Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


வலிப்பு நோய் நீக்கியருளும் வில்வ நாயகன்

Go down

வலிப்பு நோய் நீக்கியருளும் வில்வ நாயகன் Empty வலிப்பு நோய் நீக்கியருளும் வில்வ நாயகன்

Post by oviya Sun Dec 07, 2014 9:16 am

பத்ரவல்லி சிறந்த சிவபக்தன். நாடாளும் அரசன். ஆனாலும் விதி வலியதல்லவா? அவன் மனைவிக்கு வலிப்பு நோய். நோயால் அரசி வாட, மனைவியின் நிலை கண்டு நிலைகுலைந்து போனான், மன்னன். திசையெங்கும் ஆள் அனுப்பினான். அரசியின் நோய் தீர மருந்தோ, மாயமோ ஏதாவது கிடைக்காதா எனத் தவித்தான். மருத்துவர்கள் மூலிகை இலைகள் கொண்டு அரசியின் நரம்புகளுக்கு வலிவூட்டி நோய் நீக்க முயன்றார்கள். வேதியர்கள், வேள்வித்தீ அரசியின் பாவத்தை தீயாக்கி நோய் நீக்கும் என நம்பிக்கையூட்டி யாகம் வளர்த்தார்கள். ஜோதிடர்கள் கட்டங்களைப் பார்த்துக் கணக்குப் போட்டு, ‘‘மன்னா இது முன் வினைப்பயன். ஆனாலும் உங்களின் நல்ல மனசுக்கு ஆண்டவன் மனம் வைக்கப் போகிறான். அரசியின் நோய் நீங்கும் காலம் நெருங்கிவிட்டது.

வரும் பௌர்ணமிக்குள் தக்க உபாயம் உங்களுக்கு கிடைக்கும்’’ என்றார்கள். பத்ரவல்லியின் மனதில் சின்னதாய் ஒரு ஒளிக்கீற்று. வானத்தை பார்த்தான். மூன்றாம்பிறை. கயிலை நாதனின் சிரசு அவன் மனசுக்குள் மின்னி மறைய, நிம்மதியாய் உறங்கிப் போனான். நாட்கள் நகர்ந்தன. தினமும் திதியைப் பார்த்துப் பொழுதைக் கழித்தான், பத்ரவல்லி. பத்ரவல்லியின் தேசத்தில் இடையறாது காற்று மண்டலத்தை மந்திர சப்தமும் யாகப் புகையும் நிரப்பின.
‘இன்று சதுர்த்தசி. விடிந்தால் பௌர்ணமி. என்ன நடக்கப் போகிறது பார்ப்போம். துயரால் அழும் என் மனக்கிலேசத்தை துடைக்க யார் உபாயம் சொல்லப் போகிறாரோ’ என்று எண்ணியபடி உறங்கிப் போனான். மறுநாள் அந்தி சாய்ந்தது.

வானில் முழுநிலவு அமுதமயான கிரணங்களால் பூமியை குளிர்விக்கத் தொடங்கியது. இரவுப் பூக்கள் தூவிய மகரந்த மணம் சூழலை ரம்மியமாக்கினாலும் மன்னனின் மனம் துயரத்தால் துவண்டிருந்தது. எதிலும் மனம் லயிக்கவில்லை. ‘‘பக்தனை சோதித்தது போதும். பத்ரவல்லிக்கு தக்க உபாயம் கூறுங்கள்’’ என தாய் மனத்தோடு கோரிக்கையை உத்தரவாக்கினாள் உமையன்னை. அரன் புன்னகைத்தான். அந்தணன் ஒருவர் அரண்மனை வாசலருகே வந்தார். ‘‘நான் காசியில் இருந்து வருகிறேன். அரசருக்கு நான் சொல்ல ஒரு செய்தி உண்டு’’ என்று சொல்ல, பத்ரவல்லி வாயிலுக்கே வந்து அந்தணரை வரவேற்று கோயில் மண்டபத்தில் அமர்த்தி, அருந்த பால் தந்து, அவர் வார்த்தைக் கேட்க ஆவலாய் கைக்கட்டி நின்றான்.

‘‘பத்ரவல்லி உனக்கு நலம் உண்டாகட்டும். உன் மனைவியின் நோய் நீங்க திருவீழிமிழலையில் சுந்தர குசாம்பிகையோடு கோயில் கொண்டிருக்கும் கல்யாணசுந்தரேஸ்வரரை சரணடைவதே தீர்வு. அத்தலத்திலுள்ள விஷ்ணு தீர்த்தத்தில் நீராடி ஒருமண்டலம் ஈசனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடு. உன் மனத்தை வாட்டும் துயர் நீங்கும்’’ என்றவர், அந்தத் தல மகிமையையும் சொல்லத் தொடங்கினார். ‘‘மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை சலந்திரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். தன் சக்ராயுதத்தை மீட்க சங்கரனிடம் வழி கேட்டார் மகாவிஷ்ணு. ‘பூலோகத்தில் வீழிச் செடிகள் அதிகமுள்ள வனத்தில் வீற்றிருக்கும் எம்மைத் தொழ, சக்ராயுதம் மீண்டும் கிடைக்கும்’ என்றார், மகாதேவன்.

அதன்படி மகாவிஷ்ணு இத்தலம் வந்து தம் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் அரனை அர்ச்சித்து வணங்கினார். 48வது நாள். பூஜையில் அமர்ந்த அனந்தன் ஆயிரம் தாமரை பூஜையை ஆரம்பித்தார். 999 மந்திரங்களைச் சொல்லி பூஜித்தவருக்கு ஆயிரமாவது மந்திரத்துக்கான மலரை எடுக்க முனைந்த போது பூவில்லை. ‘யோசிக்க நேரமில்லை. உலகையே சோதித்த ஈசன் எனக்கும் தேர்வு வைக்கிறான்’ என எண்ணியவர், தன் கண்ணையே பறித்தெடுத்து ஆயிரமாவது மந்திரத்திற்கு அர்ச்சனையாக்கி பூஜிக்க, ஒளியாய் தோன்றிய ஈசன் மகாவிஷ்ணுவுக்கு சக்ராயுதம் தந்தருளினார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமிது.

காத்யாயன முனிவரின் கோரிக்கையை ஏற்று அவருக்கு மகளாய் பிறந்த பார்வதி, காத்யாயினி என்ற பெயரோடு ஈசனை மணந்த தலமும் இதுவே. ஆகவே இத்தல வழிபாடு உன் துயர் துடைக்கும்’’ என்றவர் இருகரம் உயர்த்தி ஆசி கூறி வாயில் நோக்கி நடந்தார். வானில் நிலா வட்டமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. நிலவைப் பார்த்துக் கைகூப்பியவன், உடனே தம் மனைவியோடு விஷ்ணு தீர்த்தத்தில் நீராடி வழிபாட்டைத் தொடர்ந்தான். ஒருமண்டல வழிபாட்டுக்குப் பிறகு அரசியின் நோய் முற்றிலும் நீங்கிப் போனது. தன் மனைவியின் வலிப்பு நோய் நீக்கி, தன் மனத்துயரைத் துடைத்த ஈசனுக்கு நன்றியாய் ஏதேனும் செய்ய விரும்பினான்.

‘பத்ரவல்லி. பரமனுக்கு ஒரு கோயில் கட்டு’ என மனசு சொல்ல, உடனே ஆலயம் அமைக்க உத்தரவிட்டான். அதன்படி அழகியதோர் ஆலயம் சமைந்தது. பத்ரவல்லி கட்டிய கோயில் என்பதால் பத்ரவல்லீஸ்வரர் என்ற திருநாமத்தோடு ஈசன் அருள, அன்னையின் அழகுப் பெயரும் பத்ரவல்லீயானது.
பத்ரவல்லி கட்டிய இந்தக்கோயில் திருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலையில் திருவீழிநாதர் கோயிலுக்குத் தெற்கே அமைந்துள்ளது. பல நூற்றாண்டு பழமைவாய்ந்த இத்தலம் காலப்போக்கில் மண்மூடி கிடந்தது. ஹரிகதை சொல்லி தர்மம் பரப்பியவரான பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் முப்பாட்டனார் பிரம்மஸ்ரீ சுப்ரமணிய கனபாடிகளின் கனவில் ஈசன் தோன்றி தன் ஆலயம் இங்கு மண்மூடி கிடப்பதை உணர்த்தி, வெளிப்பட்டது கடந்த நூற்றாண்டுச் சம்பவம்.


oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum