைக் கட்டி, அதில் சிறியளவில் சிவ லிங்கத்தையும், நந்தியையும் பிரதிஷ்டை செய்த சோழன், பிற்காலத்தில் மூர்த்தியை தஞ்சை பெரிய கோயில் அளவிற்கு பெரியதாக்கியதன் மறைபொருள் புரியாத புதிராகும். கோயில் பிராகாரத்தில் முதலில் நாம் தரிசிப்பது முருகன் சந்நதியை. தனி வேலவராக முன்பு திருக்காட்சி அளித்தவர், இப்போது வள்ளி- தெய்வானை சமேதராக அமைத்துள்ளனர்.

அடுத்ததாக பெரிய திருமேனி கொண்ட விநாயகரை தரிசிக்கின்றோம். இடப்புறம் கஜலட்சுமி சந்நதியும் இருபது வருடங்களுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட தாமரை வடிவ மேடையில் லட்சுமி நாராயணன் திருமேனியையும் கண்குளிரக் காணலாம். 2006ம் ஆண்டு நடந்த மூன்றாவது கும்பாபிஷேகத்தின்போது வடக்கு மூலையில் ஆஞ்சநேயர் சந்நதியை கிழக்கு முகமாக எடுப்பித்துள்ளனர். இக்கோயிலுக்குள் பிரம்மனுக்கு சந்நதி அமைக்கப்படவில்லை. அடுத்து சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவகிரகங்கள், பைரவர், சனீஸ்வரர், சந்திர, சூரியர், பலிபீடம், கொடிமரம், நந்திதேவர், நடராஜர் சபை ஆகியவற்றை பிராகாரச் சுற்றில் தரிசிக்கலாம்.
அர்த்த மண்டபத்தில் அம்பாள் சந்நதியில் சுந்தராம்பிகை அம்மன் திருக்காட்சி அளிக்கிறார்.

நாம் நிற்கும் இடத்திலிருந்தே ஈசனான சோழீஸ்வரரையும், அம்பாளை ஒரு சேர தரிசிக்கலாம். ஆருயிர் எல்லாம் அமர வாழ்வு பெற அருள்புரியும் கருணைக் கடலாகிய சோழீஸ்வரர் கருவறைக்குள் திருக்காட்சி அளிக்கின்றார். கருவறையின் பின்பக்க திருசுவரில் ஒரு பாறை ஒன்றில் மூன்றடி கொண்ட உமாமகேஸ்வரர், ஒன்றரை அடி உயர உமாதேவி திருமேனிகளை தரிசிக்கலாம். தெய்வங்கள் திருமணக் கோலத்தில் காட்சி தருவதால் திருமணஞ்சேரிக்கு சென்ற பலன் கிட்டுவதாக ஐதீகம் உள்ளது. திருமணக் கோலத்தில் உமையும், இறைவனும் திருக்காட்சி அளிப்பதால், இங்கே திருமணத்திற்காக பிரார்த்திப்பது நற்பலனைத் தரும். நல்ல திருமணம் கைகூடும்; ஏற்கெனவே திருமணமாகியிருந்தவர்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய மனப் பிரச்னைகளுக்கும் நல்லதோர் தீர்வும் கிட்டும்.

இத்திருக்கோயில், மும்மூர்த்திகள் தலமான கொடுமுடிக்கு இணையான தலமாக பேசப்படுகின்றது. இது ஒரு பரிகாரத் தலமும் ஆகும். காசிக்கு நிகரான தலம். காசியில் ஏதாவது ஒன்றை விட்டு விட்டு வரவேண்டும். இங்கோ சோழீஸ்வரரை தரிசித்தாலே போதும். சோழீஸ்வரருக்குள் ஐக்கியமாகி முக்தி பெறும் பேறு கிட்டுகின்றது. ஆண்டுக்கு ஒருமுறை மூன்று நாட்களுக்கு ஆதவன் ஆற்று நீரில் தன் ஒளிக் கற்றைகளை பாய்ச்சி, வான வில்லின் வர்ண ஜாலத்தோடு ஈசனின் திருமேனியை முடி தொட்டு அடிவரை வணங்கி வழிபட்டு வரம் பெறுகின்றான்.

நாள்தோறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. திங்கள் தோறும் மாலை 6.30 முதல் 7.00 மணி வரை நடைபெறும் ருத்ராபிஷேகம் இத்தலத்து சிறப்புமிக்க அபிஷேகம் ஆகும். இத்திருக்கோயிலை ஆற்றின் அக்கரையிலிருந்து பார்த்தால் தெரியாது. அடர்ந்த நந்தவனம் கோயிலை மறைத்துவிடும். அழகிய சிறிய கோயில்களான ஆதவன், மாதவன் திருக்கோயிலில் ஆறு, சுடுகாடு, பாலம் இவை யாவும் கோயிலை மீறித் தெரிவதாலும் அறிந்தவர்கள் தவிர புதியவர்களுக்கு அங்கே ஒரு சிவாலயம் இருப்பது சட்டென்று தெரியாது. ஏதாவது ஒரு பக்க வழியில் ராஜகோபுரம் அல்லது கோயில் இருப்பை உணர்த்தும் உயர்ந்த வளைவாவது கட்டப்பட வேண்டும். பௌர்ணமியன்று சிவனடியார்கள் கோயிலைச் சுற்றிவர பாதை இன்மையால் கோயிலுக்கு உள்ளேயே ஐந்து முறை சுற்றி வருகின்றனர்.

அருகிலிருந்த பெருமாள் கோயில் பற்றி வசிஷ்ட நாடி ஜோதிடத்தில் குறிப்பு கிடைத்துள்ளது. பள்ளிப்பாளையம் பெருமாள் கோயில் தற்பொழுது இருக்கும் சிவாலயத்திற்கு பக்கத்திலேயே அமைந்திருக்க வேண்டும். இதற்கான ஆதாரங்களாக பெருமாளுக்கு உரிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட ஆற்றின் உள்ளே காணப்படும் விளக்குத் தூணும், கோயில் எழுப்ப எண்ணி தோண்டியபொழுது தன்னை வெளிப்படுத்திக் கொண்ட வரதராஜப் பெருமாளின் திருமேனியுமே ஆகும். இத்திருக்கோயில் பற்றி பல கற்பனை கதைகள் உலவி வந்தாலும், பள்ளிப்பாளைய ஆற்றோர திருக்கோயில்கள் ஆன்மிக உலகின் திறவுகோல்களாகத் திகழ்கின்றன. ஈரோடு மாவட்டம், திருச்செங்கோட்டிற்கு அருகேயே இத்தலம் அமைந்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum