Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மங்கலம் பெருக்கும் மகாலட்சுமி தலங்கள்

Go down

மங்கலம் பெருக்கும் மகாலட்சுமி தலங்கள் Empty மங்கலம் பெருக்கும் மகாலட்சுமி தலங்கள்

Post by oviya Thu Dec 11, 2014 1:59 pm

மகாலட்சுமியால்தான் தீபாவளியே ஏற்பட்டது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மூலம் ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமான சத்யபாமாவால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டான். நரகாசுரனும், ‘‘நான் இறந்த இந்த நாளை எல்லோரும் தீபாவளித் திருநாளாக கொண்டாட வேண்டுமென’’ வேண்டிக் கொண்டான். இதனால், அசுரன் வதம் செய்யப்பட்டான் என்பதைவிட, பெரிய வரம் பெற்றான் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இத்தனை நாளும் நரகாசுரனை அகங்காரம் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. அதை மகாலட்சுமித் தாயார் கருணையோடு வெட்டி எறிந்தாள்.

அந்தக் கணமே தான் இந்த உடம்பல்ல என்கிற தேகாபிமானத்தையும், அகங்காரத்தையும் நரகாசுரன் இழந்து பரமாத்ம சொரூபத்தோடு ஒன்றினான். தான் எய்திய இந்த பிரம்மானந் தத்தை உலகமே கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து தீபங்கள் ஏற்றி புத்தாடைகள் அணிந்து கொண்டு மகாலட்சுமியை உளமாற பிரார்த்திக்க வேண்டும். தீபாவளியன்று நிறைய தீபங்களை ஏற்றி வைத்து பூஜிக்க செல்வ வளம் பெருகும் என்பதை, ‘‘நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன் ச்ரியமச்சனுதே தீபைர் நிராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸ்ம்ருதா’’ எனும் வரிகள் கூறுகின்றன.

தீபாவளியன்று தலைக்குத் தேய்க்கும் எண்ணெயில் மகாலட்சுமியும், குளிக்கும் வெந்நீரில் கங்கையும் வாசம் செய்கிறார்கள் என்பதை, ‘‘தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவளிதினே வஸேத்’’ எனும் வரிகள் உறுதிப்படுத்துகின்றன. தீபாவளியன்று மகாலக்ஷ்மியை தியானித்து வணங்க சித்தத்தில் தெளிவும், லௌகீக வாழ்வின் வளங்களும், ஞான மார்க்கத்தில் ஈடுபாடும் நிச்சயம் உண்டாகும். மகாலட்சுமிக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதும் விசேஷமாகும். அப்படிப்பட்ட வில்வம் உருவாகியதே மகாலட்சுமியின் தியானத்தால்தான். திருலோக்கி எனும் தலத்தில்தான். எனவே, அத்தலத்தை முதலாக்கி வேறு சில மகாலட்சுமி தலங்களையும் இப்புனித நாளில் தரிசிப்போம்.

திருலோக்கி

பாற்கடல் பரந்தாமனின் திருமார்பில் நிரந்தரமாக தான் உறைய வேண்டும் எனும் பேரவா கொண்டாள் மஹாலட்சுமி. உடனே முப்பத்து முக்கோடி தேவர்களும் சர்வ சாதாரணமாக வந்து செல்லும் த்ரைலோகியை அடைந்தாள். அத்தலத்தில் உறையும் த்ரைலோக்ய சுந்தரன் என்ற கல்யாணசுந்தரேஸ்வரரை வேண்டி அத்தலத்திலேயே அமர்ந்தாள். ஈசனை எவ்வாறு பூஜிப்பது? மானசீகமான பூஜையை விட ஏதேனும் புஷ்பங்களால் அர்ச்சிக்கலாமா? ஆனால், புஷ்பங்கள், அர்ச்சனை முடிவதற்குள் வாடிவிட்டால்? தன் பக்தியை வேறு எவ்வாறு வெளிப்படுத்துவது? அந்தப் பிரதேசத்தில் இருந்த பட்ட மரம் ஒன்றின் கீழ் அமர்ந்து யோசித்தாள்.

சட்டென்று அவளுக்குள் ஒரு சிந்தனைக் கீற்று வெளிப்பட்டது. தான் எதை உயர்வாக நினைத்திருக்கிறோமோ அதைத் தியாகம் செய்வதைப் போல வேறு ஆத்மார்த்த வழிபாடு இருக்க முடியுமா? தன் உயிர் திரட்சியாக விளங்கும் பிராணனைக் கொண்டு ஈசனை வழிபட்டாள். அந்தப் பிராணன் இடகலை, பிங்கலை, சுழிமுனை என்று மூன்றாகப் பிரிந்து ஈசனை அடைந்தது. மஹாலட்சுமி மட்டிலாது மகிழ்ச்சி கொண்டாள். அதே சமயம் வேறொரு ஆச்சரியமும் அங்கே நிகழ்ந்தது. அவள் அமர்ந்த மரம் துளிர்க்கத் துவங்கியது. பசுமை பூண்டது.

திருமகளிடமிருந்து வெளிப்பட்ட பேராற்றல் மிகுந்த பிராண சக்தி மூவிதழாகப் பிரிந்தது. சிறு இலை வடிவம் கொண்டது. தனித்தனியாக ஆனால், ,மூன்றும் சிறு காம்பின் மூலம் இணைந்தன. அவள் தவத்தில் இன்னும் ஆழ்ந்து சென்றதால் இலைகள் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாகப் பெருகின. இடையறாத தியான அதிர்வுகளாலும், பக்தி வெம்மையாலும் அந்த மூவிலைகளும் மழையாக மாறி சிலிர்த்துக் கொட்டின. அதன் வாசமும், ஈசனின் சாந்நித்தியமும் அவ்விடத்தை நிறைத்தன. விஸ்வம் எனும் பிரபஞ்சத்தையே அசைக்கும் ஈசனுக்குரியதாக அந்த இலைகள் இருந்ததால் வில்வம் எனும் பெயர் பெற்றது.

ஈசனுக்குச் செய்யும் பூஜையில் ரத்னம்போல தனித்தன்மை பெற்றது. மஹாலட்சுமியின் சொரூபமாக அந்த மூவிலைகளும் விளங்கின. தொடர்ந்து தவம் புரிந்து வில்வ இலைகளால் ஈசனை அர்ச்சித்தாள் மஹாலட்சுமி. வைகுந்த வாசன் த்ரைலோகி எனும் அந்தத் தலத்திலே சயனக் கோலத்தில் ஒயிலாகக் கிடந்தார். திருமகளை தன்னிலிருந்து எப்போதும் பிரியாத வண்ணம் தம் திருமார்பில் பெருங்கருணை கொண்டு சேர்த்துக் கொண்டார்.

இவ்வாறு திருமகள் எம்பெருமானோடு இணைந்த வைபவமும், வில்வம் எனும் புனித இலைகள் உருவெடுத்ததும் இத்தலத்தில்தான். வில்வமரம் பூரண லட்சுமி கடாட்சம் மிகுந்ததாகும். வில்வப் பழத்திற்கு ஸ்ரீபலம் என்கிற பெயரே உண்டு. திருமகள் தவம் செய்தமையால் இத்தலம் ஸ்ரீபுரம் என்று அழைக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று காவிரிக்கரையோரமுள்ள அரிதான இத்தலத்திற்கு இயன்றவர்கள் சென்று வரலாம். கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆடுதுறையிலிருந்து சூரியனார் கோயில், கஞ்சனூர் வழியாக தனி வாகனம் வைத்துக்கொண்டு செல்லலாம்.

சென்னை - மயிலாப்பூர்

சென்னை-மயிலாப்பூரிலுள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தனிச் சந்நதியில் மயூரவல்லித் தாயார் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு எழுந்தருளியிருக்கும் மகாலட்சுமிக்கு வில்வ தளங்களைக் கொண்டு அர்ச்சித்தால் தாயாரின் பூரண அருள் கிட்டும். மயூரவல்லித் தாயாரின் மேலிரு கரங்கள் தாமரை மலர்களைத் தாங்க, கீழிரு கரங்கள் அபய-வரத ஹஸ்தமாக மிளிர்கின்றன. வெள்ளிக்கிழமை அன்று மயூரவல்லித் தாயார் சந்நதிக்கு வந்து சந்நதியின் கதவில் மணிக்கட்டி பிரார்த்தனை செய்து கொண்டு, வில்வார்ச்சனை செய்து வழிபட்டு வேண்டும் வரம் பெறலாம்.

திருநின்றியூர்

திருமாலின் திருமார்பினில் நீங்காதிருக்கும் வரம் பெற்ற லட்சுமிதேவி இங்கு ஈசனைப் பூஜித்து பேறு பெற்றிருக்கிறாள். கருவறைக்குள் மகாலட்சுமீஸ்வரர் என்கிற திருப்பெயரோடு ஈசன் ருத்ராட்சப் பந்தலின் கீழ் அருள்பாலிக்கிறார். தேவாதி தேவர்கள் நித்தமும் வந்து இந்த பெருமானைத் தொழுகிறார்கள். வழக்கமான தேவகோஷ்ட மூர்த்தங்களோடு மகாவிஷ்ணுவும், கஜலட்சுமியும் தனி அழகோடு காட்சியளிக்கின்றனர். நீலி மலர்ப் பொய்கை லட்சுமி தீர்த்தமாகவும், விளா மரம் தல விருட்சமாகவும் விளங்குகின்றன.

அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்த தலம் இது. ஏனெனில், அனுஷத்திற்கு அதிதேவதையே மகாலட்சுமிதான். செல்வச் செழிப்பு உண்டாக லட்சுமி ஹோமம் நடத்தப்படுகின்றது. தாமரை இதழில் தேனூற்றி ஹோம அக்னியில் இட்டு யாகங்கள் செய்யப்படுகின்றன. மயிலாடுதுறை வட்டத்தில், சீர்காழி- மயிலாடுதுறை பேருந்து சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

திருத்தங்கல்

ஸ்ரீதேவி எனும் மகாலட்சுமி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு ‘தானே மற்ற தேவியரை காட்டிலும் சிறந்தவள்’ என்று நிரூபிக்க தங்காலமலை எனும் திருத்தங்கலுக்கு வந்து தவமியற்றினாள். செங்கமல நாச்சியார் எனும் திருநாமத்தோடு இத்தலத்தில் திருமகள் தங்கியதால் திருத்தங்கல் என்றாயிற்று. பெருமாளும் திருமகளின் தவத்திற்கு மெச்சி ஏற்றுக் கொண்டார். நின்ற கோலத்தில் நாராயணன் அருளும் தலம் இது. திருத்தங்காலப்பன் எனும் திருப்பெயரும் பெருமாளுக்கு உண்டு. இத்தல தாயாருக்கோ செங்கமலத் தாயார், கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்த நாயகி, அமிர்த நாயகி
என்று பல்வேறு திருப்பெயர்கள்! நூற்றியெட்டு திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. விருதுநகருக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.

மாமாகுடி

ஸ்ரீ மகாலட்சுமி அவதரித்த தலமாக இதைத்தான் குறிப்பிடு கின்றனர். திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கிலும், ஆக்கூருக்கு அருகேயும் இத்தலம் அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் இத்தலத்தை லட்சுமிபுரம், திருமால்மாகுடி என்றெல்லாம் அழைத்தனர். மிகவும் அரிய ஆலயமாக இருப்பதால் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. பிறந்த வீட்டின் மீது மகள் பரிவு கொள்ளாதிருப்பாளா? அதுபோல இந்தத் தலத்தில் அவதரித்த மஹாலட்சுமி, தன் பக்தர்களை மிகுந்த வாஞ்சையுடன் பரிபாலிக்கிறாள். மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் வழியிலுள்ள ஆக்கூரிலிருந்து இத்தலத்தை அடையலாம்.

திருச்சானூர்

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீவெங்கடாஜலபதி திருமலையிலும், கீழ்த் திருப்பதியில் பத்மாவதி தாயாரும் பேரருள் பெருக்கி அமர்ந்திருக்கின்றனர். வைகுண்டத்தில் நாராயணனின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவி! தன் மார்பை எட்டி உதைத்த பிருகு முனிவரை மன்னித்த திருமால் மீது கோபம் கொண்ட திருமகள் அவரை விட்டு நீங்கி பூவுலகம் வர, அவளை சமாதானப்படுத்தி அழைத்து வர நாராயணனும் புறப்பட்டு வந்தார். மகாலட்சுமி சந்திர வம்சத்தைச் சேர்ந்த ஆகாசராஜன் எனும் மன்னன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பெண் மகவாகத் தோன்றி, பத்மாவதி எனும் பெயருடன் வளர்ந்தாள்.

தக்க பருவத்தில் பத்மாவதி-ஸ்ரீனிவாசன் திருமணமும் ஏற்பாடானது. பொருள் இல்லாததால் திருமணச் செலவிற்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளைக் கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீனிவாசன். திருமணம் சிறப்பாக நடந்தேறியது. மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாகவும் புராணம் தெரிவிக்கிறது. மகாலட்சுமியான பத்மாவதியைத் தரிசிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அளிக்குமாறு வேங்கடவன் ஆணையிட்டுள்ளார்.

அரசர்கோயில்

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள அரசர்கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தரமகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது குறிப்பிடத்தக்க அதிசயம். ஒரு முறை ஜனக மகாராஜாவும், பெருமாளும் இத்தலத்தில் சேர்ந்திருக்க நேரிட்டதால் இத்தலம் அரசர்கோயில் என்றானதாம். கற்பூர ஆரத்தி காட்டி, தாயாரின் வலது பாதத்தை தரிசிக்கும் வாய்ப்பை வழங்குகிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம்.

அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம். அன்னைக்குப் பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் அவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாக தருகிறார்கள். செங்கல்பட்டு-மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது அரசர்கோயில்.

தலைச்சங்காடு

இத்தலம், தலைச்சங்க நாண் மதியம் என்கிற தலைச்சங்காடு ஆகும். தலைச்சங்க நாச்சியார் என்றழைக்கப்படும் இத்தல தாயார் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். பொதுவாக அமர்ந்த கோலத்தில் தாயார் அருள்பாலிக்கும் தலங்கள்தான் அதிகம். ஆகவே, இந்த வகையில் இந்தத் தலம் முக்கியத்துவம் வாய்ந்தது. தன் குழந்தைக்கு ஏதேனும் சோதனை என்றால் தாய் பரிதவித்து ஓடோடி வருவதுபோல, அப்போதும் பக்தர் நலன் காக்க ஓடிவரத் தயாராக நின்றிருக்கிறாள் நாச்சியார். மாயவரம்-சீர்காழி பாதையில் அமைந்திருக்கிறது இந்தத் தலம்.

உத்தமர் கோயில்

பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவன் கொய்ததால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அவருடைய தோஷத்தை காசியிலுள்ள அன்னபூரணி நீக்கினாள். அதே தலவரலாறு உத்தமர்கோயிலிலும் சொல்லப்படுகிறது. உத்தமர்கோயிலிலுள்ள மகாலட்சுமித் தாயாரிடம்தான் ஈசன் பிட்சையை ஏற்றார். இவ்வாறு திருமகளே பிட்சையிட்டதால் இத்தல தாயாருக்கு பூரண வல்லித் தாயார் என்கிற திருநாமம் ஏற்பட்டது. அதாவது, சிவனது பாத்திரம் பூரணமாகி விட்டதால் பூரணியாக, பூரணவல்லித் தாயார் என்றும் அழைத்தனர். தாயாரை உளமாற வழிபட்டால், பஞ்சம், பட்டினி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. திருச்சி - ஸ்ரீரங்கத்துக்கு 5 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில்.

காசியில் மகாலட்சுமி பீடம்

காசியில் மரித்தால் முக்தி கிட்டும் என்பது விஸ்வநாதரின் வேத வாக்கு. அதனாலேயே இன்று வயதானவர்கள் காசியையே இறுதிப் புகலிடமாகக் கொண்டு, நிறைவாக முக்தியை அடைவர். இந்தக் காசியில் மகாலட்சுமி பீடம் உள்ளது. இங்குள்ள சித்தலட்சுமி ஆலயம் தாமரை வடிவில் இருந்ததாக காசி காண்டம் கூறுகிறது. அருகேயே லட்சுமி குண்டம் அமைந்துள்ளது. வாரணாசியில் மகாலட்சுமியால் பூஜிக்கப்பட்ட லிங்கம் மகாலட்சுமீஸ்வரர் எனும் திருப்பெயரோடு இன்றும் விளங்குகிறது. தீபாவளியன்று காசிக் கங்கையில் ஸ்நானம் என்பதே விசேஷமாகும். அதிலும், மகாலட்சுமீஸ்வரரை தரிசிப்பதென்பது இன்னும் விசேஷமாகும்.

மங்களகிரி

பெருமாளின் திருமார்பில் உறையும் லட்சுமிக்கு யோக லட்சுமி என்று பெயர். இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி மற்றும் வீரலட்சுமி என்று பெயர். ஸ்ரீலட்சுமி என்று போற்றப்பட்டும் இந்த மகாலட்சுமி, எளிமையான தவக் கோலத்தில் அருள்பாலித்தாலும், தன் பக்தர்களின் வளமான வாழ்க்கைக்கு அச்சாரம் தருகிறாள். ஆந்திர மாநிலத்திலுள்ள மங்களகிரி எனும் தலத்தில் இந்த ஸ்ரீலட்சுமியை தரிசிக்கலாம்.

கொற்கை

சிவபெருமான் மீது மலர்க்கணை தொடுத்தான் மன்மதன். அதனால் ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை உயிர்ப்பித்துத் தரவேண்டி ரதிதேவி மகாலட்சுமியை வேண்டினாள். ரதிக்கு உதவுவதற்காக மகாலட்சுமி இத்தல ஈசனுக்கு வழிபாடுகள் செய்தார். ஈசனும் மனம் குளிர, மன்மதன் உயிர்பெற்றான். மகாலட்சுமி இவ்வாறு வழிபட்ட லிங்கம் லட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. நீண்ட ஆயுளும், செல்வமும் வேண்டுவோர் இத்தல ஈசனை வழிபட்டு பயனடைகின்றனர். மயிலாடுதுறை - மணல்மேடு சாலையிலுள்ள கொண்டல் என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருப்பத்தூர்

சிவபெருமான் எத்தனையோ அடியார்களுக்காக தனது திருத்தாண்டவத்தினை காட்டியருளினார். அந்த வகையில் திருமகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் திருத்தாண்டவம் புரிந்தார். இந்த தாண்டவத்திற்கு லட்சுமி தாண்டவம் என்று பெயர். இந்த அரும்பெருங் காட்சியை கண்ட திருமகள் இத்தல ஈசனைப் போற்றி வணங்கி பூசித்தாள். எனவே, இங்குள்ள தீர்த்தத்திற்கு ஸ்ரீ தீர்த்தம் என்று பெயர். இந்தத் தீர்த்தத்தில் சில துளி நீர் சிரசில் பட்டால், ஈசனின் அருட்கருணை மஹாலட்சுமியின் அருளால் எளிதாகக் கிட்டும். இத்தலம் காரைக்குடிக்கு அருகே உள்ளது.

நரசிங்கபுரம்

மூலவராக லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்தில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறார். வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து வைத்திருக்கிறார். தாயார் மகாலட்சுமியை மடியில் அமர்த்தி இடது கையால் அரவணைத்திருக்கிறார். வலது கரம் அபய ஹஸ்தம் காட்டுகிறது. தாயார் நேரடியாக பக்தர்களை பார்க்கும்படியாக அமைந்திருப்பது சிறப்பு. இதுதவிர தனிச் சந்நதியில் மரகதவல்லி எனும் திருப்பெயரோடு தாயார் அருள்கிறாள். பிராகாரச் சுற்றிலேயே ஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, வீர லட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, தன லட்சுமி என்று அஷ்ட லட்சுமிகளையும் தரிசிக்கலாம்; அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகக் காணலாம். பூவிருந்தவல்லியிலிருந்து தக்கோலம் செல்லும் பாதையில் இத்தலம் அமைந்துள்ளது.

பேளூர் கரடிப்பட்டி

கரடிப்பட்டியில் லட்சுமி நாராயணப் பெருமாளின் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அஷ்ட லட்சுமிகளின் பளிங்குச் சிலைகள் கண்களையும் மனதையும் கவர்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டவை இச்சிலைகள். செவ்வக வடிவிலான மகா மண்டபத்தைச் சுற்றிலும் தனித் தனி சந்நதிகளில் இவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு லட்சுமியும் அவரவர்க்குரிய திக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்கள். மூலவர் லட்சுமி நாராயணர், தனது மடியில் மகாலட்சுமியை அமர வைத்திருக்கும் கோலம் கொள்ளை அழகு! எந்த திக்கிலிருந்தும் துயரம் தீண்டிவிடாதபடி அஷ்ட லட்சுமிகள் பக்தர்களைக் காக்கிறார்கள். சேலம் மாவட்டம், வாழப்பாடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருச்சி

திருச்சி ரயில் நிலையத்துக்கு அருகில் காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தப் பெருமாள் கோயிலில் பிரதோஷ பூஜை மேற்கொள்ளப்படுவது தனிச் சிறப்பாகும். கருவறையில் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் மகாலட்சுமியை தனது இடப்பாக மடியில் அமர வைத்து ஆலிங்கன நிலையில் அருள்பாலிக்கிறார். வலது கையால் அபய ஹஸ்தம் காட்டி அருள்கிறார். தன் பக்தர்களின் தோஷங்களையெல்லாம் விரட்டும் தாயார் இவர்.

ராம்பாக்கம்

கருவறையில் பிரதான நாயகர் லட்சுமி நாராயணப் பெருமாள் கம்பீரமாக வீற்றிருக்கிறார். ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் லட்சுமி தேவியை மடியில் அமர்த்தி, வலது கையில் சக்கரமும், இடது கையில் திருச்சங்கும் இன்னொரு கரத்தால் வரத ஹஸ்தத்தோடு, மற்றுமொரு திருக்கரத்தால் லட்சுமியை அணைத்தவாறு காட்சி தருகிறார். பெருமாள் தாமரைப்பீடத்தில் அமர்ந்திருக்க அவர் திருவடியையும் தாமரை மலரே தாங்கியிருக்கிறது. தாமரை போன்று வாழ்க்கையை நாம் மென்மையாக நடத்திச் செல்ல தாயார், பெருமாளுக்கு சிபாரிசு செய்கிறாள். கடலூர்-விழுப்புரம் பாதையில் மடுகரையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. புதுச்சேரியிலிருந்து மடுகரைக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

லால்குடி - இடையாற்று மங்கலம்

இத்தலத்தின் நாயகன், லட்சுமி நாராயணன். கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தாயாரை இடதுபக்க மடியில் அமர்த்தி சேவை சாதிக்கிறார். கணவன்-மனைவிக்கிடையேயான பிரச்னைகள் நீங்க இந்தப் பெருமாளை வணங்குகிறார்கள். திருச்சியை அடுத்த லால்குடிக்கு அருகேயே இத்தலமும் அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்காலுக்கும் இடையே இவ்வூர் அமைந்திருப்பதால் இடையாற்று மங்கலம் என்றழைக்கின்றனர். கணவன்-மனைவி ஒற்றுமைக்கு வழிகாட்டும் திருத்தலம் இது.

கீழையூர்

பஞ்சரங்க க்ஷேத்ரங்களான அரங்கனின் ஐந்து ஆலயங்களில் ஒன்று கிழக்கு அரங்கம் என்ற கீழரங்கம். அதுவே கீழையூர் என்றாயிற்று. ஸ்ரீரங்கத்தின் அபிமான தலம். கோயிலின் மகாமண்டபத்தைக் கடந்தால் வலப்புறம் தாயார் ரங்கநாயகி கொலுவீற்றிருக்கிறார். கோயிலின் வடக்கே உள்ள பத்மதடாகம் எனும் புஷ்கரணியில் எம்பெருமானை மணந்துகொள்ள தாயார் தவம் செய்தார். இவ்வூரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள திருமணங்குடியில் பெருமாளை திருமணம் செய்து கொண்டார். வாழ்க்கையில் ஏற்படும் எந்தத் துயரையும் எளிதாக நீக்கவல்லவள் இந்த ரங்கநாயகித் தாயார். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி சாலையில் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.

வரகூர்

இத்தலத்தில் லட்சுமி நாராயணர், வராக மூர்த்தி, கிருஷ்ணர் என்று மூன்று கோலங்களில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்கு நடைபெறும் உறியடி உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றது. கருவறையில் லட்சுமி நாராயணர் பத்ம விமானத்தின் கீழே இடது திருத்தொடையில் மகாலட்சுமியை அமர்த்தி சேவை சாதிக்கிறார். லட்சுமி நாராயணரையே கிருஷ்ணராக பாவித்து வணங்குகின்றனர். நாராயண தீர்த்தருக்கு இந்த லட்சுமி நாராயணரே நேரடியாக பாமா- ருக்மிணி சமேத கிருஷ்ணராக தரிசனம் கொடுத்தார். அவரும் கிருஷ்ண லீலா தரங்கிணியை இயற்றினார். இக்கோயிலில் துளசி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், சாதிக்காய், கிராம்பு உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து இடித்த பொடியை பிரசாதமாகத் தருகிறார்கள். தன் பக்தர்களை எந்த நோயும் அண்டாதபடி பார்த்துக்கொள்கிறார் இந்த மகாலட்சுமி. தஞ்சைக்கு அருகேயே இத்தலம் அமைந்துள்ளது இக்கோயில்.

தாளக்கரை

நின்ற கோலத்தில் லட்சுமி அருள்பாலிக்கும் தலம். மகாலட்சுமியோடு பாற்கடலிலிருந்து வெளிப்பட்டவன்தான் சந்திரன். இத்தலத்தில் சகோதர முறை கொண்ட சந்திரனே சுவாமிக்கு விமானமாக இருப்பது தனிச் சிறப்பு வாய்ந்தது. கருவறையில் மூலவராக நரசிம்மர் கையில் சங்கு, சக்ரத்துடன் சாந்த மூர்த்தியாகவும், மகாலட்சுமியுடன் சேர்ந்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் கோலத்தை வேறெங்கும் தரிசிக்க முடியாது. நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது. சந்திர தோஷம் உள்ளோர் வாழ்க்கையை தாயார் சீர்படுத்துகிறாள். கோவையிலிருந்து 53 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

திருவாலி

மகாலட்சுமியோடு பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு லட்சுமி நரசிம்ம க்ஷேத்ரம் என்றே பெயர். திருமங்கையாழ்வாருக்கு அருள்பாலிக்க வேண்டுமென்று லட்சுமி தேவி, பெருமாளை இடைவிடாது வேண்டினாள். லட்சுமியும் திருவாலியில் தவமியற்றும் பூர்ண மகரிஷிக்கு மகளாக அவதரித்தாள். பெருமாளை லட்சுமி தேவி மணம் புரிந்து வரும்போது திருமங்கை மன்னன் வழிப்பறி செய்ய, அவரது காதில் பெருமாள் அஷ்டாட்சர மந்திரத்தை கூறி ஆட்கொண்டார். மூலவராக இருக்கும் நரசிம்மர் லட்சுமியாகிய திருவை ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பதால் திரு ஆலிங்கன ஊர் என்று அழைக்கப்பட்டு இப்போது திருவாலி என்று மருவியிருக்கிறது. நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம், சீர்காழிக்கு அருகேயுள்ளது.

கூடலூர்

இது கூடல் அழகிய பெருமாள் கோயில் ஆகும். தல விருட்சம், புளிய மரம். தாயாரின் திருநாமம் மகாலட்சுமி. கூடலழகர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். முன் மண்டபத்தில் மகாலட்சுமி, கையில் வெண்ணெயுடன் நவநீத கிருஷ்ணர் போன்றோர் உள்ளனர். முன் மண்டப மேற்சுவர், ராசி சக்கரம், இதன் மத்தியில் மகாலட்சுமி என துலங்குகிறது. கருவறையில் கூடல் அழகிய பெருமாள் நின்ற கோலத்தில் தாயார்களோடு சேவை சாதிக்கிறார். எல்லா ராசிக்காரர்களுக்கும் ஏற்றம் தரும் இனிய கோயில் இது. இத்தலம் தேனிக்கு அருகே உள்ளது.

திருநின்றவூர்

மகாவிஷ்ணுவிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு திரு என்கிற மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் இத்தலம் திருநின்றவூர் என்றானது. சமுத்திர ராஜனே சமாதானமாக ‘என்னைப் பெற்ற தாயே’ என்று இறைஞ்சி வேண்டிக் கொண்டதாலேயே இவளுக்கு இத்தலத்தில் என்னைப் பெற்ற தாயார் எனும் திருப்பெயர். குபேரன் தன் நிதியை இழந்து இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டதாலேயே மீண்டும் பெரும் நிதியை அடைந்தான். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் தெய்வத் தாயின் கருணையை அமானுஷ்யமாக உணரலாம்.
சென்னை - திருவள்ளூர் பாதையில் இத்தலம் அமைந்துள்ளது.

திருக்கண்ணமங்கை

நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்று. மூலவர், பக்தவத்சலப் பெருமாள். இத்தலத்தில் திருமாலுக்கும் திருமகளான மகாலட்சுமிக்கும் நடந்த திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டேயிருந்தார்கள். நெரிசல் அதிகரித்ததால் அவர்கள் தேனீக்களாக மாறி, மேலும் பல லட்சம் தேவர்களுக்கு இடம் கொடுத்தனர். திருமணம் கண்ட பிறகும் கூடு கட்டிக்கொண்டு இன்றளவும் தாயாரையும் பெருமாளையும் தரிசித்தபடி இருக்கிறார்கள்! பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட மகாலட்சுமி முதலில் பெருமாளின் அழகிய திருமுகத்தை கண்டாள்.

அதை உள்ளத்தில் நிறுத்தி இத்தல நாயகனையே திருமணம் செய்ய வேண்டுமென்று இங்கு வந்து தவமியற்றினாள். பெருமாளே பாற்கடலை விட்டு இங்கு வந்து மகாலட்சுமியை மணம் புரிந்ததால் பெரும்புறக் கடல் என்கிற திருநாமமும் பெரு மாளுக்கு உண்டு. மேலும், இந்த க்ஷேத்ரத்திற்கே லட்சுமி வனம் எனும் திருப்பெயர் உண்டு. பஞ்ச கிருஷ்ண தலங்களில் இதுவும் ஒன்று. இமை கண்ணைக் காப்பதுபோல தன் பக்தர்களைக் காக்கும் தாய், இந்தத் தாயார். திருவாரூருக்கு அருகேயுள்ளது திருக்கண்ணமங்கை.

திண்டிவனம்

இத்தலத்தில் நரசிம்மரின் உக்கிரம் தணிய வேண்டி தாயாராகிய லட்சுமி அவரை வணங்கிய நிலையில் நிற்கிறார். மிகவும் அபூர்வமான காட்சி இது. மூலவராக லட்சுமி நரசிங்கப் பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்குள்ள அனுமன் சங்கு சக்ரம் ஏந்தி நான்கு திருக்கரங்களோடு அருள்பாலிக்கிறார். நான்கு அரக்கர்களை வதம் செய்வதற்காக பெருமாளே அனுமனை அனுப்பினாராம்! கடன் தொல்லைகளை விரட்டியடிக்கும் பேரருள் புரிகிறாள் தாயார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே திண்டிவனம் அமைந்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum