Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மங்கலங்கள் பொங்கிப் பெருகச் செய்யும் மாதங்கி

Go down

மங்கலங்கள் பொங்கிப் பெருகச் செய்யும் மாதங்கி Empty மங்கலங்கள் பொங்கிப் பெருகச் செய்யும் மாதங்கி

Post by oviya Sun Dec 07, 2014 8:53 am

பராசக்தி எடுத்த தசமகாவித்யா அவதாரங்களில் ஒன்பதாவதான மாதங்கி, பெரிதும் போற்றி வணங்கப்படுகிறாள். லலிதா திரிபுரசுந்தரியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவள் மாதங்கி. அமுதமயமான கடலின் நடுவில் ரத்தினத் தீவில், கற்பக மரங்கள் செறிந்த காட்டில், நவமணிகளால் இழைக்கப்பட்ட மண்டபத்தினுள், தங்க சிம்மாசனத்தில் இந்த தேவி அமர்ந்தருள்கிறாள். மதங்க முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு மகளாக அவதரித்ததால் மாதங்கி எனப் பெயர் பெற்றாள். மகிஷாசுர வதத்தின்போது இவள் சும்ப-நிசும்பர்களை வதைத்தவள் என சப்தசதீ பெருமையுடன் போற்றுகிறது.

மகாதிரிபுரசுந்தரி, பண்டாசுரனுடன் வதம் செய்ய முற்பட்டு நிகழ்த்திய பெரும் போரில், மாதங்கி, விஷங்கன் எனும் அசுரனை அழித்தாள் என லலிதோபாக்யானமும் இவள் புகழ் பாடுகிறது. வாக்விலாசத்திற்கும் அறிவின் விருத்திக்கும் இவள் அருள் கட்டாயமாகத் தேவை. புலவர்களை மன்னர்களுடன் சரியாசனத்தில் வைக்கக் கூடிய வல்லமை இவளுக்கு உண்டு. உபாசகர்கள் உள்ளத்தில் பசுமையை, குளிர்ச்சியைப் பெருக்கெடுத்து ஓடச் செய்பவள் இத்தேவி. இவளை ராஜசியாமளா என்றும் அழைப்பர்.

மாதங்கியின் மந்திரம், 98 எழுத்துக்கள் கொண்டதாகும். மாதங்கி மந்திரம் ஒருவருக்கு சித்தியாகிவிட்டால் உலகில் உள்ள மற்ற வேத மந்திரங்கள் உட்பட அனைத்துமே ஒரு முறை படிப்பதாலேயே சித்தியாகும் என மதங்கமனுகோசம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரஸ்வதியின் தாந்த்ரீக வடிவமே மாதங்கி. லலிதாம்பிகையின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவள் இவள், அந்த லலிதா பரமேஸ்வரிக்கே ஆலோசனை கூறும் மந்த்ரிணீயானவள். இவளின் ரதம் கேயசக்ர ரதம் என அழைக்கப்படுகிறது. கேயம் எனில் பாட்டு. கேயசக்ர ரதம் அசைந்து வரும்போது, அதன் ஒலி, சங்கீதமாய் கானம் இசைக்கும்.

எப்போதும் தவழும் புன்முறுவலுடனும் சுழன்று மயக்கும் விழியுடையவளாக இத்தேவி விளங்குகிறாள். கதம்ப மலர்கள் தேவியின் கூந்தலை அலங்கரிக்கும் பேறு பெற்றன. மடியில் வீணையை வைத்துக் கொண்டு கீழ் இரு திருக்கரங்களால் அதை மீட்டிக் கொண்டும் மேலிரு கரங்களில் சம்பா நெற்கதிர்களையும் கரும்பு வில்லையும் ஏந்தியுள்ளாள். மற்ற நான்கு திருக்கரங்களில் கிளி, சாரிகை ஆகிய பறவைகளும் பாசமும் அங்குசமும் அலங்கரிக்கின்றன. திருமுகம் பொலிவாய்த் துலங்க, நெற்றியில் கஸ்தூரி திலகம் பளிச்சிடுகிறது. திருமுடியில் சந்திர கலையுடன் கூடிய கிரீடம் மின்னுகிறது.

சர்வாலங்கார பூஷிதையாக தேவி பொலிகிறாள். பருத்து நிமிர்ந்த மார்பகங்களின் கனத்தால் இடை துவண்டு உள்ளது. மரகத மணியின் நிறத்தைப் போல ஜொலிக்கும் பச்சை நிற மேனியள். வலது பாதத்தை மடித்து, இடது பாதத்தை தொங்கவிட்ட நிலையில் அருள்பவள். செவிகளில் சங்கினால் ஆன காதணிகளை அணிந்துள்ளாள். சில நூல்களில் பனை ஓலையால் ஆன காதணிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவள் கரங்களில் உள்ள நெற்பயிர் உலகியல் இன்பங்களின் தொகுதியையும் கரும்பு வில், அழகு சாதனங்களையும், பாசம், ஆகர்ஷண சக்தியையும் சாரிகை, உலகியல் ஞானத்தையும் கிளி, ஆன்மிக அறிவையும் வீணை, பர-அபர போகங்களையும் காட்டுகின்றன.

இத்தேவியின் வழிபாட்டில் உலகியல் இன்பம் துறக்கப்படுவதில்லை. மாதங்கி உபாசனை சகல கல்வி கேள்விகளிலும் தேர்ச்சியை அதி சீக்கிரத்தில் அருளும்; விசேஷமான இன்பக் கலைகளில், நுண்கலைகளில், இன்னிசைக் கலைகளில் உபாசகனுக்கு வெற்றி எளிதில் கிட்டுகிறது. ஆனால், உலகியலை ஒரு சேறு போலச் செய்து கொண்டு அந்தச் சகதியில் வீழ்ந்தாலும் முற்றிலும் அதிலேயே மூழ்கிவிடுவதில்லை. உலகியலின் பற்றிலேயே பேரின்பத்தைக் கண்டு அப்பேரின்ப வாழ்வில் எக்கணமும் வழுவாமல் இருப்பதே இந்த மாதங்கி உபாசனையின் ரகசியமாகும். மாதங்கி, சிருங்கார முக்கியத்துவம் வாய்ந்த தேவி. சிருங்காரம் என்பது உலகியலில் கூறப்படும் காமவெறியல்ல.

காளிதாசனை சிருங்கார பட்டாரகன் என்று அழைப்பர். மற்றவர்கள் பார்வையில் உலகியல் இன்பத்தில் உழல்பவன் போல் தோன்றினாலும் உண்மையில் எக்கணமும் பர இன்பத்தினின்றும் வழுவாத வாழ்வுடையவனே உண்மையான சிருங்காரத்தின் நுட்பத்தை அறிந்தவனாவான். இந்த சிருங்காரம் உமாமகேஸ்வரரிடமும், லட்சுமி நாராயணனிடமும் விளங்குகிறது. இந்த மாதங்கியின் யந்திரம் பிந்து, முக்கோணம், ஐங்கோணம், எட்டிதழ், பதினாறிதழ், பூபுரங்கள் மூன்று என அமைந்திருக்கிறது. ப்ரபஞ்சஸார தந்த்ரம் போன்ற தேவி உபாசனை நூல்களில் மாதங்கியின் பூஜைமுறைகள் விரிவாக சொல்லப்பட்டுள்ளன.

இந்த மாதங்கியைப் பற்றி அபிராமி பட்டர், தனது அபிராமி அந்தாதியின் எழுபதாவது பாடலில், கண் களிக்கும்படி கண்டு கொண்டேன், கடம்பாடவியில் பண்களிக்கும் வீணையும் கையும் பயோதரமும் மண்களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர் குலப்பெண்களிற் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே! -என்று போற்றுகிறார்.

மகாகவி காளிதாஸர், மாதங்கி உபாசனையால் பல அற்புத சக்திகளைப் பெற்றார். அவர் இந்த மாதங்கியைப் போற்றி ‘ச்யாமளா தண்டகம்’ எனும் அதியற்புத துதியைப் பாடியுள்ளார். அதில் இந்த மாதங்கியே சர்வ தீர்த்தம், சர்வ மந்த்ரம், சர்வ தந்த்ரம், சர்வ சக்தி, சர்வ பீடம், சர்வ தத்வம், சர்வ வித்யை, சர்வ யோகம், சர்வ நாதம், சர்வ சப்தம், சர்வ ஸ்லோகம். சர்வ தீக்ஷை, முதலான சர்வ ஸ்வரூபிணியாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவளாகவும் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

லலிதா திரிபுரசுந்தரி வாசம் புரிந்தருளும் ஸ்ரீநகர ஸாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த மாதங்கியுடையதே. லலிதா திரிபுரசுந்தரியிடம் இருந்து முத்ராதிகாரம் எனும் ‘றிளிகீணிஸி ளிதி கிஜிஜிளிஸிழிணிசீ’ பெற்றவள்! அதனால் லலிதையின் மந்த்ரிணீ என அழைக்கப்படுகிறாள். மந்திரியின் தயவு இருந்தால் ராஜாவின் அன்புக்குப் பாத்திரமாவதைப் போல மாதங்கியின் தயவை நாடியவன், லலிதையின் அருளை அடைவான் என்கிறது தந்த்ர சாஸ்திரம். இவளால் செயல்படுத்த முடியாதது என்று எதுவுமே இல்லை. எப்போதும் எல்லாவற்றையும் பெறக்கூடிய வாக்கு வல்லமை, சக்தி, பிறரைத் தன் வசமாக்கிக் கொள்ளும் தன்மை, பயமற்ற நிலை, மனதில் பதட்டப்படாத நிலை, எடுத்த செயலை சிரமம் இல்லாமல் நடத்தி முடிக்கும் தன்மை, பின்வரக்கூடிய இடையூறுகளை முன்னதாகவே யோசித்து அதனைச் சரிப்படுத்தும் வல்லமை போன்றவை இந்த மாதங்கி உபாசனையால் ஏற்படும் பலன்கள்.

லலிதையின் மந்திரிணியாக, பூரண மகாசக்தியாக, மதுரையம்பதியில் பிரகாசிக்கும் மீனாட்சி, மாதங்கியின் வடிவம் என்பது உபாசனையின் ரகசியம். மிகவும் லலிதமாக உள்ள இவளுடன் கீரிப்பிள்ளையையும் காணலாம். குலம் என்ற குண்டலினி சக்தி பாம்பின் வடிவமாகக் கூறப்படுகிறது. அந்த சக்தியை யோக சக்தியால் தட்டி எழுப்ப வேண்டும். குலம் பாம்பு என்றால், நகுலம் என்பது பாம்புக்கு விரோதியான கீரிப்பிள்ளை. கீரியைக் கண்டால் சோம்பிக் கிடக்கின்ற பாம்பும் உத்வேகம் கொண்டு கிளம்பத்தானே வேண்டும்? ஆகவே, குண்டலினி சக்தி விழுத்தெழச் செய்யவே இவள் கீரியை வைத்துள்ளதாக தேவி உபாசனையில் சொல்லப்பட்டுள்ளது.

பொருள் இருந்தாலும் அதைத் தக்க வைக்க அறிவு வேண்டுமே! அறிவு இல்லாமல் பொருள் இருந்தால் அனர்த்தம்தான் விளையும். இவள் ஹயக்ரீவரையே குருவாய் அடைந்தவள். பிரம்மாவின் சிருஷ்டித் தொழிலுக்கு உதவுபவள். உயர்விலும் உயர்வானவள் என்பதை உணர்த்தும் உத்திஷ்ட புருஷி என்ற பெயரும் இவளுக்கு உண்டு. இவளே உச்சிஷ்ட சாண்டாலீ என்றும் வணங்கப்படுகிறாள். சக்தியின் வெளிப்பாடாக, நம்முள் சப்தம் நான்கு வகைகளாக உற்பத்தியாகி வெளிப்படுகிறது. அவை பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரீ எனப்படும். மூலாதாரத்தில் எழும் முதல் சலனம் (பரா), கருக்கொண்டு உருவாகி (பஸ்யந்தி), மணிபூரகத்தில் தோன்றி (மத்யமா), அனாஹத சக்கரத்தில் உயர்ந்து வார்த்தையாகி (வைகரீ) வெளிப்படுகிறது.

அந்த வாக்கு வன்மைதான் மாதங்கி! மாதங்கி உபாசனை, கல்வி கேள்விகளில் அதி சீக்கிரத்தில் தேர்ச்சியை அருள்கிறது. விசேஷமான இன்பக் கலைகளிலும் நுண்கலைகளிலும் இன்னிசைக் கலைகளிலும் உபாசகன் வெற்றியை வெகு எளிதில் அடைகிறான். வாக்வாதினி, நகுலீ என இவளுக்கு இரு தோழிகள். வாக்வாதினி தேவி நம்மை நன்றாகப் பேச வைக்கும் சக்தி. இவளின் அருளால் பக்தன் இனிமையான பேச்சை வாரி வாரி வழங்குவான். பெரிய சாஸ்திர விஷயங்களையும் சாதாரண மக்களுக்கு சுலபமாகப் புரியும் வகையில், அலுப்புத் தட்டாமல் பேசுவது இவளின் தயவால்தான். குருவிடம் சந்தேகங்களை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்வதே வாக்வாதினி என்ற வார்த்தையின் அர்த்தம்.

அவள் மூல மந்திரத்தில் உள்ள ‘வத வத’ என்பது, குருவை அடிக்கடி சென்று தரிசிப்பதன் அவசியத்தைக் குறிக்கும். குருநாதர்கள் பல அரிய விஷயங்களைப் பலமுறை கோரினால் அன்றி உபதேசிக்க மாட்டார்கள். சில விஷயங்கள் பலமுறை கேட்டால்தான் மனதில் பதியும். நகுலீயின் சக்தி எதிரிகளின் வாக்கை அடைத்து, பிறரை விட ஆயிரம் மடங்கு இனிமையாக, தெளிவாகப் பேசி, தன் வயமாக்குவதே. ஞானம் பெற்றாலும் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உண்டு. அத்தவறுகள் விஷம் போன்றவை. நகுலம் எனில் கீரிப்பிள்ளை. தவறுகள் என்ற விஷத்தால் பாதிக்கப்படாமல் இருக்க இவள் தயவு அவசியம்.

நாம் பேசும் வார்த்தை இனிமையாக இருந்தால் அதை சங்கீதம் என்பதுண்டு. ஸுக்ஷும்னா நாடி இருக்கும் முதுகெலும்பிற்கு வீணா தண்டம் என்று பெயருண்டு. எனவே மாதங்கி, ஸங்கீத மாத்ருகா எனப் புகழப்படுகிறாள். இனிமையான பேச்சு, கிளியை நினைவுறுத்தும். எனவே, அதை தேவி தன் கைகளில் ஏந்தியுள்ளாள். இந்த தேவியை அறுபத்தி நான்கு முக்கியமான யோகினிகள் எப்போதும் பூஜித்துக் கொண்டும் பணிவிடை செய்து கொண்டும் இருப்பர்.
இந்த மாதங்கியைக் குறித்து சியாமளா தண்டகம், சியாமளா நவரத்னமாலை, சியாமளா ஆவரணம், சியாமளா அஷ்டோத்திரம், சியாமளா கவசம், ராஜமாதங்கி மந்த்ரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி ஸுமுகி கவசம், மாதங்கி ஹ்ருதயம், மாதங்கி ஸஹஸ்ரநாமம், ஸ்யாமளா ஸஹஸ்ரநாமம் என பல்வேறு துதிகள் உண்டு. கீழ்க்காணும் பதினாறு நாமங்களால் அன்னை மாதங்கியை அர்ச்சித்து அனைத்து நலன்களையும், விரைவாகப் பெறலாம்.

சங்கீதயோகினி, ச்யாமா, மந்த்ரநாயிகா, ச்யாமளா, மந்த்ரிணீ, ஸசிவேசானீ, ப்ரதானேஸ்வரி, ஸுகப்பிரியா, வீணாவதி, வைணிகீ, முத்ரிணீ, ப்ரியகப்ரியா, நீபப்ரியா, கதம்பேசீ, கதம்பவனவாஸினி, ஸதாமதா. மேற்கூறியவறு இவளை சஞ்சலமின்றி அர்ச்சிப்பவர்களின் இல்லங்களில் லட்சுமி தேவி நித்யவாசம் செய்வாள். ருதுவாகாத பெண்கள் இவள் ஆராதனையால் ருதுவாவார்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேர்வர். சோம்பல், பயம், துக்கம் இம்மூன்றும் இவளை ஆராதிப்பவர்களுக்குக் கிடையாது. மாதங்கி உபாசனையைச் செய்தால் வெகு சீக்கிரத்தில் உலகத்திலேயே மிகச் சிறந்தவராக விளங்கலாம். உலகைத் தன் வசம் கொள்ளலாம். மாதங்கியே சர்வ சங்கரி அல்லவா?

எல்லா பாக்கியங்களையும் பெற மல்லிகை, ஜாதி மல்லி ஆகிய மலர்களால் இத்தேவியை அர்ச்சிக்க வேண்டும். அரச போகங்களை வேண்டுவோர் வில்வதளங்களாலும் விசேஷமாக தாமரை மலர்களாலும் பூஜிக்க வேண்டும். சொல்வன்மை, கவிபாடும் திறமை வேண்டுவோர் செம்பருத்திப்பூக்களால் இத்தேவியை ஆராதனை புரியவேண்டும். செல்வவளம் சிறக்க கருங்குவளை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். மிதமிஞ்சிய செல்வத்தையும் ஞானத்தையும் நல்ல புகழையும் முக்தியையும் தரவல்ல மதங்கமுனிவரின் மகளான மாதங்கி அனவரதமும் அடியவர்களைக் காக்கட்டும்.

தரிசனம்!

இந்த ராஜசியாமளாவின் அழகான திருவுருவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் காயத்ரி மண்டபத்திற்கு வலப்புறத்தில் தரிசித்து மகிழலாம்; புதுக்கோட்டை புவனேஸ்வரியின் கருவறையின் முன்னும், சென்னை ஆதம்பாக்கம் புவனேஸ்வரி ஆலய கருவறை முன்னும் மாதங்கியின் நின்ற கோல திருவுருவங்களை தரிசிக்கலாம்.

மாதங்கி த்யானம்
த்யாயேயம் ரத்னபீடே ஸுககலரணிதம்
ஸ்ருண்வதீம் ஸ்யாமகாத்ரீம்
ந்யஸ்தைகாங்க்ரிம் ஸரோஜே ஸஸிஸகல
தராம் வல்லகீம் வாதயந்தீம்
கல்ஹார பத்தமாலா நியமித விலஸச்சூலிகாம்
ரக்தவஸ்த்ராம்
கர்ணோத்யச்சங்க பத்ராம் கடிநகுசபர
க்லாந்தகாந்தாவலக்நாம்
மாதங்கி காயத்ரி
ஓம் மாதங்க்யை வித்மஹே
ரத்னேஸ்வர்யை தீமஹி
தன்னோ மாதங்கி ப்ரசோதயாத்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum