Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


திருச்செந்தூர் முருகன் 40 குறிப்புகள்

Go down

திருச்செந்தூர் முருகன் 40 குறிப்புகள் Empty திருச்செந்தூர் முருகன் 40 குறிப்புகள்

Post by oviya on Mon Dec 01, 2014 1:55 pm

1. முருகப் பெருமானது ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு என்ற பெருமையினை திருச்செந்தூர் பெற்றுள்ளது.

2. திருநெல்வேலியிலிருந்து சுமார் ஐம்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் திருச்செந்தூர் தலம் உள்ளது.

3. சங்க காலத்தில் திருச்செந்தூர் திருச்சீரலைவாய் என அழைக்கப்பட்டது.

4. தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய பழந்தமிழ் நூல்களிலும் திருச்செந்தூர்ப்பதியின் சிறப்பும் - மகிமையும் கூறப்பட்டிருக்கின்றது.

5. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ், திருச்செந்தூர் அகவல், செந்தில் கலம்பகம், திருச்செந்தூர்த் தலபுராணம் போன்றவை திருச்செந்தூர் பற்றி சொல்லக் கூடியனவாகும்.

6. திருச்செந்தூரிலே தமிழே தெய்வீக மணம் பெற்று, வேலனின் மகிமையோடு இரண்டறக் கலந்து கிடந்தது என்பதுதான் அந்தப் பதிக்குள்ள தனிப்பெருஞ் சிறப்பாகும்.

7. வேலவன் பெற்ற மாபெரும் வெற்றியின் நினைவுப் பெருமையாக நம் முன்னோர் ஜெயந்திபுரம் என இந்த தலத்துக்குப் பெயர் சூட்டினர்.

8. கந்த சஷ்டி விழாவின்போது சூரசம்கார நிகழ்ச்சியை முன்னிட்டு முருகப் பெருமானின் திருஉருவத்தைக் கடற்கரை ஓரமாக எடுத்துச் செல்லும் போது கடல் சற்று வற்றிப் பின் வாங்கிச் செல்லும் அற்புதம் இன்றளவும் நிகழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது.

9. நாழிக்கிணறு தீர்த்தம் கடற்கரையில் அமைந்திருப்பினும், இதன் நீர் உப்புச் சுவையின்றி இனிமையான சுத்த நீராக அமைந்திருப்பது ஒரு சிறப்பாகும்.

10. மூலவரான முருகப் பெருமான் தியானம் செய்யும் முறையில் சாந்தம் தவழ அமர்ந்திருக்கும் காட்சி பார்க்கப் பரவசமூட்டுவதாக இருக்கும்.

11. திருச்செந்தூர் வேலவனின் திருஉருவச் சிலையை டச்சுக்காரர்கள் திருடி சென்றதால் ஐந்தாண்டுகள் வரை ஆலயத்தில் முருகனின் திருஉருவச் சிலை இல்லாமலே இருந்தது.

12. குமர குருபர சுவாமிகள் செந்தூர் வேலவனின் திருவருட் கருணையைப் பெற்ற வரலாறு திருச்செந்தூர் முருகனின் மகிமைக்கு ஒரு சிறப்பான சான்றாகத் திகழ்கின்றது.

13. குமரகுருபரர் முருகக் கடவுளின் மீது பாடிய கந்தர் கலிவெண்பாவைப் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதன் மூலம் வாழ்வில் எல்லா நலன்களையும் திருச்செந்தூர் முருகன் அருளால் பெற முடியும்.

14. திருச்செந்தூர் கந்தனின் கருணையினால் கவிஞராக மாறிய வென்றிமலை திருச்செந்தூர் தல புராணத்தை பாடிப் புகழ் பெற்றார்.

15. ஆதி நாளில் ஆலயத்தின் கருவறை கந்தமாதன பர்வதம் என்றும் சந்தன மலை எனவும் கூறப்பட்ட கல்லும் மணலும் கலந்த குன்றைக் குடைந்து அமைக்கப்பட்டிருந்ததாம். பின்னர் பாண்டிய மன்னர்களும் சேர மன்னர்களும் பெருஞ்செலவில் திருப்பணிகள் செய்து ஆலயத்தின் இன்றைய பொதுவான அமைப்பினை உருவாக்கினார்களாம்.

16. வள்ளிக்குகை உள்ள இடம்தான் ஆதி நாள் முருகப் பெருமானின் கருவறை அமைந்திருந்த கந்தமாதன பர்வதம் அல்லது சந்தன மலையாகத் திகழ்ந்தது என்றும் கூறுவர்.

17. சண்முக விலாச மண்டபத்தின் அருகில் கடற்கரைத் தீர்த்தம் உள்ளது. இதனை வதனாரம்ப தீர்த்தம் எனவும் கூறுகின்றனர். இந்த தீர்த்தத்தில் நீராடிய பிறகு ஸ்கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணற்றில் தீர்த்தமாடிய பிறகே திருக்கோவிலுக்குப் பக்தர்கள் செல்ல வேண்டும் என வழி வழி வரும் வழக்கமாக உள்ளது.

18. வீரபாண்டிய கட்டபொம்மன் வழிபட்ட முருகப்பெருமானின் உருவச் சிலையை தேவஸ்தான அலுவலகத்தில் காட்சிப் பொருளாக வைத்திருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அவசியம் கண்டு களிக்க வேண்டிய அற்புதமான வேலைப்பாடுகள் அமைந்த கலைப் பொக்கிஷமாக அந்த உருவச்சிலை திகழ்கின்றது.

19. சூரசம்கார மூர்த்தியின் சந்நிதியிலே அமைந்துள்ள மூர்த்தியின் திருவுருவம் ஒரே கல்லில் குடைந்து செதுக்கப்பட்டு அற்புதமான தோற்றத்துடன் திகழ்கின்றது.

20. எல்லா ஆலயங்களிலும் நவக்கிரகங்களுக்கு என தனிச்சந்நிதி இருக்கும். ஆனால் திருச்செந்தூர் ஆலயத்தில் அப்படி சனிச் சந்நிதி இல்லை.

21. தமது திருமலரடி சரணம் என நம்பியோரை, தென்திசைக்கு அதிபரான எமனுடைய பிடிப்பினின்றும் காத்தருள வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆறுமுகப் பெருமான் தென்திசை நோக்கித் தமது பார்வையைச் செலுத்திய வண்ணம் அமர்ந்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

22. வீரவாகுத் தேவர் திருச்செந்தூர்ப் பதிக்கே காவல் தெய்வம் எனக் கருதப்படுகின்றார். இந்தக் காரணத்தால் திருச்செந்தூர் வீரவாகுப் பட்டினம் எனவும் அழைக்கப்படுவது உண்டு.

23. திருச்செந்தூரில் மூலவருக்கு முதலில் பூஜை நடப்பதில்லை. வீரவாகுத் தேவருக்குப் பூஜையை நிறைவேற்றிய பின்னர்தான் மூலவருக்குப் பூஜை நடத்தப்படுகின்றது.

24. வீரவாகுத் தேவருக்கு பிட்டமுது படைத்து வழிபாடு நடத்தினால் எண்ணிய எண்ணங்களெல்லாம் நிறைவேறும் என்று கூறப்பெறுகின்றது.

25. செந்தில்குமரன் சந்நிதியிலே பன்னீர் இலையில் வைத்து விபூதிப் பிரசாதம் வழங்கப் பெறுவது இந்தத் தலத்திற்கு மட்டும்உரிய சிறப்பான வழக்கமாக உள்ளது.

26. வியாழ பகவானால் பூசிக்கப்பட்ட ஸ்தலமாதலின் திருச்செந்தூர் வியாழ சேத்திரம் என்று போற்றப் பெறுகிறது.

27. திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் மிகுந்த வெற்றி நகரம் என்றும் பொருள் உண்டு. செல்வமும் அருள் வளமும் அளிக்க வல்லது திருச்செந்தூர்.

28. திருச்செந்தூரிலிருந்து முருகப் பெருமான் வேல் எறிந்தார். திருச்செந்தூரிலிருந்து ஆறு மைல் தூரம் தள்ளி சூரன் மாமரமாய் நின்றான். அவ்விடத்தின் பெயர் மாப்பாடு என்பதாகும். அது இப்போதுமணப்பாடு என்று வழங்கப்படுகிறது. அங்கு இப்போது மாமரங்கள் வளர்வதில்லை.

29. கர்ப்பக் கிரகத்தில் வீற்றிருக்கும் மூலவரான முருகப் பெருமான் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இவர் சிவபூஜை செய்யும் வகையில் இவருடைய நான்கு திருக்கரங்களுள் இரண்டு அபய வரத ஹஸ்தங்களாகவும், மற்றொன்று புஷ்பமேந்தி அர்ச்சனை செய்யும் கரமாகவும், ஒருகை ருத்ராட்ச மாலையைத் தாங்கிக் கொண்டும் அமைந்துள்ளன.

30. மூலவருக்குப் பின்னால் காணப்படும் அறை `பாம்பறை' என்றழைக்கப்படுகிறது. இது சுரங்க அமைப்பினை உடைய அறையாகும். இவ்வறையின் மேற்கு பாகத்தில் முருகப் பெருமானால் பூஜிக்கப் பெற்ற பஞ்சலிங்கங்கள் இருக்கின்றன.

31. ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்தே இத்தலத்தில் தமிழ் வளர்க்கப் பெற்று வந்துள்ளது. தமிழ் வளர்த்த பெருமை இத்தலத்திற்குச் சிறப்பாக அமைந்துள்ளது.

32. இப்போது விளங்கும் அழகிய பெருந்திருக் கோவில் மவுன சுவாமி என்பவரால் திருப்பணி செய்யப்பட்டது.

33. கடற்கரைக் கோவிலுக்கு செல்லும் பாதையின் முகப்பில் விளங்கும் தூண்டுகை விநாயகர் சந்நிதி முதல் ராஜகோபுரத் திருக்கோவில் வரை, மிகவும் புனிதம் வாய்ந்த இடமாகப் போற்றப்படுகின்றது. அருணகிரிநாதர் அவ்விடத்தை "மகா புனிதம் தங்கும் செந்தில்'' எனப் போற்றுகின்றார்.

34. மனித உடலமைப்புடன் ஒப்பிடுகையில் திருச்செந்தூர் தலம் சுவாதிஷ்டான தலமாக கருதப்படுகிறது.

35. திருச்செந்தூரில் முருகனுக்குரிய முறைகளிலும் சிவபெருமானுக்கு உரிய முறைகளிலும் இரண்டு வகையான வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

36. திருச்செந்தூர் என்பதற்கு "உயிர்கள் வந்து சேரும் இடம்'' என்று பொருளாகும்.

37. உக்கிரபாண்டியன் காலத்தில் திருச்செந்தூர் கோவில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஓங்கார வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலை அதிசய முறையில் அமைத்து 137 அடி ராஜகோபுரமும் அமைத்தவர்கள் ஸ்ரீமவுன சுவாமிகள், ஸ்ரீகாசி சுவாமிகள், திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீதேசிக சுவாமிகள், ஸ்ரீ ஆறுமுக சுவாமிகள், ஸ்ரீவள்ளி நாயக சுவாமிகள் என்பவர்களாவர்.

38. ஸ்ரீ மவுன சுவாமிகள், ஸ்ரீகாசி சுவாமிகள், ஸ்ரீ ஆறுமுக சுவாமிகள் சமாதிகள் கடற்கரை சூரசம்ஹார மண்டபத்தருகிலும் ஸ்ரீ வள்ளி நாயக சுவாமிகள் சமாதி, கோவிலின் வடக்குப் பக்கமுள்ள நுழைவாயில் அருகிலும் உள்ளன.

39. திருச்செந்தூர் கோவில் சங்க காலத்தில் கடற்கரையை நோக்கி கிழக்கு முகமாகப் பார்த்த வாயிலுடன் இருந்திருக்க வேண்டும். ஆயினும் இப்போது கிழக்கு முகமாக வாயில் இல்லை. கடல் அரிப்பால் சங்கக் காலக் கோவில் அழிந்து விட்டது. ஆயினும் பண்டை மரபுப்படி கிழக்கு நோக்கி வாயில் இல்லாவிட்டாலும் "திருச்செந்தூரான் கிழக்குத் திசையை நோக்கி உள்ளார்.

40. திருச்செந்தூர்க் கோவில் மேல் இருந்த திருமணி விளக்கான கலங்கரை விளக்கம், சங்க காலத்தி லிருந்து கடலில் செல்பவர்களுக்கு உறுதுணையாக இருந்ததால் தமிழிலும் மலையாளத்திலும் "செட்டியார் கப்பலுக்குச் செந்தூரான் துணை'' என்ற பழமொழி எழுந்தது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum